நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்வெட்டு எழுத்துகளை கற்றுக்கொள்ள விருப்பமா?

நமது கோயில்கள் பக்தியின் இருப்பிடமாக மட்டும் அல்ல; பாரம்பரியம், கலாசாரம், நாகரிகத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருந்திருக்கின்றன. இதனைக் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடியும். இதுதொடர்பான ஆராய்ச்சிகளில் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 am

எம். ஆனந்த்

நமது கோயில்கள் பக்தியின் இருப்பிடமாக மட்டும் அல்ல; பாரம்பரியம், கலாசாரம், நாகரிகத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருந்திருக்கின்றன. இதனைக் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடியும். இதுதொடர்பான ஆராய்ச்சிகளில் பலகாலமாக ஈடுபட்டு விற்பன்னராகத் திகழ்கிறார் கோவையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் து.சுந்தரம். அவரிடம் சில கேள்விகள்:

 கல்வெட்டு ஆராய்ச்சி என்பது என்ன? இதனால் என்ன பயன்?

 கோயிலின் கட்டுமானப் பகுதிகளான அதிட்டானம், கருவறை வெளிச்சுவர்கள் அர்த்த மண்டப வெளி மற்றும் உள் சுவர்கள் மண்டபத் தூண்கள் ஆகியவற்றில் பெரும்பாலும் காணப்படுபவை கல்வெட்டுக்கள்தான். மேலும் பாறைகள், குடைவரைகள், தனிகற்கள், தூம்பு மற்றும் குமிழி (பாசனக் கால்வாயின் மதகுகள்), கோயில் மணிகள், விளக்குகள், செப்புச்சிலைகள், கல்செக்குகள் ஆகியவற்றில் கல்வெட்டுக்களை பார்க்கலாம்.

 தொன்மையான கி.மு.நான்காம் நூற்றாண்டு அளவில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் சமணர் மலைக்குகைகளில் காணப்படுகின்றன. இவற்றில் உள்ள தகவல்கள், தமிழகத்தின் தொன்மை, வரலாறு, தமிழ் எழுத்தின் வளர்ச்சி ஆகியவற்றை அறிந்துகொள்ள அடிப்படைச் சான்றுகளாக உள்ளன.

 கி.மு. மற்றும் கி.பி. ஆகிய காலகட்டத்தில் இருந்த மன்னர்கள், நாட்டு நிர்வாகப் பிரிவுகள், நிலம் பற்றிய செய்திகள், வரிவிதிப்பு நீர்ப்பாசன முறைகள், நீதிமுறைகள், சமயம், வணிகம் போன்ற பல செய்திகளை அறிந்து கொள்ள இக் கல்வெட்டுக்கள் உதவுகின்றன. இதைப் பற்றி படித்து ஆய்ந்து செய்திகளைப் பதிவு செய்வதே கல்வெட்டு ஆராய்ச்சி.

 இந்தத் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

 பிஎஸ்என்எல் தொலைத் தொடர்புத் துறையில் முதுநிலை கணக்கு அதிகாரியாக சென்னையில் பணியாற்றி 2006-ல் ஓய்வு பெற்றேன். கோவையில் எனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பயின்றேன். அப்போது இருந்தே தமிழ் மீது அளவற்ற ஆர்வம் உண்டு. ஒருமுறை காஞ்சியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். கோயில் பிரகாரத்தில் சில எழுத்துக்களைக் கண்டேன். அதைப் படிக்க முயன்று முடியாமல் போகவே... அதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. சொந்த ஊரான கோவைக்குத் திரும்பியவுடன் இதை கற்றுத் தருபவர்கள் யாராவது இருக்கிறார்களா?... என்று தேடியலைந்தேன். இறுதியாக, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பகுதி நேர கல்வெட்டு குறித்த பட்டயப் படிப்பில் சேர்ந்தேன். பேராசிரியர் ரவி என்பவரிடம் இதைப் பற்றி அடிப்படை விஷயங்களை முறையாகப் பயின்றேன். பின்னர் நூலகங்கள் மற்றும் இத்துறையில் அனுபவம் மிக்க சிலரிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு ஆய்வுகளை துவங்கினேன்.

 இந்தத் துறையில் நீங்கள் கண்டுபிடித்தவற்றைப் பற்றி சொல்லுங்கள்?

 தஞ்சையில் உள்ள தமிழக தொல்லியல் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். இந்த கழகத்தில்தான் ஐராவதம் மகாதேவன், நடன.காசிநாதன், இரா.நாகசாமி, ஒய். சுப்பராயுலு போன்ற பெரும் அறிஞர்கள் இருப்பது என்னைப் போன்றவர்களுக்குப் பெருமையான விஷயம். இக்கழகம் சார்பில் கடந்தாண்டு வெளிவந்த "ஆவணம்' என்ற புத்தகத்தில் குடிமங்கலத்தில் உள்ள தனிப்பாறை கல்வெட்டு குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது.

 இக் கல்வெட்டில் கி.பி.1458-ல் இருந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான அச்சுதராயர் காலத்தில் அவரது மகா மண்டல அதிகாரியாக (கோவை பகுதி முழுவதிற்கும் கவர்னர் போன்ற பதவி) இருந்த வாலையதேவ மகாராசா இப்பகுதியைச் சேர்ந்த பூலவாடியில் (பல்லடம்-உடுமலை வழித்தடம்) பிராமணச் சத்திரம் ஒன்றை நிறுவி, நிலங்கள் தானம் செய்ததைப் பதிவு செய்கிறது. இதுகுறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டேன்.

 அவிநாசியைச் சேர்ந்த கல்வெட்டு அறிஞர் பேராசிரியர் மா.கணேசன் அவருடன் இணைந்து அவிநாசி அருகில் உள்ள கரூவலூரில் இருக்கும் கன்னட கல்வெட்டு ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்த கி.பி.1760-61 ஆண்டில் மைசூர் அரசின் கோவன்புத்தூரில் (இப்போதுள்ள கோவை) அதிகாரியாக ஆட்சி செய்த மாதையன் காலத்தில் சத்தியமங்கலத்திற்கு வடக்கே தெற்கணாம்பியில் எழுந்தருளியுள்ள கோபாலசாமி விண்ணகர (பெருமாள் கோயில் என்று அர்த்தம்) ஆழ்வார்க்கு நித்திய வழிபாட்டிற்கும் நந்தா (அணையாத விளக்கு) விளக்கு எரிப்பதற்கும் சில நிலங்கள், வரிகள் ஆகியவற்றை ஸ்ரீரங்கப்பட்டிணம் கோவிந்த அய்யர் தானமாக வழங்கிய செய்தியை இக் கல்வெட்டில் ஆய்வு செய்து பதிவு செய்தேன்.

 உடுமலை பகுதியில் கல்லாபுரத்தில் இருந்த ஒரு விவசாய நிலத்தை சீர்செய்தபோது பெரிய பாறைகள் மண்ணில் புதையுண்டு இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று ஆய்வு செய்தேன். கி.பி.1298, கொங்குநாட்டை ஆட்சி செய்த கொங்கு சோழனான மூன்றாம் விக்ரம சோழனின் காலத்து பெருமாள் கோயில் அடித்தளப் பகுதி என்பதை கண்டுபிடித்தேன். வெளியூர்களில் இருந்து கோயிலுக்கு வந்துபோகின்ற அபூர்விகள் (ஸ்தலயாத்திரையாளர்கள்) திருப்போசனத்திற்கு (உணவு வழங்குவது) நிலம் தானம் செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தை கோயிலுக்கு வழங்கியது அக் கல்வெட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தேன்.

 அண்மையில், அமராவதி அணை அருகில் ஆற்றை ஒட்டியுள்ள விவசாய மேட்டு நிலத்தில் கோயில் தூண்களும் பிற பாறைகளும் சிதையுண்டு கிடந்தன. இதுபற்றிய தகவலை ஜான்சன் என்ற ஆர்வலர் மூலம் தெரிந்துகொண்டு அங்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு கி.பி.1207-1256 கால கட்டத்தைச் சேர்ந்த வீர ராசேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை என்பதையும் அரசின் கீழ் பணியாற்றிய கிழானடிகள் பிள்ளை எனும் பதவியில் இருந்த பொன்னன்துறையன் என்பவன் தூண் ஒன்று கொடை வழங்கப்பட்ட தகவலை கண்டறிந்து பதிவு செய்துள்ளேன்.

 உங்களின் லட்சியம் என்ன?

 கல்வெட்டு ஆய்வின் நுணுக்கங்களை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். கல்வெட்டு எழுத்துகளைப் படிப்பதற்கான பயிற்சிகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் யார் வந்தாலும் இதைக் கற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.