ஊரே என் நந்தவனம்... வீடே என் தோட்டம்!
எங்கே போயிற்று கொல்லைப்புறத்து அழகிய தோட்டம்? இந்த தலைமுறையைச் சேர்ந்த பலருக்குக் கொல்லைப்புறத்து தோட்டம் என்றால் என்ன என்றுகூட தெரியாது. காரணம் அடுக்குமாடிக் குடியிருப்பு கலாசாரம் பெருகிவரும் இந்தக்


எங்கே போயிற்று கொல்லைப்புறத்து அழகிய தோட்டம்? இந்த தலைமுறையைச் சேர்ந்த பலருக்குக் கொல்லைப்புறத்து தோட்டம் என்றால் என்ன என்றுகூட தெரியாது. காரணம் அடுக்குமாடிக் குடியிருப்பு கலாசாரம் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் நமக்கு தெரிந்ததெல்லாம் குடியிருக்க தீப்பெட்டி அளவுக்கு ஒரு வீடு மட்டுமே! உண்பதற்கு வாயில் கூட நுழையாத பெயர்கொண்ட மேற்கத்திய கலாசார உணவுகள்...
வீட்டுக்கு ஒரு மரம் கூட வேண்டாம், செடி கூட வளர்க்க முடியாத நாம் எங்கிருந்து தோட்டம் போடுவது?
இப்படிப்பட்ட ஓட்டத்திற்கிடையே வீட்டில் திரும்பிய இடமெல்லாம் பல்வேறு செடிகள், கொடிகள், வீட்டு பால்கனியை பல கனி கொடுக்கும் மரங்கள் கொண்ட சோலையாக்கியிருக்கிறார் ஒரு பெண்மணி என்றால் ஆச்சரியமான விஷயம்தானே! அவர், கோவை ரேஸ்கோர்ஸ் ஜஸ்டிஸ் சத்தியதேவ் என்கிளேவைச் சேர்ந்த ஸ்ரீ. இவர் ஒரு கட்டடக் கலை நிபுணர், ஓவியர், எழுத்தாளர், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னைச் சுற்றுச் சூழல் ஆர்வலர் என்று கூறிக் கொள்வதையே விரும்புகிறார். "வம்சவிருக்ஷா' என்ற அமைப்பின் மூலம் பசுமைப் புரட்சிக்குப் போராடி வரும் ஸ்ரீ, தன்னுடைய பெயரைப் போலவே சுருக்கமாக
நம்மிடம் பேசியதிலிருந்து...
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உங்கள் பங்கு என்ன?
எனக்கு மட்டும் அதில் பங்கு இல்லை. நம் அனைவருக்கும், 100 கோடி மக்களுக்கும் இருக்கிறது. கோவையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் பல நூறு மரங்களை நட்டுள்ளோம். தினமும் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறோம். ஊரகப்பகுதிகளில் உள்ள உடைந்த குளங்களின் கரைகளைச் சீரமைத்து, மரங்களை நட்டு வைத்திருக்கிறோம். பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு மரம் வளர்ப்பதன் அவசியத்தை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் ஒவ்வொருவருக்கும் மரக்கன்று வழங்குகிறேன். நான் பங்கேற்கும் அனைத்து விழாக்களிலும் மரக்கன்றை பரிசாக வழங்குகிறேன்.
மற்ற சூழல் ஆர்வலர்களுக்கும் உங்களுக்கும் என்ன
வித்தியாசம் ?
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மரம் உள்ளது. அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் எல்லா ராசிக்கும் உகந்த மரத்தை நட்டு வளர்க்கிறேன். இவைகள் ஸ்தலவிருட்சங்கள் என அழைக்கப்படுபவை. அழிவின் விளிம்பில் இருக்கும் மரங்கள் இவை. வளரும் தட்ப வெப்பநிலை, குறைந்த நீரில் வளரும் மரவகைகள் போன்றவற்றை ஆய்வுக்கூடங்கள் மூலம் அறிந்துகொண்டு. அவற்றின் விதைகளைச் சேகரித்து, நாற்றுகள் வளர்த்து அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறேன். நம் மாநிலத்தில் அதிகளவில் இல்லாத மரங்களை ஆந்திரா, கர்நாடகா, கேரளா என அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து அவற்றையும் வளர்த்து வருகிறேன்.
என்னென்ன வகையான மரங்களை வளர்க்கிறீர்கள்? எந்த வகை மருத்துவ குணமுடையவை?
இந்தியப் பாரம்பரிய மரங்களை நடுகிறேன். கடம்பா, நீர் மத்தி, சந்தன வேம்பு, சராக்கா, அசோகா, மலையன் ஆப்பிள் உள்ளிட்ட மரங்களை வளர்க்கிறேன். இதில் சராக்கா காற்றைச் சுத்திகரிக்கும் தன்மை உடையது. இந்த மரத்தின் காற்று பெண்களின் கர்ப்பப்பை பிரச்னைகளைத் தீர்க்கும். மலையன் ஆப்பிள் கிளைகளை எளிதில் உடைக்க முடியாது. இடத்தை அடைக்காது. வேர்கள் அருகில் பரவாது. கட்டடங்களைச் சேதப்படுத்தாது.
இந்த மரங்களைச் சாலையின் நடுவில் வளர்க்கலாம். மலையன்ஆப்பிள் பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கும். இவை இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை குணப்படுத்தும். மேலும் நம் நாட்டு மரங்களில் மட்டும்தான் பறவைகள் கூடுகட்டி வாழும், இவ்வகை மரங்கள், போக்குவரத்து நிரம்பிய சாலைகளில் எழும் வாகனப் புகை மற்றும் இரைச்சலைக் கட்டுப்படுத்தும்.
இந்த ஆண்டில் உங்கள் திட்டங்கள் என்ன?
புவி வெப்பமடைவதைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கின்றது. சட்டங்களை இயற்றுகிறது. அந்த முயற்சிகளோடு, ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன். சாலைகளின் நடுவே பனைமரம், ஈச்சமரம், நாட்டு நாவல், தானிக்காய், கடுக்காய், பூங்கங்கா மரங்களை நட திட்டம் தயார் செய்து வருகிறேன். சம்பந்தப்பட்ட துறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளேன்.
பூச்செடிகளுக்குப் பதிலாக இவற்றை நட்டால் காலப்போக்கில் இவற்றில் இருந்து காய்க்கும் மருத்துவ குணமுடைய பழங்களை விற்பனை செய்வதன் மூலம், அரசுக்கு நிரந்தர வருமானத்துக்கும் வழி பிறக்கும். ஊரும் அழகாகும் நகரப்பகுதிகளில் பார்ப்பதற்கு அரிதாக உள்ள பனை, ஈச்சமரங்கள் சாலையின் அழகையும் மேம்படுத்தும்.
உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பொருளாதார உதவிகள் கிடைக்கிறதா?
இதுவரை நான் எனது சொந்தப் பணத்தை மட்டும்தான் செலவு செய்துள்ளேன். இது நான் வாழும் சூழல், இதைக் காப்பதற்கு எனது கடமையைச் செய்கிறேன். புவி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. ஆனால் பெரும்பாலானோர் தங்கள் வீட்டு வளாகத்தில் ஒரு மரத்தை நட்டு வளர்ப்பதில்லை. 100கோடி பேரில் 50 சதவீதத்தினர் ஆளுக்கு ஒரு மரம் நட்டால் கூட அழிவின் காலத்தை தள்ளிப்போடலாம். அடுத்த தலைமுறைக்கு மரம் நடுவது வேறு விஷயம், முதலில் நம் தலைமுறையையே பாதுகாத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை மக்களுக்கு வலியுறுத்தி வருகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...