இசைக் கண்களைத் திறக்கிறேன்!
இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு என எந்தக் குறையுமில்லாமல், வசதிகள் எல்லாம் இருந்தும் நம்மில் பலர் கலை சார்ந்த விஷயங்களிலிருந்து விலகியே இருக்கின்றனர். சராசரி மனிதர்களைப் போல் இல்லாமல், குறைபாடுகளுட


இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு என எந்தக் குறையுமில்லாமல், வசதிகள் எல்லாம் இருந்தும் நம்மில் பலர் கலை சார்ந்த விஷயங்களிலிருந்து விலகியே இருக்கின்றனர். சராசரி மனிதர்களைப் போல் இல்லாமல், குறைபாடுகளுடன் பிறந்தாலும் "குறையொன்றுமில்லை' எனக் கூறியவாறு பலர் சாதனையாளர்களாக இந்தச் சமூகத்தில் வலம் வருகின்றனர். அதில் ஒருவர்தான் இசை ஆசிரியையான டி.ஆர்.ராஜேஸ்வரி வேலு. பார்வைத் திறனற்றவரான இவர் மாணவர்களின் இசைக் கண்ணைத் திறந்து வருபவர். கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் நடந்த மகளிர் தினவிழாவில் சிறந்த சாதனையாளர் விருது பெற்றிருக்கும்
அவரிடம் நாம் பேசியதிலிருந்து...
பார்வைத் திறன் குறைபாட்டையும் மீறி நீங்கள் இதுவரை கடந்து வந்த பாதை?
கோவை, அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் 1981-ல் துவங்கப்பட்ட "இன்டகிரேடட் எஜுகேஷன் ஃபார் விஷுவலி ஹேண்டிகேப்டு' திட்டத்தில் சேர்ந்த முதல் மாணவி நான்தான். பிரெய்லி முறையில் கல்வி கற்றேன். பி.ஏ., இரு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் இசை கற்றேன். தேர்வில் பல்கலைக்கழக அளவில் இரண்டாம் மாணவியாகத் தேர்வு பெற்றேன்.
1997ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் தொலைநிலைக் கல்வி முறையில் கற்றுக் கொண்டிருந்த போதே கோவை இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றேன். இசைக் கல்லூரியின் முதல் பேட்ச் மாணவர்களில் நானும் ஒருத்தி. திறன் அடிப்படையில் சிறந்த மாணவியாக தேர்ச்சியடைந்தேன். வறுமையிலும் ஓர் இசை ஆசிரியரை நியமித்து எனது தந்தை வீட்டிலும் இசை பயிற்றுவித்தார்.
அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் டிப்ளமோ இன் மியூசிக் டிரெய்னிங் கற்றேன். பொது அறிவு புத்தகங்களை எனது தாய் வாசிக்க அதை கேட்டு மனதில் பதியவைத்துக் கொள்வேன். வானொலி, தொலைக்காட்சியில் செய்திகளை கேட்டு நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வேன். பல பொது அறிவு விஷயங்களைப் பிறர் படிக்கக் கேட்டால் போதும் மனதில் பதிந்து கொள்வேன்.
சென்னையில் உள்ள "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஹேண்டிகேப்டு' மையத்தில் சேர்ந்து பிரெய்லி முறையில் ஸ்டெனோகிராஃபி பயின்றேன். அத்துடன் தட்டச்சும் பயின்றேன். தற்போது கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.
எதற்காக உங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது?
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, பார்வையற்ற நிலையில் கல்வி மற்றும் இசையில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருதை வழங்கினார்கள். தற்போது படிக்கும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கவும் என்னை ஓர் எடுத்துக்காட்டாக முன்நிறுத்தினர். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்தவே என்னை கௌரவப்படுத்தினார்கள் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?
எனக்கு திருமணமாகி ஐந்து வயதில் மனோஜ்குமார் என்ற மகன் உள்ளார். எனது கணவருக்கு கண் பார்வை தெரியும். அவர் பெயர் வேலு. ஒரு சமூக சேவகர். தற்போது வீடியோ கிராஃபி மற்றும் போட்டோகிராஃபி தொழில் செய்து வருகிறார். புத்தகங்களை படிக்க அவர் பெரிதும் உதவுகிறார். எனது மாமியார் சமையல் வேலைகளைப் பார்த்துக்கொள்வார். மற்ற வீட்டு வேலைகளை நான் கவனித்துக் கொள்வேன்.
எந்த மாதிரியான இசையை கற்றுக்
கொடுக்கிறீர்கள்?
வாய்ப் பாட்டு, சேர்ந்திசை, தேசபக்தி பாடல்கள், சமூக சீர்திருத்தப் பாடல்கள், பக்தி பாடல்கள், நாட்டுப்புற பாட்டு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கிறேன்.
இசை ஆசிரியைப் பணியை தேர்வு
செய்யக் காரணம்?
இசை கலையின் ஒரு வடிவம். மேலும் இசை மனிதனை பண்படுத்தும் ஒரு விஷயம். தேசபக்தி பாடல்களைத் தொடர்ந்து பாடும் ஒருவர் சமூக சிந்தனை உடையவர்களாகத் திகழ்வார்கள். தீய செயல்களில் ஈடுபடாமல் விலகி நிற்பார்கள். விழிப்புணர்வுப் பாடல்களை கற்றுக் கொள்ளும் ஒருவர் சமூக குற்றங்களை எதிர்த்து அவரது படைப்புகளை அரகேற்றுவார். இப்படி சமூகத்துக்கு தேவையான விஷயங்களை நான் பாடல்கள் மூலம் போதிக்கிறேன். இதற்காக இந்த இசை ஆசிரியை பணியைத் தேர்வு செய்தேன். மேலும் இசை கற்பவர்கள் எளிதில் கோபப்படமாட்டார்கள். எதையும் பொறுமையுடன் முழு ஈடுபாட்டுடன் செய்வார்கள். இசையால் மனம் அமைதி பெறும்.
இதுவரை எத்தனை பேருக்கு இசை
பயிற்றுவித்திருக்கிறீர்கள்?
பள்ளி மற்றும் வீட்டில் பலருக்கு இசை வகுப்புகள் எடுக்கிறேன். இதுவரை கடந்த பத்தாண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இசை சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
ஏதாவது ஒரு காட்சியை குறிப்பாகப் பார்க்க முடியவில்லையே என்று வருந்தியது உண்டா?
ஊட்டிக்குச் செல்ல வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு, திருமணத்துக்குப் பிறகு என் கணவர் என்னை அழைத்துச் சென்றார். அங்குள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பூக்களின் மென்மையான இதழ்களை என் விரல்களால் வருடினேன். சிறு பறவைகளின் இசை, வண்டுகளின் ரீங்காரம், பிலம்ஸ் பழம் வாங்கிச் சாப்பிட்டது... என அந்தப் பயணத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்தக் காட்சிகளை நான் பார்க்க முடியாவிட்டாலும் என்னுடைய கணவரின் மூலம் அந்தக் காட்சிகளை உணர்ந்தேன். என் சிறுவயதுக் கனவும் நிறைவேறிவிட்டது.
நீங்கள் பாடியதில் உங்களால் மறக்க
முடியாத, பிடித்த பாடல்?
எனக்கு 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பிடிக்கும். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் பங்கேற்று "கான மூர்த்தே...' என்ற பாடலைப் பாடினேன். அந்த நிமிடங்கள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத
நிமிடங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...