இயற்கை உரமும்; விளைந்த காய்கறிகளும்!
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ளது முத்துப்பட்டி என்கிற சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் பிறந்த ஒரு பெண், இயற்கை வேளாண்மை தொடர்பாக பங்களாதேஷ், மொசாம்பிக், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் நடக்கும் கூட்


சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ளது முத்துப்பட்டி என்கிற சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் பிறந்த ஒரு பெண், இயற்கை வேளாண்மை தொடர்பாக பங்களாதேஷ், மொசாம்பிக், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் நடக்கும் கூட்டங்களில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து
கொள்கிறார்.
அவருடைய கிராமத்தில் உள்ள 60 ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பயிர் செய்கிறார். ஆனால் அவர் படித்ததோ எம்.ஏ., வரலாறு. மிகவும் வித்தியாசமான அந்தப் பெண் ராஜரீகா. அவரிடம் பேசினோம்.
""எங்களுடைய ஊர், அறுபது வீடுகளே உள்ள சிறிய ஊர். அப்பா ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். நான் பள்ளியில் செகண்டரி கிரேடு ஆசிரியை. திருமணம் ஆன பிறகு மதுரை அண்ணாநகரில் வீடு. டாக்டர் செüந்தரபாண்டியன் எனது கணவர்.
பல நோய்களுக்குக் காரணம் நாம் உண்ணும் உணவுதான். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொண்டு பயிரிடப்பட்ட உணவுகளை உண்பதால் நமக்குப் பல நோய்கள் வருகின்றன. கிராமங்களில் உள்ளதைப் போல நல்ல காற்று நகரங்களில் கிடைப்பதில்லை. இதனாலும் அதிக நோய்கள் வருகின்றன. மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. என்ன செய்வதென்று நானும் என் கணவரும் யோசித்தோம். நம் அளவில் ஏதாவது செய்ய வேண்டும் நினைத்து எனது பிறந்த ஊரான முத்துப்பட்டியில் 60 ஏக்கர் நிலம் வாங்கினோம். அது அப்போது காடு போல இருந்தது. காட்டைத் திருத்தி விவசாயம் செய்யும் நிலமாக்கினோம்.
ஆனால் எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. இயற்கை வேளாண்மை பற்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எழுதிய புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். நேரிலும் அவரைச் சந்தித்துப் பேசினேன். அவருடன் பழகியதன் காரணமாக, இந்திய இயற்கை வேளாண்மைக் கழகத்தின் தொடர்பு கிடைத்தது. இப்போது அந்த அமைப்பில் நான் தேசிய செயற்குழு உறுப்பினர். அந்த அமைப்பின் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் இடங்களுக்குச் சென்று அவற்றை நேரில் பார்த்தேன். போபால், வார்தா, கோவா ஆகிய ஊர்களுக்கு இந்த இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொள்வதற்காகவே சென்றேன்.
அப்புறம் நானாகவே இயற்கை வேளாண்மை முறையைச் செய்து
பார்த்தேன்.
மா, நெல்லி, கத்தரி, வெண்டை, தக்காளி, பச்சை மிளகாய், அன்னாசிப் பழம், முந்திரி, சப்போட்டா போன்றவற்றை இயற்கை வேளாண்மை முறையில் எங்கள் நிலத்தில் பயிர் செய்கிறோம். எங்கள் வீட்டுத் தேவைக்கு நெல்லும் பயிர் செய்கிறோம்.
இயற்கை வேளாண்மை முறையில் முக்கியமானது பஞ்சகவ்யம். மாட்டுச் சாணம், கோமியம், தயிர், பால், நெய் இவற்றை உரிய முறையில் கலந்து 18 நாட்கள் கழித்து 1 பங்கு பஞ்சகவ்யத்துக்கு 10 பங்கு தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். தண்ணீர் பாய்ச்சும்போதும் கலக்கலாம்.
பூச்சிக் கொல்லி மருந்துகளையும் கூட இயற்கை வேளாண்மை முறையில் தயாரிக்கலாம். ஆமணக்குக் கொட்டை அல்லது ஆமணக்குப் புண்ணாக்கு, நாட்டு வாழைப்பழம், கோமியம் ஆகியவற்றைக் கலந்து மண் பானை அல்லது பிளாஸ்டிக் பானையில் வைத்து மரத்துக்கு அடியில் வைக்க வேண்டும். சிறிதுநாள் கழித்து அந்த வாசனைக்கு வண்டு "எங்கேன்னு' தேடி வந்து இந்தக் கலவையில் விழுந்து உயிரைவிடும்.
அதுபோல இன்னொன்று இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மாட்டுக் கோமியம் கலவை. இவற்றைக் கலந்து 3 நாட்கள் கழித்து வடிகட்டி அதில் காதி சோப், தண்ணீர் கலந்து பயிர்களில் தெளித்தால் பூச்சிகள்
அண்டாது.
வராககுணபஜலம் என்ற ஒன்றைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? அது பன்றியின் மாமிசம், எலும்பு ஆகியவற்றால் செய்யக் கூடியது. நல்ல உரம். ஆனால் எல்லாவற்றிலும் கோமியம் சேர்க்க வேண்டும்.
இன்னும் நிறைய முறைகள் உள்ளன. நானே இவற்றை எல்லாம் சொந்தமாகக் கற்றுக் கொண்டு என்னுடைய விவசாயத்தில் பயன்படுத்தி
வருகிறேன்.
எங்களுடைய நிலத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை மதுரை, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் உள்ள இயற்கை வேளாண்மைப் பொருட்களை விற்கும் கடைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். சிவகங்கையிலும் விற்பனை செய்கிறோம். இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளையும், பழங்களையும், தானியங்களையும் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு என்னாலான சிறு பணி இது'' என்கிறார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...