தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி!
அரிசி, பருப்பு, காய்கறிகள் என எல்லாப் பொருட்களின் விலைகளும் ஏறிக் கொண்டே போகும் காலம் இது. கல்வி, மருத்துவச் செலவுகளும் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே போகும் வீட்டு வாடகை. இவற்றைச் சமாளிக்


அரிசி, பருப்பு, காய்கறிகள் என எல்லாப் பொருட்களின் விலைகளும் ஏறிக் கொண்டே போகும் காலம் இது. கல்வி, மருத்துவச் செலவுகளும் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே போகும் வீட்டு வாடகை.
இவற்றைச் சமாளிக்க வீட்டில் உள்ள ஆண் மட்டும் அல்ல, பெண்ணும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். இல்லத்தரசிகள் தங்கள் "அரசி' பட்டத்தைத் துறந்துவிட்டு அவசர அவசரமாக அலுவலகத்துக்குப் பஸ் பிடிக்க வேண்டிய நிலைமை. பாலுக்கு அழும் குழந்தையை அமர்த்தவும் நேரம் இல்லை.
"தாய்ப் பால் கொடுங்கள்... தாய்ப்பால் கொடுங்கள்' என்று மருத்துவர்கள் அறிவுரை சொன்னாலும், இந்த மாதம் முதல் வாரத்தில் உலகமெங்கும் "உலகத் தாய்ப்பால் வாரம்' என்று அறிவித்துக் கொண்டாடினாலும், வேலைக்குப் போகும் பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுக்க நேரம் ஏது?
தாய்ப்பால் கொடுக்க முடியாததால் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கு ஏற்படும் உடல், மனநலப் பிரச்னைகள் வேறு.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக அலுவலக நேரங்களில் சுரக்கும் தாய்ப்பாலை உறிஞ்சி எடுத்து, பாதுகாத்து வைத்து, வீட்டில் உள்ள குழந்தைக்குப் பயன்படுத்தும்முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது சென்னையில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள அந்த மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவத்துறையின் பேராசிரியர் டாக்டர் எல்.என்.பத்மா
சினியிடம் பேசினோம்.
""இப்போது பெண்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேறுகால விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்குள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். இதனால் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. வீட்டிலுள்ளவர்கள் பாக்கெட் பாலை வாங்கிக் காய்ச்சி குழந்தைக்குக் கொடுக்கிறார்கள்.
ஆனால் பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு தாய்ப்பாலுடன் பிற உணவுகளைச் சேர்த்துக் கொடுக்கலாம். குறைந்தது 2 ஆண்டுகள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவது அவசியம்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் தருவது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஊட்டச்சத்து குறைபாடு, ஒவ்வாமை, மூச்சு இழுப்பு நோய் போன்றவை வராது.
குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்த உடல்நிலையைத் தாய் பெறுவதற்கும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். எட்டு மணி நேரத்துக்கு மேல் தாய்ப்பால் கொடுக்காவிட்டால் பால் கட்டிக் கொள்ளும். அதனால் ஏற்படும் வலியும், குழந்தைக்குப் பால் கொடுக்க முடியவில்லையே என்று மனதில் ஏற்படும் வலியும் ஒரு தாய்க்கு ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அவர்களால் அலுவலக வேலைகளை முழுக் கவனத்துடன் செய்யவும் முடியாது.
சுரக்கின்ற தாய்ப்பாலைக் கொடுக்காமல் இருந்தால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் தாய்ப்பால் சுரப்பு 3 மாதத்துக்குப் பிறகு குறைந்துவிடும். மிக விரைவில் நின்றுவிடும். இதனால் வேலை முடிந்து வீட்டுக்குப் போனாலும் பசியால் அழும் குழந்தைக்குக் கொடுக்கத் தாய்ப்பால் இருக்காது.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் இம்மாதிரியான பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு புதுமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
அலுவலகத்தில் வேலை செய்யும் குழந்தை பெற்ற பெண்களுக்குச் சுரக்கும் தாய்ப்பாலை, கருவிகளின் மூலம் உறிஞ்சி எடுத்து, அதைப் பாதுகாத்து வீட்டுக்கு எடுத்து சென்று பயன்படுத்தும் முறையே அது.
தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கக் கூடிய கருவி, கிருமி நீக்கம் செய்யும் கருவி, குளிர்சாதனப் பெட்டி, உறிஞ்சப்பட்ட தாய்ப்பாலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஓர் ஐஸ் பாக்ஸ், ஒரு தனி அறை ஆகியவையே இதற்குத் தேவை.
இதனால் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பாலை எடுத்துப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது அதை ஐஸ் பாக்ஸில் எடுத்துச் சென்று வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் வேலைக்கு வந்த பின்பு வீட்டிலுள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தாய்ப்பாலை எடுத்து குழந்தைக்குக் கொடுக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் 48 மணி நேரம் வரை தாய்ப்பாலை பாதுகாத்து வைக்கலாம். கெட்டுப் போகாது.
இந்த முறையின் மூலம் பல நன்மைகள் உள்ளன. தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமற் போய்விடும். அதனால் அலுவலகத்துக்கு வரும் பெண்கள் அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். இதனால் அலுவலகத்தில் வேலை பாதிக்கப்படும். சில பெண்களுக்கு குழந்தையை வளர்ப்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நிறுவனத்துக்கும் இதனால் இழப்பு. நன்கு வேலை செய்யக் கூடிய பயிற்சியுள்ள பணியாளரை நிறுவனம் இழக்க நேரிடும்.
இவற்றையெல்லாம் தவிர்க்க, நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த முறையை ஒவ்வோர் அலுவலகத்திலும் ஏற்படுத்த வேண்டும். தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் உயர்தரமான கருவியின் விலை ரூ.1 லட்சம். ஒரு தனி அறை ஏற்பாடு செய்து அதில் குளிர்சாதனப் பெட்டியை வைக்க வேண்டும். இவற்றை ஒவ்வோர் அலுவலகமும் செய்து கொடுத்தால், வேலை செய்யும் இளம் தாய்மார்களின் மிகப் பெரிய பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம்''
என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...