சோற்றுப் பருக்கையில் காட்டின் வாசம்!
ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை வன ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் முழக்கம் "காடு மக்களுக்காக' என்பதே. அதாவது காடு இருப்பதே மக்களின் நன்மைக்காகத்தான். நம் மக்களைப் பொருத்தவரை காடு என்பது அபாயகரமான ஒரு பகுதி


ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை வன ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் முழக்கம் "காடு மக்களுக்காக' என்பதே. அதாவது காடு இருப்பதே மக்களின் நன்மைக்காகத்தான். நம் மக்களைப் பொருத்தவரை காடு என்பது அபாயகரமான ஒரு பகுதி. சிங்கம், புலி மட்டும்தான் இருக்கும் என்ற அளவில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.
நம் பள்ளிப் பாடத்தில் கூட வரிகுதிரை, ஒட்டகச் சிவிங்கி, நெருப்புக் கோழி, நீர் யானை இவற்றின் படங்கள்தான் சிறுவர்களின் பாட புத்தகங்களில் பார்க்க முடிகிறது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இவற்றில் ஒன்றுகூட நம் நாட்டுக் காடுகளில் இல்லை. அதே சமயம் நம் காடுகளில் உள்ள கேளையாடு, சருகுமான், வெளிர் மான்.
நம் மாநிலப் பறவையான மரகதப்புறா, மாநில விலங்கு வரையாடு என்பது நம் மாணவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? காடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களைக் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 2 லட்சம் மாணவர்கள், 10ஆயிரம் ஆசிரியர்களுக்கு வகுப்புகளை நடத்தி தகவல்களை கூறி வருகிறார் கோவை "ஓசை' சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாஸ்.
* காடுகளால் நகரங்கள் எவ்வாறு பயன்பெறுகின்றன?
கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, தருமபுரி, நெல்லை இன்னும் பல முக்கிய நகரங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் என்பது மலைக் காடுகளில் உற்பத்தியாகுபவை. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முக்கியமான உணவுக்குத் தேவையான அரிசி விளைவிக்க வயல்களுக்கு வழங்கப்படும் பாசன நீர் என்பது காடுகளில் இருந்து உற்பத்தியாகி ஆறுகளாக ஓடி வரும் நீர்தான். நாம் சாப்பிடும் சோற்றுப் பருக்கையில் ஏதாவது ஒரு காட்டின் வாசம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
* காட்டைக் காப்பாற்றுவது எப்படி? உருவாக்குவது எப்படி?
காட்டை நாம் உருவாக்கத் தேவையில்லை. நாம் விதை விதைத்தோ, உரமிட்டு, தண்ணீர் ஊற்றவோ தேவையில்லை. பறவைகள் விதைக்கின்றன, பூச்சிகள் மகரந்த சேர்க்கை செய்கின்றன. விலங்குகள் காட்டின் உயிர்ச்சமநிலையைப் பேணுகின்றன. ஒவ்வொரு உயிரினமும் காட்டுக்கு ஆற்றும் பங்களிப்பு பற்றிப் பக்கம் பக்கமாக எழுதும் அளவிற்கு ஆய்வாளர்கள் கண்டுடிபித்துள்ளனர்.
* நம் நாட்டு காடுகளின் சிறப்பம்சம் என்ன?
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 16வகையான பறவைகள், சிங்கவால் குரங்கு, வரையாடு போன்ற விலங்குகள் உலகின் வேறு எங்கும் கிடையாது. உலகில் அதிக அளவு எண்ணிக்கையில் புலிகள் நம் காடுகளில் உள்ளன. அதே போல் ஆசிய யானைகள் அதிகமுள்ளவை நம் காடுகள்தான். பெரிய பூனை குடும்பத்தை சேர்ந்த சிங்கம், புலி , சிறுத்தை, பனிச் சிறுத்தை, மேகச் சிறுத்தை ஆகிய ஐந்து வகையைக் கொண்ட ஒரே நாடு இந்தியா.
நம் காடுகளில் சீட்டா வாழ்கிறதா?
இந்தியக் காடுகளில் 1950 வரை வாழ்ந்தது. அதன்பின் முற்றிலுமாக அழிந்துவிட்டது. நம் காடுகளில் சிறுத்தைதான் உள்ளது. பலருக்குச் சிறுத்தைக்கும் சிவிங்கி புலிக்கும் வித்தியாசம் தெரியாது. சிறுத்தை ஆங்கிலத்தில் (லெப்பெர்டு), சிவிங்கி புலி (சீட்டா) என்று அழைக்கப்பட வேண்டும். தற்போது நம் காடுகளில் வாழ்ந்துவரும் சிறுத்தையை சீட்டா என்று தவறாகக் கூறிவருகிறோம்.
* காடுகள் எதிர்நோக்கும் பிரச்னைகள் என்ன?
மனிதர்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள நம்மால் முடிந்தவரை காடுகளை நாம் துண்டாடி விட்டோம். காடுகளை அழித்து விவசாயம், தேயிலை, காப்பி போன்ற பணப்பயிர்களுக்காக காடுகளை ஆக்கிரமித்துவிட்டோம்.
இதனால் விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கிவிட்டன. போக்குவரத்துக்காக காடுகளுக்கு இடையே சாலை, ரயில்பாதைகள் அமைப்பது, கேளிக்கை விடுதிகள் கட்டுவது. ஆசிரமங்கள் கட்டுவது, நீர் மின் நிலையம் அமைப்பது, சுரங்கங்கள் தோண்டுவது
எனக் காடுகளை அழிப்பது பற்றி பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.
* இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
இதுவரை காடுகளை அழித்தது போதும். இனி புதிதாக காடுகளுக்கு நடுவே சாலை அல்லது ரயில் பாதை அமைத்தாலோ, சுரங்கம் தோண்டினாலோ புதிய கட்டடங்கள் எழுப்பப்பட்டாலோ மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...