குறையும்; ஆனா குறையாது!

உடல் எடையைக் குறைப்பதற்காக இன்று பல பேர் ஒற்றைக் காலில் தவம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறையும்; ஆனா குறையாது!

உடல் எடையைக் குறைப்பதற்காக இன்று பல பேர் ஒற்றைக் காலில் தவம் மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்கு இதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடாதீர்கள் என்று டி.வி., ரேடியோ, இணையதளம், நாளிதழ், பக்கத்துவீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் என ஆளாளுக்கு ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் மனோதத்துவ ரீதியாக இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவது?

நான் அதிகமாக சாப்பிடுவதில்லை, ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்கான மனோதத்துவ ரீதியிலான ஆலோசனை:

உடற்பயிற்சி: உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி அதிக அளவிலான கலோரிகளை எரித்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி குறைவான கலோரிகளையே குறைத்திருக்கும்.

தூக்கம்: குறைவான தூக்கம் மேற்கொண்டு அதிகாலையிலே எழுந்து உடற்பயிற்சி செய்பவர்கள் உண்டு. உடற்பயிற்சிக்காக தூக்கத்தைத் தொலைக்கக் கூடாது. சரியான தூக்கமில்லாமல் உடற்பயிற்சி மேற்கொண்டால், வளர்சிதை மாற்றம் குறைந்து, அதிகம் பசி எடுக்க ஆரம்பிக்கும். பசி எடுத்தால் சாப்பிடுவது அதிகரிக்கும்; எனவே,உடல் எடையும் அதிகரிக்கும்.

அதிக உணவு: "சத்தான உணவுகளைத்தான் சாப்பிடுகிறேன். எடை குறைவதற்கான சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் எடை குறையவில்லை' என்பவர்கள், தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டும். சத்தான உணவாக இருந்தாலும், அதிகமாக உட்கொண்டால் எடை தானாக அதிகரிக்கும்.

குறைவான உணவு: அதிகமாக சாப்பிட்டால் தானே எடை அதிரிக்கும். குறைவாக சாப்பிடுவோம் என்று நினைத்தால் அதுவும் தவறுதான். அவரவரின் உடலுக்கென்று குறிப்பிட்ட அளவு சாப்பாட்டை உட்கொள்ள வேண்டும். அதைவிட குறைவாகச் சாப்பிட்டால் வளர்சிதை மாற்றம் குறைந்து, உடல் எடை கூடிவிடும்.

குளிர்பானங்கள்: சாப்பாட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் தினந்தோறும் குடிக்கும் பானங்கள் உடல் எடையைக் கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மது அருந்துவதினால் அதிக கலோரிகள் உடலில் சேர்கின்றன. அதே போன்று குளிர்பானங்கள், "ஸ்மூதீஸ்' எனப்படும் விலையுயர்ந்த உணவகங்களில் காணப்படும் பானங்களும் கலோரிகளை அதிகரிக்கிறது. சாப்பாட்டைப் போன்று குடிக்கும் பானங்களிலும் கவனம் செலுத்துங்கள். சர்க்கரை அதிகமாக உள்ள பானங்களை தவிர்த்துவிடுங்கள்.

உடல் எடையைக் குறைக்க மனோதத்துவ ரீதியிலான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உடல் பருமனானவர்களைக் கொண்டு பரிசோதனை செய்த பிறகே முடிவை அறிவித்துள்ளனர்.

கண்ணாடி முன்: உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கண்ணாடி முன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுபவர்கள், தானாக உணவின் அளவை குறைத்துவிடுவார்களாம். சாப்பிடும்போது அவரவரின் உடல் பருமனைப் பார்த்தால், அது உளவியல் ரீதியாக பாதித்து, அவர்கள் உணவின் அளவைக்

குறைப்பார்கள்.

இரு பாலினத்தவரும்: அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் மதியம் சாப்பிடப் போகும்போது ஆண், பெண் இருபாலினத்தவரும் சேர்ந்தே சாப்பிடுதல் நலம். எதிர் பாலினத்தவர் உடன் இருக்கும்போது அதிகம் சாப்பிடத் தோன்றாது என்கிறது ஆய்வு.

பணம் கொண்டு... வெளியில் சாப்பிடச் செல்லும்போது பணத்தைக் கையில் எடுத்துச் செல்லுங்கள். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டையெல்லாம் பயன்படுத்த வேண்டாம். கையில் இருந்து பணத்தைக் கொடுத்துச் சாப்பிட்டால்தான், எவ்வளவு தேவையோ அதை மட்டும் வாங்குவோம். கார்டில் "ஸ்வைப்' செய்தால் தேவையில்லாததையும், உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருள்களையும் அதிகம் வாங்குவோம் என்கிறது உளவியல் ஆராய்ச்சி.

வேண்டாம் நைட்-ட்ரெஸ்: வீட்டில் சாப்பிடும்போது ஓய்வு நேரத்திற்கு அணியும் தொள தொள ஆடைகளை அணிந்து சாப்பிட வேண்டாம். ஏனென்றால் அவ்வாறு தொள தொள ஆடைகளினுள் நாம் மெலிந்து தெரிவோம். அதனால் அதிக அளவில் சாப்பிடத் தோன்றுமாம். எனவே நம் அளவிற்கு சரியாகப் பொருந்தும் ஆடைகளை அணிந்து சாப்பிடுங்கள்.

நீல நிறம்: பொதுவாக வீட்டு உள்சுவர்களுக்கு வெளிர் நீல நிற வண்ணத்தை அடிப்பதுண்டு. ஏனென்றால் அது மனதிற்கு அமைதியைத் தரும் நிறம். நீல நிறத்திற்கு உடல் எடை குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது. வெளிர் நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பசியை அடக்குகிறது. மாறாக மஞ்சள், சிவப்பு நிறங்கள் பசியைத் தூண்டுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆகவே சுவர், சாப்பாட்டு மேஜை விரிப்பு என சாப்பாட்டு சம்பந்தப்பட்டவற்றை நீல நிறமாக மாற்றலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com