குடியிருப்பவருக்காகக் காத்திருக்கும் மாளிகை!

திபெத் நாட்டின் தலைவர் குடியிருக்கும் மாளிகைதான் பொடாலா. பொடலகா என்ற மலையின் பெயரைக் கொண்டு இது
குடியிருப்பவருக்காகக் காத்திருக்கும் மாளிகை!

திபெத் நாட்டின் தலைவர் குடியிருக்கும் மாளிகைதான் பொடாலா. பொடலகா என்ற மலையின் பெயரைக் கொண்டு இது பொடாலா மாளிகை என்று பெயரிடப்பட்டது. திபெத்தின் 5-வது தலாய்லாமாதான் இந்த மாளிகையை 1645-ம் ஆண்டு கட்டத் தொடங்கினார். அவரின் மதஆலோசகரின் ஆலோசனையின்படி இந்த மாளிகை கட்டப்பட்டது.

மாளிகை அமைந்துள்ள லாஸா என்ற இடம்தான் இதற்கு ஏற்றது என மதஆலோசகர் தேர்வு செய்தார். அப்போது அந்த இடத்தில் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படும் சிறிய கோட்டை ஒன்று காணப்பட்டது. அதனோடு சேர்த்துதான் இந்த மாளிகை கட்டப்பட்டது. இப்போது அந்த மாளிகை அருங்காட்சியகமாக மாறியுள்ளது.

இந்த மாளிகை நிலநடுக்கம், பூமிஅதிர்வுகளினாலும் பாதிக்கப்படாமல் இருக்க அதன் அடித்தளத்தை மிகவும் உறுதியாக அமைத்துள்ளார்கள். அதற்காக செம்பை உருக்கி அந்த உலோகத் திரவத்தை அடித்தளத்தினுள் ஊற்றியிருக்கிறார்கள்.

இந்த மாளிகையினுள் 1000 அறைகளும், 10,000 சிறிய கோயில்களும், 2 லட்சம் சிலைகளும் உள்ளன. இதன் வெளிப்புறத்தைக் கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனது. ஆனால் அதன் உள்புறத்தைக் கட்டி முடிக்கவும், மாளிகைக்குத் தேவையான மரச்சாமான்கள் போன்றவற்றையெல்லாம் வடிவமைத்து முழுவதுமாக கட்டி முடிக்க 45 ஆண்டுகள் பிடித்தன.

1645-ல் தொடங்கப்பட்ட இந்த கட்டட வேலைகள் 1694-ம் ஆண்டுதான் முடிவடைந்தது. ஆனால் 1649-ம் ஆண்டே தலாய் லாமா அந்த மாளிகைக்குக் குடிவந்துவிட்டார். பணிகள் நிறைவடையும் வரை அவர் அங்கு இருந்த பழைய கோட்டையில்தான் வசித்தார்.

1959-ம் ஆண்டு திபெத்தியர்கள் சீனர்களுக்கு எதிராகப் போர்க்கொடிய தூக்கிய சமயத்தில் ஏற்பட்ட பிரச்னையில் பொடாலா மாளிகை சிறிது சேதமடைந்தது. சீனர்கள் போட்ட வெடிகுண்டு மாளிகையின் ஜன்னல்களை சேதப்படுத்தியது. அதன்பின்பு 1966-ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட கலாசார புரட்சியின் காரணமாக ஏற்பட்ட சண்டையில் இந்த மாளிகை அதிர்ஷ்டவசமாக சேதத்தில் இருந்து தப்பியது. ஆனாலும் சுமார் 1,00,000 புத்தகங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் கலைப்பொருள்கள் அழிந்துவிட்டன. அவை அங்கிருந்து அகற்றப்பட்டதா, சேதப்படுத்தப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.

மாளிகையின் உட்புறத்தில் 13-ம் தலாய்லாமாவின் சமாதி உள்ளது. இந்த சமாதியைப் பார்க்க மாளிகையின் முதல்தளத்தின் வழியாக மட்டுமே நுழைய முடியும். இதனை பார்வையிடச் செல்லும்போது சுற்றுலா பயணியுடன் ஒரு துறவி அல்லது வழிகாட்டி கண்டிப்பாக உடன் வருவார். ஏனென்றால் சமாதிக்கு அருகில் உள்ள 46 அடி ஸ்தூபி விலைமதிக்க முடியாத பொருள்களால் உருவாக்கப்பட்டது. அதாவது 1 டன் தங்கம், விலை மதிப்பற்ற நகைகள் கொண்டு இது அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் காணிக்கையாக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட யானை தந்தங்கள், பளிங்கால் செய்யப்பட்ட சிங்கங்கள், பீங்கானால் செய்யப்பட்ட பூச்சாடிகள் என பல்வேறு பொருள்கள் இந்த சமாதியில் காணப்படுகிறது.  2 லட்சம் முத்துக்களால் உருவாக்கப்பட்ட மண்டலா எனப்

படும் ஆன்மிகச் சின்னம் ஒன்றும் இங்குள்ளது.

1994-ம் ஆண்டு இந்த மாளிகை யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. அதிக அளவில் மக்கள் வந்தால் கட்டடங்கள் சேதமடைந்துவிடும் என்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் 6 மணி நேரம்தான் இந்த மாளிகை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தப் பகுதிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதால் அதிக அளவிலான மக்கள் இங்கு சுற்றுலா வருவார்கள். எனவே எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. இதன் விளைவாக சுற்றுலா சீஸனான ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை தினமும் 6,000 சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பயணிகள் மாளிகைக்குள் நுழைந்தவுடனே "உள்ளே கழிவறைகள் கிடையாது' என்ற வாசகம் இருக்கும். ஆயிரம் அறைகள் இருந்தும் அந்த மாளிகைக்குள் கழிவறை இல்லை. அதே போன்று மாளிகைக்குள் திரும்பிய திசையெல்லாம் இருளைப் போக்குவதற்கு காட்டெருமையின் வெண்ணையால் ஒளியேற்றப்பட்ட விளக்குகள் காணப்படும். தரை முழுவதும் வெண்ணெய் பிசுக்குதான். அந்த விளக்குகளின் அருகில் நடக்கும்போது வழுக்கிவிடாதபடி பயணிகள் கவனமாக நடக்க வேண்டியிருக்கும்.

அந்த மாளிகையின் ஒரு பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுதான் பொடாலா பரிசுப்பொருள்கள் கடை. மாளிகை சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், மாளிகையின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட தபால் அட்டைகள், ஆன்மிகப் பொருள்கள், காட்டெருமை பொம்மைகள் உள்ளிட்டவை அங்கு கிடைக்கும்.

பொடாலாவின் புகைப்படங்கள் எங்கு நோக்கினும் கிடைக்கிறது. ஆனால் தற்போதைய தலாய் லாமாவின் புகைப்படங்கள் எந்தப் பொருளிலும் அச்சிடப்படவில்லை. தலாய்லாமாவின் புகைப்படங்கள் இன்றும் திபெத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.

எந்த மதத்தைச் சேர்ந்தவரும் மாளிகைக்குள் சென்று அங்குள்ள திபெத்திய புத்த வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியும்.

எல்லாம் இருந்தும் அந்த மாளிகை குடியிருப்பவருக்காக காத்துக்கொண்டிக்கிறது என்பது மட்டும் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com