நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அஞ்சறைப் பெட்டியில் இருந்து வங்கிக்கு...!

அரசுத் துறை சார்பில் நாட்டின் முதலாவது பாரதிய மகிளா வங்கி கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஏழு கிளைகளுடன் தொடங்கப்பட்ட

News image
Updated On :15 டிசம்பர் 2013, 2:53 am

வே.சுந்தரேஸ்வரன்

அரசுத் துறை சார்பில் நாட்டின் முதலாவது பாரதிய மகிளா வங்கி கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஏழு கிளைகளுடன் தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைவர் - மேலாண்மை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த உஷா அனந்தசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.
 வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர் வங்கியின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது, கிளைகளைத் தொடங்குவது, வாடிக்கையாளர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது போன்ற சவாலான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார். உஷா சொல்கிறார்:
 ""நான் பிறந்தது, படித்தது எல்லாம் சென்னைதான். கணவர் எஸ்.என். அனந்தசுப்பிரமணியன் மும்பையைச் சேர்ந்தவர். அவர் தற்போது இந்திய கம்பெனி செக்ரட்டரீஸ் நிறுவனத்தின் (ஐசிஎஸ்ஐ) தலைவராக உள்ளார். எனது பணியை எல்.ஐ.சி. நிறுவனத்தில் ஆரம்பித்தேன். அதன்பிறகு, பேங்க் ஆஃப் பரோடாவில் 29 ஆண்டுகள் பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.
 இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது பாரதிய மகிளா வங்கி ரூ.1,000 கோடி நிதியில் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, வங்கி செயல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வங்கி ஏற்படுத்தப்பட்டது. அதற்காக ஒரு நிர்வாகக் குழுவும் ஏற்படுத்தப்பட்டது. என்னை வங்கியின் தலைவர், மேலாண்மை இயக்குநராக நியமித்திருக்கிறார்கள். வங்கியை உருவாக்குவதற்கான பணி ஜூன் 13 தொடங்கி மூன்று மாதங்களுக்குள்ளாகவே சிறந்த முறையில் முடிக்கப்பட்டது. நவம்பர் 19-ஆம் தேதி 7 கிளைகளுடன் வங்கி தொடங்கப்பட்டது. அதாவது, மிகக் குறுகிய காலத்தில் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு வங்கியாகும் இது.
 இந்தியாவில் குவாஹாட்டி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரூ, ஆமாதாபாத், லக்னோ, மும்பை, தில்லி, இந்தோர் ஆகிய இடங்களில் வங்கியின் கிளைகள் உள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 16 கிளைகளைத் திறக்கவும், 2015-ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் மேலும் 55 கிளைகளைத் திறக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. டேராடூன், ஜெய்ப்பூர், ஷில்லாங் உள்பட எல்லா மாநிலங்களின் தலைநகரிலும் கிளைகள் திறக்கப்பட உள்ளன.
 மகிளா வங்கியில் பெரும்பான்மை ஊழியர்கள் பெண்களாக இருப்பார்கள். வங்கியின் பாதுகாப்பு அதிகாரிகூட ஒரு பெண்தான். பெண்களுக்கு எவ்வளவு அதிக வாய்ப்பு அளிக்க முடியுமோ அந்த அளவுக்கு அளிக்கப்படுகிறது.
 ஒவ்வொரு பெண்ணும் அவரவர் குடும்ப வருவாய்க்கு ஏற்ப சேமிக்கின்றார். ஆனால், வங்கிக் கிளைகளில் சேமிக்க வருவதற்குதான் வெட்கப்படுகின்றனர். நகர்ப்புற, கிராமப்புறங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலும் இந்த நிலை உள்ளது. பெரிய தொகை தங்களிடம் இருந்தாலும் அதை முதலீடு செய்யவோ, சேமிக்கவோ, கணவரையோ, குடும்பத்தினரையோ, நண்பர்களையோ சார்ந்திருக்கும் நிலைதான் பெண்களிடம் உள்ளது.
 இத்தகைய நிலையில் இருந்து அவர்களை விடுபடச் செய்து வலுவான தடத்தை மகளிருக்கு ஏற்படுத்தித் தருவதுதான் இந்த வங்கியின் நோக்கம். கிராமப்புறங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலும் பெண்களின் சேமிப்பு அஞ்சறைப் பெட்டியில்தான் உள்ளது. அது அஞ்சறைப் பெட்டியுடன் நின்றுவிடாமல் வங்கிக்கு வர வேண்டும். அதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதும் எங்களது விருப்பம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு
 வருகிறோம்.
 சிறு, குறு, நடுத்தர அளவில் தொழிலில் ஈடுபடுவோரும் தொழில்முனைவோர்தான். எனவே தையல் தொழில், கேட்டரிங் சர்வீஸ் உள்பட சிறிய அளவிலான தொழில்களில் ஈடுபடும் பெண்களை ஊக்குவிக்கக் கடன் வழங்கப்படும். சுகாதாரமான பகல்நேர குழந்தைகள் காப்பகங்களைத் தொடங்க முன்வரும் பெண்களுக்கும் கடன் வழங்கப்படும். தவிர, பெண்களுக்கு கல்விக் கடன், வீட்டுக் கடன், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள பெண்களுக்கும் கார் கடன் வழங்கப்படுவதுடன், அக்கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான விழிப்புணர்வு முன் ஆலோசனையும் அளிக்க உள்ளோம்.
 இந்த வங்கிச் சேவை மகளிர் மட்டுமே பயன்படுத்தக்கூடியது அல்ல. அனைவரும் சேவை பெறலாம். ஆனால், மகளிருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்'' என்று முக மலர்ச்சியுடன் கூறுகிறார் உஷா அனந்தசுப்பிரமணியன்.
 - வே.சுந்தரேஸ்வரன்
 படம்: டி.ராமகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.