நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடைவிரிக்கிறேன்; கொள்வார் உண்டு!

உங்கள் ஊரில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், கட்சி மாநாடுகள், ஆன்மிகக் கூட்டங்கள், தனியார் விழாக்களின் போது சிலர் வேர்க்கடலை, பட்டாணி, சுண்டல், பலூன் போன்றவற்றை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்க

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:31 pm

எம். ஆனந்த்

உங்கள் ஊரில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், கட்சி மாநாடுகள், ஆன்மிகக் கூட்டங்கள், தனியார் விழாக்களின் போது சிலர் வேர்க்கடலை, பட்டாணி, சுண்டல், பலூன் போன்றவற்றை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நிகழ்ச்சிக்குத் தொடர்புடைய கடைவிரிப்புகளையும் சாலை ஓரங்களில் காணலாம். ஆன்மிக நிகழ்ச்சி என்றால் கடவுள் படங்கள், கட்சிக் கூட்டங்களானால் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவரின் படங்கள், சட்டையில் குத்திக்கொள்ளும் சின்னம், கொடி, டி-சர்ட் போன்றவற்றை விற்பார்கள். கடவுள் அல்லது கட்சித் தலைவரின் மீது தீவிர பக்தி கொண்டவர்களால் அவை விரைவில் விற்பனையாகி விடும்.

 ஆனால் இந்தக் கடை விரிப்பு வேறு மாதிரியானது. வியாபார நோக்கம் மட்டுமின்றி தமிழ் உணர்வுடன் கடைவிரிக்கிறார் ஒருவர்.

 சமீபத்தில் கோவை கம்பன் கழகம், நானி கலையரங்கில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விழா முடிந்து சென்றவர்கள் ஒருவரின் கடைவிரிப்பிலிருந்து குறுந்தகடுகளை வாங்கிச் சென்றனர். நாம் அவரை நெருங்கி விசாரிக்க ""என் பெயர் செ. இராசமோகன். எனக்கு வயது 54 ஆகிறது'' என்றபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

 ""நான் விருத்தாசலத்தில் வசித்து வருகிறேன். பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் மேடைப் பேச்சுக்கள், கண்ணதாசன் பாடல்கள், திருக்குறள் பாடல் மற்றும் விளக்கவுரை போன்றவை அடங்கிய குறுந்தகடுகளை ஊர் ஊராகச் சுமந்து சென்று விற்பனை செய்கிறேன்.

 "யாம் அறிந்த மொழிகளிலேயே' என்று தமிழை உயர்த்திய பாரதி, "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்' என்ற பாரதிதாசன் இவர்களின் நாவிலும், எழுத்துக்களிலும் வலம் வந்த தமிழ் மீது சிறு வயதிலேயே எனக்கு தீராத தாகம். 1986-ஆம் ஆண்டுகளில் தேர்தல் சுவர் விளம்பரங்கள் வரைந்து பிழைப்பை நடத்தினேன். வரைந்து வரைந்து ஓவியம் பயின்றேன். டிஜிட்டல் ஓவியங்கள் வந்தவுடன் எங்கள் கலையும் அழிந்தது. பல கலைஞர்களும் அழிந்தார்கள். கணினி நல்லதையும் செய்யும் தீயவையும் செய்யும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

 20 ஆண்டுகள் விளம்பர ஓவியராக இருந்த நான் இலக்கிய பேச்சுக்களை குறுந்தகடாக எல்லா ஊர்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன். முதலில் பொழுது போக்காகச் செய்தேன். இப்போது அதுவே வாழ்க்கையாகிவிட்டது. சிறுவயது முதலே அனைத்து இலக்கியக் கூட்டங்களுக்கும் செல்வேன். அப்போது இலக்கியப் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு எனக்குள் தமிழ் வளர்த்துக்கொண்டேன். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தின் இயற்பெயர்) 9ஆம் வகுப்பு வரைதான் படித்தேன். பின்பு அனுபவங்கள்தான் என் வாழ்க்கையை மாற்றியது. மொழி உணர்வு, தேச உணர்வு மங்கி வருகிறதோ என்கிற ஐயம் எனக்குள் உண்டு. எப்படியாவது நல்ல தமிழை அனைவரும் சுவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த குறுந்தகடு விற்பனையை செய்து வருகிறேன். தமிழ் பெருமக்களின் ஆதரவோடு இதை செய்து வருகிறேன்.

 தினமணியில் திங்கள் கிழமை வரும் "இலக்கிய சங்கமம்' பகுதியைப் படித்து நிகழ்ச்சி நடக்கும் விவரங்களை அறிந்துகொள்வேன். அதன்படி எனது பயண அட்டவணையைத் தயார் செய்துகொள்கிறேன். கம்பன் கழகம், திருவள்ளுவர் மற்றும் தமிழ் மன்றங்களுக்கு அதிகமாக செல்வேன். ஆன்மிகம், பகுத்தறிவு, அரசியல், இனஉணர்வு கூட்டங்களுக்கும் சென்று கடை விரிப்பேன். தலைவர்களின் பேச்சுக்களையும் ஆன்மிக தமிழ் அறிஞர்களின் பேச்சுக்களையும் சுமந்து செல்லும்போது தமிழையே சுமந்து செல்வதாகத்தான் உணர்கிறேன்.

 நல்ல உள்ளம் படைத்த தமிழ் ஆர்வலர்கள் இன்னும் இருப்பதால் என் வாழ்க்கை படகை சரியான திசையில் ஓட்ட போதுமான அளவிற்கு வருமானம் கிடைக்கிறது.

 தொய்வு ஏற்படும் நேரங்களில் இலக்கிய நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்களால் உற்சாகமடைகிறேன். இதுதவிர திருமுதுகுன்றத்தில் பாவேந்தர் என்ற இலக்கிய அமைப்பை பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். "சிலப்பதிகாரம்' தொடர் சொற்பொழிவை பத்து நாட்களுக்கு நாஞ்சில் சம்பத் அவர்களைக் கொண்டு நடத்தியதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். 24 மணி நேர தொடர் சொற்பொழிவு நடத்த திட்டமிட்டுள்ளேன். பள்ளி மாணவர்களிடையே பல்வேறு தமிழ் தலைப்புகளில் போட்டிகள் நடத்தி மாணவர்களிடமும் தமிழ் உணர்வை வளர்க்க முயற்சி செய்துவருகிறேன். என்னிடம் வரும் பல மாணவர்கள் "நல்ல தமிழை இப்போதுள்ள ஆசிரியர்கள் பயிற்றுவிப்பதில்லை' என்று வருத்தப்பட்டு குறுந்தகட்டை வாங்கிச் செல்கின்றனர்.

 ஆரம்பகாலங்களில் மிகவும் சிரமப்பட்ட நேரங்களில் குடும்பத்தை சிக்கனமாக நடத்தியும் கஷ்டங்களை வெளியே காட்டிக் கொள்ளாமலும் எனக்கு ஆதரவாக இருந்த என் மனைவி புவனேஸ்வரியின் ஆதரவில்லாமல் இந்தத் தொழிலை நான் வெற்றிகரமாக செய்திருக்க முடியாது'' என்றார் இராசமோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.