யானைகளை பிச்சையெடுக்க விடலாமா?
உங்கள் வீட்டு வாசலில் ஐந்து பூனைக்குட்டிகளை யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. உதவ முடியுமா?'' என்று தொலை பேசியில் ஓர் அழைப்பு. உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென


உங்கள் வீட்டு வாசலில் ஐந்து பூனைக்குட்டிகளை யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. உதவ முடியுமா?'' என்று தொலை பேசியில் ஓர் அழைப்பு. உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்று அந்த ஐந்து பூனைக்குட்டிகளையும் எடுத்து வந்து வளர்க்கிறார் கல்பனா வாசுதேவன்.
""ஆண்ட்டி, அணில் ஒண்ணு செத்துக் கெடக்கு. என்ன செய்யணும்?'' நான்கைந்து குழந்தைகள் கவலையுடன் கேட்கிறார்கள் அவரிடம்.
அவர் சிரித்துக் கொண்டே குழந்தைகளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, அணிலை எப்படிப் புதைக்க வேண்டும்? என்று கற்றுத் தருகிறார்.
கோவை நகரில் செüரிப்பாளையம், புளியங்குளம் பக்கத்தில் கல்பனா வாசுதேவனின் சேவையைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். சரவணம்பட்டி பகுதியில் விளாங்குறிச்சியில் இப்படி ஆதரவற்ற விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே விலங்குகள் பாதுகாப்பு மையம் ஒன்றை ஏற்படுத்தி, வாயில்லா உயிர்களுக்குச் சேவை செய்து வருகிறார்.
இந்த மனசு உங்களுக்கு எப்படி வந்தது? என்ற
கேள்வியோடு அவரை அணுகினோம்:
""நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அப்பா, அம்மா, தாத்தா எல்லாரும் தயாள சிந்தனை உள்ளவர்கள். முயல், புறா எல்லாம் அப்பா வளர்ப்பார். புறாவுக்கு உணவு ஊட்டுவது எப்படி என்பதை நான் சிறுமியாக இருக்கும்போது அப்பா கற்றுத் தருவார். நான் பி.ஏ. பொருளாதாரம் படித்தேன். திருமணம் ஆன பின்பு 1986}ல் கோயம்புத்தூருக்கு வந்தேன்.
சாலையில் சென்று கொண்டிருக்கும்போது எங்காவது அடிப்பட்ட நாய் இருந்தால் போதும் அதை உடனே வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவேன். காயத்துக்கு மருந்திட்டு, சிகிச்சை செய்து அதை வளர்க்க ஆரம்பிப்பேன். இப்படியே வளர்க்கத் தொடங்கியதில் ஒருகட்டத்தில் எங்கள் வீட்டில் 20 நாய்கள் இருந்தன. ஆனாலும் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் பணியில் இப்போதுபோல முழுமையாக இறங்கவில்லை.
2006-ல்தான் முழுமையாக இறங்கினேன். "டஉஞடகஉந ஊஞத அசஐஙஅகந' என்ற அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தேன். வீட்டுக்குப் பக்கத்தில் ஆதரவற்ற மிருகங்களை வளர்க்க முடியாது என்பதால், சரவணம்பட்டி பகுதியில் ஒரு தோட்டத்தில் கொஞ்சம் இடத்தை வாடகைக்குப் பிடித்தேன். இப்போது அங்கு செயல்பட்டு வருகிறது ஆதரவற்ற விலங்குகளின் பாதுகாப்பு மையம்.
இப்போது இங்கே 60 நாய்களுக்கும் அதிகமாக உள்ளன. பூனை குறைவாகத்தான் இருக்கிறது. 3 குதிரைகள் இருக்கின்றன. சாலையில் திரிந்து கொண்டிருக்கும் குதிரைகளை கொண்டு வந்து இங்கே தங்க வைப்போம். அப்படித் தங்க வைக்கப்பட்ட குதிரைகளின் மொத்த எண்ணிக்கை 80. அப்புறம் குதிரைக்குச் சொந்தக்காரர்கள் சிலர் வந்து கேட்டதால், அவர்களுக்கு அறிவுரை கூறி குதிரைகளை அவர்களுடன் அனுப்பி வைத்து
விட்டேன்.
நவக்கரை பகுதியில் ஒரு மயில் அடிபட்டுக் கிடப்பதாகத் தகவல் வந்தது. உடனே காரை எடுத்துக் கொண்டு அங்கே போய் அந்த மயிலுக்கு மருத்துவம் பார்த்து, கொஞ்ச நாட்கள் எங்கள் இல்லத்தில் வைத்திருந்து பின்பு வனத்துறையிடம் ஒப்படைத்து
விட்டேன்.
என்னுடைய சேவையைப் பார்த்து, இந்திய அரசுத்துறையான அனிமல் வெல்ஃபேர் போர்டில் கெüரவ அதிகாரியாக நியமித்துள்ளார்கள். இதன்மூலம் விலங்குகளுக்கான சேவையை என்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடிகிறது.
உதாரணமாக, கோவையிலிருந்து கேரளாவுக்கு மாடுகளை இறைச்சிக்காக லாரிகளில் ஏற்றிச் செல்கிறார்கள். பெரிய லாரிகளில் 15 மாடுகள்தாம் அதிகபட்சமாக ஏற்ற வேண்டும். சிறிய லாரிகளில் 5 மாடுகளை அதிகபட்சமாக ஏற்றலாம். ஆனால் பெரிய லாரிகளில் 60 மாடுகள் வரை ஏற்றுவார்கள். நிற்க முடியாத மாடு லாரியில் படுத்துவிட்டால், அதைப் பிற மாடுகள் மிதித்தே கொன்றுவிடும். அல்லது பலத்த காயம் ஏற்பட்டுவிடும்.
மாடுகளை உணவுக்காகக் கொல்வதே தவறு. அப்படி உணவுக்காகக் கொண்டு செல்லும்போது இவ்வாறு பாதுகாப்பில்லாமல் கொண்டு செல்வதால், பாதி வழியிலேயே இறந்து போகின்றன. இது என்ன அநியாயம்? இவ்வாறு அதிகப்படியான மாடுகளை லாரியில் ஏற்றிச் செல்வது பற்றிய தகவல் வந்தால், அதை உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தடுத்து நிறுத்துவேன்.
விலங்குகள் என்றதும் உடனே தெரு நாய்களின் தொல்லைதான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த அவற்றுக்குக் கருத்தடை செய்ய வேண்டும். இதை முறையாக எல்லா ஊர்களிலும் செய்து வந்தால், ஐந்து வருடத்துக்குள் தெருவில் நாய்களையே பார்க்க முடியாது. அப்படிச் செய்யாததால்தான் தெருவில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. யானைகளை வைத்துப் பிச்சையெடுப்பதையும் தடுத்து நிறுத்துகிறோம். யானைகளைப் பிச்சையெடுக்க விடலாமா?
உங்கள் பக்கத்து வீட்டில் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிச் சிந்திக்காமல் விலங்குகளின் மீது அன்பு காட்டுவது நியாயமா? என்று சிலர் என்னைப் பார்த்துக் கேட்பார்கள். என்னைப் பொறுத்தளவில் விலங்குகளானாலும், பறவைகளானாலும் எல்லாம் உயிர்களே. எல்லா உயிர்களின் மீதும் நாம் அன்பு செலுத்த வேண்டும்.
விலங்குகள் மீது மனிதர்களுக்கு அன்பு வர வேண்டும். விலங்குகளின் மீது அன்பு செலுத்தும் உள்ளம் இருந்தால் அது சக மனிதர்களின் மீது அன்பு செலுத்தும் உள்ளமாக மாறிவிடும்.
அதனால்தான் "வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார். எனது கனவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஓர் இல்லம் அமைக்க வேண்டும், முதியவர்களுக்கு ஆசிரமம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். என்னுடைய இந்த முயற்சிகளுக்கு எனது கணவர் வாசுதேவன் மற்றும் மகன்கள் அஜித், ரஞ்சித் ஆகியோர் ஆதரவாக இருக்கின்றனர் என்பது எனக்கு ஊக்கம் தரும் டானிக்காக இருக்கிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...