கழுகுமலைக்குச் சென்ற கல்லூரி மாணவர்கள்!


"சித்திரமும் கைப்பழக்கம்' என்ற உடனேயே, இது ஏதோ ஓவியப் பயிற்சி தருவதற்காக அடிப் போடுகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இது திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் கலை தொடர்பான ஓர் அமைப்பின் பெயர்.
இந்த அமைப்பினர் இந்த மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை இன்பச் சுற்றுலா போல ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
சென்ற இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை. பாறைகளில் ஏறிக்கொண்டும், குதித்துக் கொண்டும் "காச்மூச்'சென்று கத்திக் கொண்டும் மாணவர்கள் கழுகுமலையில் சுற்றித் திரிந்தனர்.
ஏனிந்தச் சுற்றுலா? கல்லூரி மாணவ, மாணவிகளை கழுகு மலைக்கு அழைத்துச் சென்ற அனுபவங்கள் எவை? என்று "சித்திரமும் கைப் பழக்கம்' அமைப்பின் செயலாளர் கே.பி.கதிரவவேலிடம் கேட்டோம்.
""கடந்த சனியன்று (13.10.12) காலை 7.30 மணிக்கு எண்பதுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியருடன் ஒரு பஸ், 2 வேன்களில் எங்கள் பயணம் தொடங்கியது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல்துறை மாணவர்கள், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் மாணவர்கள், திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் பஸ்களில் நிரம்பி வழிந்தார்கள். திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ.தூரத்தில் உள்ள கழுகு மலைக்கு காலை 10.00 மணிக்கு எல்லாம் போய்விட்டோம்.
போன உடனேயே மாணவர்கள் எல்லாருக்கும் சொல்லிவிட்டோம்: "நீங்கள் உங்கள் விருப்பத்துக்குச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள். ஆனால் ஒன்று, எவற்றையெல்லாம் பார்த்தீர்கள்? அவற்றைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று சொல்ல வேண்டும்' என்று சொன்னவுடனேயே மாணவ, மாணவிகள் மத்தியில் "ஓ' என்ற குரல் வந்தது. குரூப் குரூப்பாக பிய்த்துக் கொண்டு போனார்கள்.
அப்படி இப்படி சுற்றிப் பார்த்துவிட்டு 3 மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள். உடலின் சோர்வு முகத்தில் லேசாகத் தெரிந்தாலும், அதை அமுக்கும்விதமாக உற்சாகம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
ஒவ்வொருவராக வந்து அவர்கள் பார்த்த சிற்பங்கள், கல்வெட்டுகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த அளவுக்குச் சொன்னார்கள். அதற்குப் பின்பு அவர்களை அழைத்துச் சென்ற எங்களின் பணி ஆரம்பமானது.
"இந்தச் சிற்பங்களை வெறும் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாக மட்டும் பார்க்க முடியாது. இது நமது முன்னோர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தைக் காட்டுகிறது' என்று நான் ஆரம்பித்ததுமே புரியாமல் பார்த்தார்கள்.
"நமது முன்னோர்கள் பாறைகளை உடைத்து கலைப்படைப்புகளைச் செய்தார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைப் பார்வையைக் காட்டுகிறது. நாம் கல்குவாரிக்காகப் பாறைகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். இது நமது வாழ்க்கைப் பார்வையைக் காட்டுகிறது. பல தலைமுறையினருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நமது முன்னோர்கள் சிற்பங்களைச் செதுக்கி வைத்தார்கள். மரம் வளர்ப்பது முதல் கலைப் படைப்புகளை உருவாக்குவது வரை இந்தக் கண்ணோட்டத்தில்தான் அவர்கள் செயல்பட்டார்கள்' என்றேன்.
எங்களுடன் வந்திருந்தார் ஓவியர் சந்ரு. அவருடைய பேச்சு, பிற இடங்களில் காணப்படுகிற சிற்பங்களுக்கும் இங்கு காணப்படுகிற சமணச் சிற்பங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொன்னது. சிற்பங்களின் அழகியல் சார்ந்த விளக்கங்களை அவர் கோட்டோவியங்களாக கடகடவென வரைந்து மாணவர்களுக்கு விளக்கியதும் மாணவர்கள் முகத்தில் ஒளி.
இந்தச் சிற்பங்களைப் பற்றி பல்வேறு கோணங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே நாங்கள் அவர்களை அங்கே அழைத்துப் போனோம்?
தொல்லியல் அலுவலர் செ.மா.கணபதியும் எங்களுடன் வந்திருந்தார். அவர் கழுகு மலைச் சிற்பங்களைப் பற்றி புட்டு புட்டு வைத்தார்.
"இங்குள்ளவை கி.பி. 8 -9 நூற்றாண்டின் பாண்டியர் காலச் சிற்பங்கள். எல்லோரா சிற்பங்களுக்கு இணையானவை. ஆண்களும், பெண்களும் தங்கிப் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளை அந்தக் காலத்திலேயே நடத்தியிருக்கிறார்கள் என்பதை இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. வானியல், சோதிடம், கணிதம், மருத்துவம் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதில் முக்கியமானது என்னவென்றால், இன்றைக்குப் போலவே அந்தக் காலத்திலும் மாணவிகள் அதிக அளவில் படித்திருக்கிறார்கள்' என்று அவர் சொன்னபோது மாணவிகள் மத்தியில் உற்சாகக் குரல்.
நாங்கள் பேச்சை நிறுத்தியபோது மாணவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.
"நான் இந்தக் கழுகுமலையைச் சேர்ந்தவன். இந்தச் சிற்பங்களை என் சிறுவயதில் இருந்து பார்த்திருக்கிறேன். இன்றுதான் இவற்றின் அருமையைத் தெரிந்து கொண்டேன்' என்று உணர்ச்சிவசப்பட்டார் ஒரு மாணவர்.
"நாங்கள் இதுவரைக்கும் இந்தச் சிற்பங்களை வெறும் சிற்பங்களாகத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் தெரிந்து கொள்ள இவ்வளவு செய்திகள் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை' என்றார் இன்னொரு மாணவர்.
"எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்தச் சுற்றுலாவில் பங்கெடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்ட போது, இவ்வளவு சிறப்பாக இந்நிகழ்ச்சி நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை' என்றார் தூய சவேரியார் கல்லூரியின் காட்சித் தொடர்பியல்துறைத் தலைவர் கோவிந்தராஜ்.
"சிற்பங்கள் நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற செல்வங்கள். அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது' என்றார் ஒரு மாணவி கீச்சுக் குரலில்.
மலையைவிட்டுக் கீழே இறங்கி வந்தோம். மலையின் கீழே குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. சமணக் கோயில்தான் என்று நினைத்தோம். ஆனால் உள்ளே முருகப்பெருமான் வீற்றிருந்தார். சிலர் சாமி கும்பிட, சிலர் அங்குமிங்கும் வேடிக்கை பார்க்க, கடைசியில் பஸ்ஸிலும் வேனிலும் எங்களைத் திணித்துக் கொண்டு திருநெல்வேலிக்குத் திரும்பினோம்'' என்றார் கே.பி.கதிரவவேல்.
சித்திரம் கைப் பழக்கம். சுற்றுலா? கால் பழக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...