அதற்குப் பிறகு எனது கணவர் பவா.செல்லதுரையின் அறிமுகம் கிடைத்தது. கூடவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பும் கிடைத்தது. என் புத்தக வாசிப்பு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது. சுந்தரராமசாமி, அம்பை, நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், லா.ச.ராமாமிருதம் எனப் படிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பு தமிழில் சொந்தமாகப் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் இலக்கியவாதிகளின் படைப்புகளைப் படித்தவுடன், நம்மால் இலக்கியத் திறனுடன் எழுத முடியாது என்ற அவநம்பிக்கை வந்துவிட்டது. அதனால் தமிழ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மனதிலிருந்து அழித்துவிட்டேன்.