கூடை முடைவது எவ்வளவு கடினம்?
சென்னை நகரத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் உள்ளது தட்சிண சித்ரா. உள்ளே நுழைகிறோம். நகரத்தின் பள்ளி மாணவ, மாணவியர்கள் அங்கே தேவராட்டம் ஆடிக் கொண்டு இருந்தார்கள். இன்னொரு புறத்த


சென்னை நகரத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் உள்ளது தட்சிண சித்ரா. உள்ளே நுழைகிறோம். நகரத்தின் பள்ளி மாணவ, மாணவியர்கள் அங்கே தேவராட்டம் ஆடிக் கொண்டு இருந்தார்கள். இன்னொரு புறத்தில் ஒயிலாட்டம். தமிழகத்தின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம், கிராமத்துக் கலைவடிவமான தப்பாட்டம் இன்னொரு பக்கத்தில். இவற்றைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள்.
சென்னையில் கான்வென்ட் பள்ளிகளில் படிக்கும் இந்த மாணவ, மாணவிகளுக்குக் கிராமியக் கலைகளில் ஆர்வம் வந்தது எப்படி? என்ற வியப்பில் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்த நம்மிடம் பேசுகிறார் டெபோரா தியாகராஜன். அவர்தான் தட்சிண சித்ரா அமைப்பை உருவாக்கியவர்.
""நாம் இந்தியாவில் இருக்கிறோம். இந்தியாவில் என்ன ஸ்பெஷல்? பிறநாடுகளில் இருப்பதைவிட இங்கு இருப்பனவற்றில் எவை முக்கியமானவை? என்பது இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரிய வேண்டாமா? அதிலும் நகரத்திலேயே பிறந்து வளரும் குழந்தைகள் எப்படித் தெரிந்து கொள்வார்கள்? எனவே இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தட்சிண சித்ராவைத் துவக்கினோம்'' என்கிறார் டெபோரா தியாகராஜன்.
""தமிழ்நாட்டின் கிராமிய நிகழ்த்து கலைகளை மட்டும் நாங்கள் கற்றுக் கொடுக்கவில்லை. கிராமங்களில் இருந்து கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுகிறோம். பனை ஓலையில் தோரணங்களைச் செய்வதற்கு, கூடைகள் செய்வதற்கு, பறவைகள், மிருகங்களின் உருவங்களைச் செய்வதற்குப் பள்ளி மாணவ, மாணவியருக்குக் கற்றுக் கொடுக்கிறோம்.
அது மட்டுமல்ல, கண்ணாடியில் ஓவியம் வரையக் கற்றுக் கொடுக்கிறோம். புகழ்பெற்ற தஞ்சை ஓவியங்கள் வரைய மாணவ, மாணவிகள் இங்கே பயிற்சி பெறுகிறார்கள்.
பள்ளி மாணவ, மாணவியருக்குக் கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக் கொடுக்கும் அதே சமயம், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்த விரும்புகிறோம். அதற்காகக் காகிதம் செய்யக் கற்றுக் கொடுக்கிறோம். காகிதத்தில் ஃபைல்கள், பைகள், போட்டோ ஃபிரேம்கள், நகைப் பெட்டிகள் எல்லாவற்றையும் எங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறப்பாகச் செய்வார்கள். பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டுள்ள பொருட்களை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது? அப்படிப் பயன்படுத்தினால் சுற்றுச் சூழலுக்கு அவை எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன? என்பதை விளக்குகிறோம்.
துணிகளுக்குச் சாயம் போடுதல்,நெசவு வேலை, துணிகளில் பிரிண்டிங் செய்வது, டெரகோட்டா எனும் சுடுமண்ணாலான அணிகலன்கள் செய்வது, மண் சிற்பங்களைச் செய்வது என நிறையக் கைவினை வேலைகளைச் செய்வதற்குப் பயிற்சி அளிக்கிறோம்'' என்ற டெபோரா தியாகராஜன், ""நாங்கள் தட்சிண சித்ராவில் உருவாக்கிய பத்து மண் குதிரைகளை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்'' என்கிறார் பெருமையாக.
""மானுடவியல் படித்த நான், அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பின்பு, கோவைப் பகுதியில் "தமிழ்நாடு சத்துணவு திட்டத்துக்காக' ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டேன். அப்போது சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழக நாட்டுப்புறக் கலைகளின் மீது ஆர்வம் வந்தது. ஆனால் அப்போதே தமிழ்நாட்டின் கிராமியக் கலைகள் அருகி வருவதை உணர முடிந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் நலிந்து கொண்டே வந்தனர். இது எனக்குத் தாங்க முடியாத வருத்தத்தைக் கொடுத்தது. எனவே இந்தக் கலைகள் நலிந்துவிடாமல் இருக்க, நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்தக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் 1984 ஆம் ஆண்டு "மெட்ராஸ் கிராஃப்ட் பவுண்டேஷன்' என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். அதன் தொடர்ச்சிதான் தட்சிண சித்ரா. 1996 இல் இருந்து பார்வையாளர்களை அனுமதிக்கிறோம். இங்கே கிராமிய கலைசார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்'' என்கிறார் அவர்.
""குழந்தைகள், பள்ளி மாணவர்கள் கைவினைப் பொருட்களைச் செய்யக் கற்றுக் கொள்ளும்போது, கைவினைப் பொருட்களை உருவாக்குவது எந்த அளவுக்குக் கடினம் என்பதை உணர்கிறார்கள். பனை ஓலையில் கூடை முடைவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறது? பனை ஓலைக் கூடை முடைவது எவ்வளவு நுட்பமான வேலை என்பதையெல்லாம் தெரிந்து கொள்கிறார்கள். நகரத்து குழந்தைகளுக்குக் கிராமத்து வாழ்க்கை தெரிய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கு உதவும் வகையில் 3,500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஏராளமான புகைப்படங்கள், சிடிகள், வீடியோ நாடாக்கள் எல்லாவற்றையும் இங்கே சேர்த்து வைத்திருக்கிறோம்'' என்கிறார் டெபோரா தியாகராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...