கேமராவில் சிக்கிய புலி!
நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்? என்று கேட்டால் ஒரு ஒன்பதாவது படிக்கும் மாணவி என்ன சொல்வார்? டாக்டர்... என்ஜீனியர்... பேராசிரியர்... கலெக்டர்? ""இதில் எதுவுமில்லை'' என்கிறார் ஸ்வாதிசிங்.


நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்? என்று கேட்டால் ஒரு ஒன்பதாவது படிக்கும் மாணவி என்ன சொல்வார்? டாக்டர்... என்ஜீனியர்... பேராசிரியர்... கலெக்டர்? ""இதில் எதுவுமில்லை'' என்கிறார் ஸ்வாதிசிங்.
பாண்டிச்சேரி பிரிம்ரோஸ் பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் அவருக்கு ஆர்வமெல்லாம் புகைப்படக் கலையில், ஓவியத்தில்... கூடுதலாக டென்னிஸ்ஸில்.
புகைப்படக் கலையில் ஆர்வம் என்றால் நமது வீட்டிற்கு அருகில் உள்ளவர்களைப் புகைப்படம் எடுப்பது என்று நினைத்துவிடாதீர்கள். ஸ்வாதிக்குக் காட்டிற்குச் செல்ல வேண்டும். கொடிய மிருகங்களைப் படம் எடுக்க வேண்டும். அவை வரும் வரைக்கும் காட்டில் காத்துக் கிடக்க வேண்டும். அப்படிக் காத்திருந்து நிறையப் படங்களை எடுத்திருக்கிறார் ஸ்வாதி.
""ஒவ்வோராண்டும் எப்போது கோடை விடுமுறை வரும் என்று காத்துக் கொண்டிருப்பேன். வந்துவிட்டால் குடும்பத்துடன் ஏதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிடுவேன். தேக்கடி, ராஜஸ்தானில் உள்ள ராந்தோர்போர், தாய்லாந்து, முதுமலை என்று பல இடங்களுக்குப் போய் படம் எடுத்திருக்கிறேன்'' என்கிறார் கண்களில் பெருமை மின்ன.
""காட்டில் படம் எடுப்பது அவ்வளவு எளிதான செயலல்ல. ஏனென்றால் நாம் போகும் நேரத்தில் விலங்குகள் வராது. அப்படியே வந்தாலும் புகைப்படம் எடுப்பதற்குத் தேவையான வெளிச்சம் இருக்காது. அல்லது நின்று படம் எடுக்க இட வசதி இருக்காது. விலங்குகள் எப்போது வரும் என்று காத்திருக்க வேண்டும்.'' என்ற ஸ்வாதியிடம் புகைப்படக் கலையின் நுட்பங்கள் எல்லாம் தெரியுமா? என்று கேட்டதற்கு, ""ஓ.. தெரியுமே!'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
""நான் எந்த விலங்கையோ, பொருளையோ படம் எடுத்தாலும் அதைப் பார்த்ததும் உடனே அப்படியே எடுத்துவிட மாட்டேன். முதலில் எந்தக் கோணத்தில் படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்து, அதன் பின்புதான் எடுப்பேன். தேவையான லைட்டிங் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் எடுப்பேன். காட்டில் உள்ள மிருகங்களைப் படம் எடுக்கத் தயார் பண்ணிக் கொண்டிருக்கும்போதே அவை நம் கண்பார்வையை விட்டுக் கடந்து போய் ஏமாற்றத்தைத் தருவதும் உண்டு'' என்கிறார்.
""நான் இப்படி புகைப்படக் கலையில் ஆர்வமாக இருப்பதற்குக் காரணம், நான் படிக்கும் பள்ளிதான். ஒவ்வொரு மாணவரின் திறனை வளர்க்கும் நோக்கத்துடன் பள்ளி நடத்தப்படுகிறது. உதாரணமாக ஓவியம் வரைவதில் பயிற்சி அளிப்பதற்கென்று ஒவ்வொரு நாளும் ஓவிய வகுப்புகள் உண்டு. அதற்குத் தேர்வுகளும் உண்டு. ஒரு மேஜையின் மேல் ஏதாவது பொருளை வைத்துவிட்டு வரையச் சொல்வார்கள். நான் நிறையப் படங்கள் வரைந்திருக்கிறேன்.
வன விலங்குகளைப் படம் பிடிக்கும் ஆர்வம் நிறைய தொலைக்காட்சிகளில் வனவிலங்குகளைப் பற்றிய படங்களை ரொம்பவும் ஆர்வமாகப் பார்த்ததால் வந்தது. உலக அளவில் வனவிலங்குகளைப் படம் பிடிப்பதில் புகழ் பெற்றவர் ஜான்ஐசக். அவருடைய படங்கள் என்றால் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
நான் ராஜஸ்தானில் உள்ள ராந்தோம்போர் போனபோது அவரும் அங்கே வந்திருந்தார். என்னைப் புகைப்படம் எடுத்துச் சென்றார். அதை என்னால் மறக்கவே முடியாது'' என்று சொல்லும் ஸ்வாதி, புகைப்படக் கலையின் நுட்பங்களை எல்லாம் தெரிந்து கொள்வது, புகைப்படத்திற்கென்று ஆங்கிலத்தில் வருகிற இதழ்களைப் பார்த்துத்தானாம். ""நல்ல புகைப்படம் எடுப்பது எப்படி என்பதற்கு நிறைய டிப்ஸ்களை அந்த இதழ்களில் தருவார்கள்'' என்கிறார்.
வேறு எந்தத் துறையில் ஆர்வம்? என்றோம்.
""டென்னிஸ் விளையாட்டில் ரொம்ப ஆர்வம். பள்ளியில் தினமும் டென்னிஸ் விளையாடுவேன். சமீபத்தில் புனேயில் நடந்த மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான டென்னிஸ் போட்டியில் எஸ்ஜிஎஃப்ஐ குழு சார்பாக விளையாடினேன்'' என்று பெருமையாகச் சொல்லும் ஸ்வாதிக்குப் படிப்பிலும் ஆர்வம் அதிகம்.
குறிப்பாக அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். விண்கலங்களைப் பற்றிய நிறைய விவரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார். தந்தை ஜெயக்குமார் பிசினஸ்மேன். அம்மா சுஜாதா இல்லத்தரசி.
அதென்ன ஸ்வாதி சிங் என்று கேட்டதற்கு, ""தாத்தா பெயர் பகத்சிங். அதனால் நான் ஸ்வாதிசிங்'' என்கிறார் சிரிப்புடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...