"கிராபிக் நாவலிஸ்ட்' அம்ருதா பாட்டீல்!

பல்லாயிரம் ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் புராணக் கதைகளை புதிய வடிவில்

""பல்லாயிரம் ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் புராணக் கதைகளை புதிய வடிவில் மீண்டும் சொல்லப்பட்டால் அந்தக் கதைகளுக்கு மீண்டும் புத்துயிர் பிறக்கிறது'' என்கிறார் இளம் எழுத்தாளரான அம்ருதா பாட்டீல். இவர் எழுத்தாளர் என்றால் சாதாரண எழுத்தாளர் அல்ல. இவரை "கிராபிக் நாவலிஸ்ட்' என்று அழைக்கின்றனர். அதாவது தனது நாவல்களுக்கான படங்களை அவரே வரைந்து, அதில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துகிறார். இது போன்ற "கிராபிக் நாவலிஸ்ட்'கள் வெகு சிலரே கவனம் ஈர்க்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முதல் பெண் "கிராபிக் நாவலிஸ்ட்' இவர்தான்.

புணேயில் 1979-ம் ஆண்டு பிறந்துள்ள இவர் வளர்ந்தது, வசித்து வருவது எல்லாமே கோவாவில். இவரின் தந்தை ஆயுதப்படையில் பணிபுரிந்தவர். கோவாவில் உள்ள கவின்கலைக் கல்லூரியில் பயின்றார். இவரின் சகோதரர் கப்பல் பொறியாளர்.

இவரின் முதல் நாவல் "கரி'. நகைச்சுவையை மையமாகக் கொண்டு ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் இவர் எழுதிய நாவல் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இவரின் தற்போதைய படைப்புதான் "ஆதி பர்வா'. மகாபாரதத்தை வியாச முனிவரின் சீடரான உக்ரசர்வ சதி எனும் முனிவர் ரிஷிகளுக்குச் எடுத்துரைப்பது போன்று இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது.

""என்னுடைய முதல் நாவலை புதுதில்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டது. பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டதால் நான் பிரான்சில் ஓராண்டு தங்கியிருந்து என்னுடைய அடுத்த நாவலை எழுதும் வாய்ப்பையும் கொடுத்தது. அங்குதான் "ஆதி பர்வா'வை எழுத ஆரம்பித்தேன். "கரி'யைப் போன்றே "ஆதி பர்வா'வும் பிரெஞ்சு மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.

இதில் மகாபாரதத்தில் அதிகம் பிரபலமில்லாத பகுதிகள் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். அதற்கான ஓவியங்களையும் தீட்டியுள்ளேன். கிட்டத்தட்ட மகாபாரதம் என்ற புராண கதாபாத்திரங்களுடன் பத்து ஆண்டுகளாக வாழ்ந்துள்ளேன் என்றே கூறவேண்டும். என்னுடைய தோழி,"அஸ்தினாபுரத்தில் இருந்து எப்போது மீண்டும் வீட்டிற்கு வருவதாக எண்ணம்' என்று விளையாட்டாக கேட்டார். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரங்களோடு ஒன்றி இந்த நாவலை படைத்துள்ளேன்.

ஒரு "கிராபிக் நாவலிஸ்ட்'டாக இருப்பதால் ஒரு படைப்பை உருவாக்குவதற்கு முன்பு என் மனக்கண்ணில் முதலில் தோன்றுவது வார்த்தைகளா அல்லது ஓவியங்களா என்று கேட்டால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் கதைதான் என்று சொல்வேன்.

இரண்டு அழகான விஷயங்கள் சங்கமிக்கும் இடம்தான் "கிராபிக் நாவல்'. அதனால்தான் வார்த்தைகள் மற்றும் ஓவியங்கள் என்ற இரண்டையும் சங்கமிக்க வைக்க முயற்சி செய்துள்ளேன். இந்த வகை நாவல்களில் வளவள என்று நீளமாக எழுதிக்கொண்டே போக முடியாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். இந்த வகை நாவல்களை எழுதுவதினால் நேரம் அதிகமாக செலவழியும்.

எனக்கு அண்மையில் "சென்டர் நேஷ்னல் டூ லிவர்' என்று அழைக்கப்படும் ஊக்கத்தொகை பிரான்சில் வழங்கப்பட்டது. அதன் மூலம் நான் இரண்டு மாதங்கள் பிரான்சில் தங்கியிருந்து என் அடுத்த நாவலுக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மூன்றாவது மாதம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அதன்படி பிரான்சில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்குச் சென்று இந்தியாவின் கதைசொல்லும் பாரம்பரியம் குறித்து அங்குள்ள மக்களிடம் பேசினேன்.

என்னுடைய பெற்றோர் பணத்தை ஆடைகளிலும், விளையாட்டுப் பொருள்களிலும் செலவழிக்காமல், பயணங்களிலும், இயற்கையோடும் செலவழித்தனர். இதனால் சிறுவயதில் இருந்தே எனக்கு அதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் செல்லவில்லை.

கோவாவில் என்னுடைய வீட்டில் நான் மிகவும் நல்ல பிள்ளை. பூனைகளுடனும் பூனைக்குட்டிகளுடனும்தான் அதிக நேரம் செலவழிப்பேன். அதுதவிர, செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உண்டு'' என்கிறார் அம்ருதா பாட்டீல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com