

திருச்சி எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நடந்து முடிந்த "வெளிக்காற்று உள்ளே வரட்டும்' என்ற தலைப்பிலான இளம் தலைமுறைக்கான ஐந்து நாள் பயிலரங்கின் ஒரு பகுதி பரீக்ஷா ஞாநியின் "வட்டம்' நாடகம்.
வழக்கமான நாடகங்களைப் போல அல்லாமல் புதுமையாகத் தொடங்குகிறது "வட்டம்'. வட்டமாக அமர்ந்து-
"வாழ்க்கை என்பது சுழலும் வட்டம்
நேற்று படித்தது நாளைய வட்டம்
அன்று உயர்ந்தது பின்னர் கவிழும்- வட்டம்
ஒவ்வொரு மனதிலும் எத்தனைத் திட்டம்
ஆளுக்கொரு விதம் அமைப்பார் வட்டம்
அவரவர் வட்டம் அவரைப் போற்றும்- வட்டம்...'
பாடலைப் பாடும் குழுவினரைச் சூழ்ந்த இன்னொரு கூட்டம் "சீக்கிரம் நாடகத்தைத் தொடங்குங்க' என்கின்றது.
"நீங்க பார்க்காததுக்கு முன்னாடியும் நாடகம் நடந்துகிட்டுதான் இருக்குது, பார்த்துமுடித்த பிறகும் நாடகம் நடந்துகிட்டுதான் இருக்குது' என்கிறது அந்த வட்டம்.
விவசாயிகளின் நிலத்தை பெருமுதலாளிகள் "இறால் பண்ணை' வைக்க முயற்சிக்கிறார்கள். நிலம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை பஞ்சாயத்துக்கு வருகிறது. பஞ்சாயத்துதாரர்கள் "திருடி முனியம்மா' நாடகம் நடக்கிறது. பார்த்துவிட்டு வருவோம் என்று அனைவரையும் அழைத்துச் செல்கிறார்கள்.
நாடகத்துக்குள் ஒரு நாடகம், அதுதான் "திருடி முனியம்மா'. சிப்பாய்களுடன் வலம் வருகின்றனர் பெரியதுரை, சின்னதுரை (குறுமன்னர்கள் அல்லது ஜமீன் என்று வைத்துக் கொள்ளலாம்!). பெரிய துரையை சின்னதுரை ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் கொன்றுவிடுகிறார்.
பெரிய துரையின் ஆண் குழந்தையை எடுத்துக் கொண்டு தப்பிக்கும் வேலைக்காரி கன்னியம்மாதான் இந்த நாடகத்தின் கதாநாயகி (அப்படி நாடகத்தில் சொல்லவில்லை). அரசரிடம் வேலைபார்க்கும் சிப்பாய் வீராசாமி, கன்னியம்மாவின் காதலன்- நாயகன்.
திருடி முனியம்மா என்பவர் புரட்சிக்காரர்களின் மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி. துரையின் குழந்தை வழக்கு உள்பட சில வழக்குகளில் திருடி முனியம்மா அளிக்கும் தீர்ப்புதான் நாடகத்தின் "கிளைமாக்ஸ்'.
தற்போதைய அரசியல் கூத்துகளையும், சமூக அவலங்களையும் நாடகத்தில் வெளிப்படையாகவும், இலைமறை காயாகவும் சுட்டியிருக்கிறார் நாடகத்தின் இயக்குநர் எழுத்தாளர் ஞாநி.
பெரியதுரை, சின்னதுரை ஆகியோரின் அவையில் ஒரு மெத்தப்படித்தக் கூட்டம் "வளர்ச்சித் திட்டம்' என்ற பெயரில் பெரிய வரைபடத்தைக் காட்டி அளந்து கட்டுகின்றனர். 144 மேம்பாலங்கள், நீர் வீழ்ச்சிகள் என ஆகா ஓகோவென இருக்கிறது திட்டம். கண்களுக்கு எரிச்சலூட்டும் குடிசைகளை அகற்றிவிட வேண்டும் என்கிறார் ஒரு வசனத்தில் பெரியதுரை!
பெரியதுரையை சிறைப்படுத்திக் கொன்றுவிட்டு, ஆட்சியைப் பிடிக்கிறார் சின்னதுரை. அப்போது பெரியதுரையின் வேலைக்காரி கன்னியம்மா, குழந்தையைப் பாதுகாக்கும் முயற்சியாக ராணுவத்தில் சேர விருப்பமில்லாமல் நோய்வாய்ப்பட்டவனாக நடிக்கும் ஒருவனைத் திருமணம் செய்து கொள்கிறார்.
கன்னியம்மா வளர்க்கும் குழந்தை யாருடையது? இந்தக் கேள்விதான் திருடி முனியம்மாவின் நீதிமன்றத்தில் வழக்காக வருகிறது. அதுதான் கிளைமாக்ஸ். அதுசரி, "திருடி முனியம்மா' எப்படி நீதிமன்றத்தில் நீதிபதியானார்?
புரட்சிக்காரர் ஒருவரை சிப்பாய்களிடமிருந்து காப்பாற்றியதற்காக, அந்த நாட்டில் புரட்சி வெடித்து அரசப் பதவிகள் பிடுங்கப்பட்டபோது, கைமாறாக திருடி முனியம்மாவை நீதிபதியாக்கிவிட்டனர்!
ஆண் குழந்தை இருந்தால்தான் துரையின் சொத்துகள் தனக்குக் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் முனியம்மாவிடம் முறையிடும் துரையம்மாவுக்கு "டோஸ்' கிடைக்கிறது. "அது என்ன ஆண் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கா? பெண் குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு உண்டுன்னு எழுதுயா' என்கிறார் குமாஸ்தாவிடம் முனியம்மா.
சொத்து குறித்து எதுவும் யோசிக்காமல், குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அதை எடுத்து வந்து, காப்பாற்றப் போராடும் கன்னியம்மாவிடமே குழந்தை ஒப்படைக்கப்படுகிறது.
""ஜெர்மன் நாடகத்தைத் தழுவி, முற்றிலும் தமிழ் நாடகச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட நாடகம் இது. நாடகத்தில் நடித்து வரும் யாரும் தொழில் முறைக் கலைஞர்கள் அல்ல'' என்றார் ஞாநி.
திருச்சியில் நடைபெற்ற நாடகத்தில் பள்ளி ஆசிரியர், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் நால்வர், பரிசோதனைக் கூட பணியாளர், வங்கிப் பணியாளர், பொறியாளர்களும் பங்கேற்றனர். ஏறத்தாழ 13 ஆண்டுகளில், 30 முறை நடத்தப்பட்டுள்ளது இந்த நாடகம்.
நாடகத்தின் ஓரிடத்தில், "தஞ்சாவூரை துபாய் ஆக்க வேண்டாம், வேண்டுமானால் துபாயை தஞ்சாவூர் ஆக்க வேண்டியதுதானே?' எனக் கேட்கிறார் பொதுஜனம். பிளஸ் 1 மாணவர்களுக்கும் ஏதோ புரிந்திருக்கிறது. கைத்தட்டல் ஏராளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.