ஒரு நட்பின் கதை!
அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, பாட்டி, தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, சகலை, சம்பந்தி, மாமனார், மாமியார், மருமகள், மருமகன், பங்காளி என நமது சொந்தங்களைப் பட்டியல் இட்டுக் கொண்டே


அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, பாட்டி, தாத்தா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, சகலை, சம்பந்தி, மாமனார், மாமியார், மருமகள், மருமகன், பங்காளி என நமது சொந்தங்களைப் பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். அப்படி ஒரு பெருமை வாய்ந்தவை நமது உறவுமுறைகள். ஆனால் இன்று மம்மி, டாடி, ஆன்ட்டி, அங்கிள் என்ற அளவில் உறவுகள் சுருங்கிவிட்டன. இதைவிடவும் ஒருபடி மேலே போய் பெற்ற தாய் தகப்பனை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுகின்றனர். ரத்த சொந்தங்களே இப்படி பெயரளவில் ஓட்டிக்கொண்டு அன்பு என்ன விலை என்று கேட்கும் காலமிது.ஆனால் உறவுகளை மீறிய அன்பின் நெருக்கம் உலகில் இருக்கிறது. கணவன் மனைவி இடையே பரிமாறிக் கொள்ள முடியாத சில விஷயங்களை இவர்களிடம் பரிமாறிக்கொள்ளலாம். ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். நட்புதான் அது.
நட்பின் விதை எப்படியோ விழுந்து எப்படியோ தழைக்கிறது.
கோவை போத்தனூரைச் சேர்ந்த வித்யாவுக்கும் அகமதாபாதில் இருக்கும் ஹிரில் தேசாய்க்கும் முகிழ்ந்த நட்பு அப்படியான ஓர் ஆச்சர்யம்.
கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் கவுண்டர் லைனைச் சேர்ந்தவர் கி.வித்யா. இவர் தனது கணவர் பாபு, 7வயது மகள் சம்யுக்தா, தாய் கீதா, தங்கை வினு, பாட்டியுடன் வசித்துவருகிறார். பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் செல்ஃபோனுக்கு ஓர் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஹிந்தி மொழியில் எதைப் பற்றியோ பேசவே அதிகப்படியான பணிச்சுமையில் இருந்த வித்யா உணர்ச்சிவசப்பட்டு "நம்பரை சரியாக பார்த்து டயல் செய்ய முடியாதா' எனக் கோபத்துடன் ஃபோனை வைத்துவிட்டார்.
சுற்று நேரம் கழிந்த பின்னர் வரவேற்பாளாராக பணிபுரியும் தான், பொறுமையைக் கையாளாமல் கடுமையாக நடந்து கொண்டதை எண்ணிய வித்யா, ஒரு சில நிமிடங்களில் அந்த எண்ணுக்கு ஃபோன் செய்து அழைத்துள்ளார். அந்த எண் பிசியாக இருக்கவே மீண்டும் மீண்டும் முயற்சித்துள்ளார். தொடர்ந்து வெகு நேரம் பிஸியாகவே இருக்கவே வேறு வேலையில் மூழ்கினார்.
அடுத்த கணமே அதே எண்ணில் இருந்து வித்யாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அடுத்த முனையில் இருந்து ஒரு பெண் மெல்லிய குரலில் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். எனது பெயர் ஹிரில் தேசாய். நான் அகமதாபாத்திலிருந்து அழைக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ சிந்தனையில் எண்ணைத் தவறாக அழுத்திவிட்டேன். புரியாத மொழியில் ஏதே திட்டுகிறீர்கள் என உணர முடிந்தது.
பயந்துபோய் மன்னிப்புக்கூட கோராமல் இணைப்பைத் துண்டித்துவிட்டேன். இவ்வளவு நேரமாக உங்கள் எண்ணுக்குத்தான் முயற்சித்தேன். பிஸியாக இருந்தது. என்னை மன்னித்து விடுங்கள் என்றாராம் ஹிரில்.
அவரது பேச்சை இடைமறித்த வித்யா நானும் உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டுவிட்டேன். உங்களிடம் மன்னிப்பு கேட்க நானும் இவ்வளவு நேரமாக உங்கள் எண்ணைத்தான் அழைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.
இருவரின் பரஸ்பர மன்னிக்கும் மனோபாவம் அவர்களை நெகிழ வைத்தது. காலை முதல் மாலை வரை அதிகளவில் ஃபோன் அழைப்புகளுக்குப் பதில் சொல்லும் தனது பணி குறித்தும் வித்யா சொல்லத் தொடங்க இப்படியே ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொண்டுள்ளனர்.
தங்கள் குடும்பம், கல்வி, பொழுதுபோக்கு எனக் கூறும்போது, பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்துப்போக தூரத்தில் இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர் இருவரும்.
வித்யா மற்றும் அவரது மகள் சம்யுக்தாவுக்கும் பல பரிசு பொருள்களை அனுப்பியுள்ளார் ஹிரில். பதிலுக்கு வித்யாவும் பரிசு பொருள்களை அனுப்பியுள்ளார். இப்படியே ஓர் ஆண்டு கடந்தது.
இதற்கிடையே வித்யா வேலை பார்க்கும் அதே நிறுவனத்தின் அகமதாபாத் கிளையில் உற்பத்திப் பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார் ஹிரில். பயிற்சிக்காக 10 நாள் கோவைக்குச் செல்ல வேண்டும் என உயர் அதிகாரிகள் கூறவே மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார் ஹிரில். ஓர் ஆண்டுகாலம் பார்க்காமல் ஃபோனில் மட்டுமே தொடர்ந்த நட்புக்குரியவரை நேரில் பார்க்கப் போகிறோம் என இருவருமே சந்தோஷத்தில் மூழ்கினர். கோவை வந்த ஹிரில் தனியார் விடுதியில் தங்குவதாகக் கூறிவிட்டு வித்யா வீட்டில் தங்கியுள்ளார்.
வீட்டில் எல்லோரிடமும் நன்கு பழகிய ஹிரில் வித்யா அவரது கணவர் மற்றும் மகளிடம் ஆங்கிலத்தில் உரையாடினார்.
வித்யாவின் தாய், பாட்டி, மற்றவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் உரையாட முடியவில்லையே என வருந்தியுள்ளார் ஹிரில். பத்து நாட்கள் கழித்து ரயில்நிலையத்தில் கண்ணீருடன் இருவரும் விடைகொடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு வித்யாவின் பிறந்தநாளுக்குச் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருள்களுடன் கோவை வந்தார் ஹிரில். வந்தவர் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தோழியின் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் இயல்பாகப் பேச வேண்டும் என்பதற்காக கடந்த ஓர் ஆண்டாகப் புத்தகங்கள் மூலம் தமிழ் கற்றதாகக் கூறுகிறார்.
வித்யாவுக்கு மட்டுமல்லாமல் கணவர், குழந்தை, தாய், தங்கை, தங்கையின் கணவர், பாட்டி, வித்யாவின் சித்தி குடும்பத்தினருக்கும் உடைகள் பரிசு பொருள்கள் என கடந்த ஒர் ஆண்டாக அவர் சேமித்து வைத்திருந்த ரூ.50ஆயிரத்தைச் செலவழித்துள்ளார்.
ஹிரில் அகமதாபாத் திரும்பும் அதே தினத்தில் வித்யாவின் தங்கை வினுவுக்கு குழந்தை பிறந்துள்ளது.
இருந்தாலும் வித்யாவின் தாய் ஹிரிலுக்கு பிடித்த தேங்காய்பால் முறுக்கு, இட்லி பொடி, ஊறுகாய் என அனைத்தையும் செய்து கொடுத்து அனுப்பிவிட்டுத்தான் தன் பேரக் குழந்தையைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
நட்பென்பது ஓர் உறவில்லை.. ஆனால் அதற்குப் பிரிவும்
இல்லைதானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...