எயட்ஸ் பீச்சில் எம்.எல்.ஏ. பெசரட்டூ!

சென்னை மெரீனா கடற்கரையில்தான் மக்கள் கூட்டம் கச...கச...ன்னு இருக்குமென்று நினைத்துக் கொண்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு போனால் அங்கேயும் ஒரே
Updated on
2 min read

சென்னை மெரீனா கடற்கரையில்தான் மக்கள் கூட்டம் கச...கச...ன்னு இருக்குமென்று நினைத்துக் கொண்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு போனால் அங்கேயும் ஒரே கூட்டம். கார்களிலும், பைக்குகளிலும் ,கூட்டம், கூட்டமாக பறந்து கொண்டிருந்தனர்.
 ஆண்களும், பெண்களும், குஞ்சும், குளுவானுமாக (அதாங்க குழந்தைகள்) எங்கே இப்படி போகிறார்கள் என்று பின்னாலேயே போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அங்கே மூன்று நாள்கள் திருவிழா ஒன்று நடந்து கொண்டிருந்தது.
 திருவிழா என்றால் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை எல்லாம் கிடையாது. இது "தெரு உணவு திருவிழா'வாம்.
 கடற்கரை மணலில் பல வண்ணங்களில் துணிக் கொட்டகை போட்டிருந்தனர். தெருவிலும், சாலையோரத்திலும் சின்னச் சின்ன கடைகளில் சுடச்சுட செய்து பரிமாறுவார்களே, அந்த திண்பண்டங்களையும், உணவு வகைகளையும் இந்த துணிக் கொட்டகைகளில் செய்து கொடுக்கிறார்கள் என்றனர்.
 நுழைவு வாசலிலேயே ஏகப்பட்ட கூட்டம். உள்ளே போக வேண்டும் என்றால் ஆளுக்கு 100 ரூபாய் டிக்கெட் என்றார்கள். அந்த ரூபாய்க்கும் உணவு வகைகளை ருசி பார்க்கலாம்.
 மேலும், தேவைப்பட்டால் உள்ளே பணம் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். 100 ரூபாய் கொடுத்துவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் மூக்கைத் துளைக்கும் மசாலா வாசனை. நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வகை வகையான பல ஐயிட்டங்கள். இனிப்பு, காரம், மட்டன், சிக்கன், பொறித்தது, வறுத்தது, சுட்டது,சூடா, குளிர்ச்சியா என வகைவகையாக வாங்கி சுவைத்துக் கொண்டிருந்தனர்.
 அது மட்டுமல்ல, ஐஸ் கோலா, பாதாம் கீர், காபி, டீ, கேக் என அது ஒரு பக்கம். உள்ளே வந்தவர்கள் வாய்க்கும், வயிற்றுக்கும் வஞ்சனை இல்லாமல் போட்டி போட்டு வாங்கி சுவைத்துக் கொண்டிருந்தனர்.
 தெரு உணவு திருவிழா என்றால் தமிழ்நாட்டுத் தெருக்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மட்டுமல்ல. ஆந்திரா, கேரளம், ராஜஸ்தான், டில்லி, குஜராத், ஜம்மு. கொல்கத்தா, மும்பை, புதுச்சேரி என பல மாநில தெருக்களிலும் கிடைக்கும் உணவு வகைகளை சென்னை வாழ் மக்கள் ருசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர் ரோட்டரி சங்கத்தினர்.
 நாக்கு ஆசைப்பட்டாலும், தெருவில் நின்று நாலு பேர் பார்க்கும்படியாக வாங்கித் தின்ன முடியுமா? என ஏங்கும் மேல்தட்டு மக்களுக்கு மகா வேட்டைதான்!
 என்ன ஒன்று, மலிவாக விற்கப்படும் தெரு உணவாக இருந்தாலும் இங்கே விலைதான் சற்று அதிகம் என வந்தவர்கள் அலுத்துக் கொண்டனர். ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 20, ஒரு காபி ரூ. 20 என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒரு சாதாரண தோசை ரூ. 50-க்கு விற்றார்கள். அதுவே மசாலா தோசையாக இருந்தால் ரூ. 60. குஜராத் டோக்லா-என்று ஒரு பண்டம். அது ரூ. 30. ஒரு ஐஸ் கோலா ரூ. 40. ரெண்டே ரெண்டு ஜிலேபி ரூ. 30. அதை விடுங்க. 50 கிராம் இருக்கும், திருநெல்வேலி அல்வா ரூ. 30 என்றார்கள். இதுவே இப்படி என்றால் அள்ளி போட்டால் நாலு வாய்க்கு கூட காணாத ஆம்பூர், திண்டுக்கல், ஐதராபாத் பிரியாணி வகைகளின் பொட்டலங்களின் விலையை கேட்பீர்களா என்ன? அதுவும், கடையில் தொங்க விடப்பட்டுள்ள சிலேட்டில் கூட்ட நிலவரத்தை பொறுத்து அவ்வப்போது விலையை அழித்து அழித்து மாற்றி மாற்றி எழுதுகிறார்களே என சிலர் பர்சை தடவிப் பார்த்துக் கொண்டே சொன்னதையும் கேட்க முடிந்தது.
 எல்லா கடைகளிலும் கூட்டம்தான். ஆனாலும் கேரள தெரு உணவு கடைகளுக்கு ஏக கிராக்கி. புட்டு-கடலை,இடியாப்பம்-கடலை கறி, இலை அப்பம், பழ பஜ்ஜி போன்ற ஐயிட்டங்கள் பறந்து கொண்டிருந்தன.
 ஆந்திரா கடைக்கு முன்பு ஒரு பெரிய கூட்டம். எம்.எல்.ஏ. பெசரட்டூக்கு டோக்கனை கொடுத்து விட்டு காத்திருந்தனர். பெசரட்டூதானே உண்டு, அது என்ன எம்.எல்.ஏ.பெசரட்டூ? வேறு ஒன்றுமில்லை, நம்மூர் அடை தோசைதான். அடை தோசை மஞ்சள் கலர்ல இருக்கும். பெசரட்டு பச்சை கலர்ல இருக்கு. தோசை மாவில் உளுந்துக்கு பதிலாக பாசிப் பயறு போடுவதாக கூறினர். பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் காரம் தூக்கலாக இருக்கிறது. நாம் அடைக்கு அவியல் சேர்த்துக் கொள்வது போல, வெங்காயம், காரட் தூவலை சேர்த்துக் கொடுக்கிறார்கள். அதுதான் எம்.எல்.ஏ. பெசரட்டூவாம்! மூன்று நாள்களாக சென்னை வாசிகளுக்கு ஒரே ஆ...ஆ...ஆ...போடும் கொண்டாட்டம்தான்.
 ரோட்டரி சங்கத்தின் "மகிழ்ச்சியான கிராமம்' என்ற திட்டத்திற்காக அக்டோபர் 12, 13,14 ஆகிய 3 நாள்கள் நடத்தப்பட்ட இந்த அறுசுவை திருவிழா மூலம் வசூலாகும் நிதியை கிராமங்களில் கழிப்பிடம் கட்டவும், இதர நலத்திட்டங்களை செயல்படுத்தவும் செலவழிக்க உள்ளோம் என ரூ. 100 கொடுத்து உள்ளே செல்வோரை சமாதானம் செய்து கொண்டிருந்தனர் ரோட்டரி நிர்வாகிகள். நல்ல நோக்கம்தான் நிறைவேற்றட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com