புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜின்னா மாளிகை

பாகிஸ்தான் உருவாவதற்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் மாளிகை மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2013, 9:18 am

அ. குமார்

பாகிஸ்தான் உருவாவதற்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் மாளிகை மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ளது. சுற்றிலும் அடர்ந்த மரங்களுடன் நடுவில் அமைந்துள்ள இந்த பங்களாவின் வெளிவாயிலில் "சவுத் ரஷ்யா சென்டர்
 ஃபார் ஆர்ட் அண்ட் கல்ச்சர்' என்ற பெயர்ப்பலகை காணப்படும். இதுதான் ஜின்னா முப்பதாண்டுகள் வாழ்ந்த வீடாகும். மற்றபடி இந்த வீட்டைக் குறிப்பிட எவ்வித பெயர்ப்பலகைகளும் கிடையாது. சுலபமாக கண்டுபிடிக்க வேண்டுமெனில் "முதல்வரின் வீடு எங்கே?' என்று கேட்டால் போதும். அவரது வீட்டின் எதிரில்தான் ஜின்னா வீடு உள்ளது.
 1993-ம் ஆண்டு வரை இந்த வீட்டை சட்ட ரீதியாக பெறுவதற்காக இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஜின்னாவின் ஒரே மகளான டீனா போராடி வந்தார். பிரிவினைக்குப் பின்னர் ஜின்னா பாகிஸ்தான் சென்ற பிறகு "எவாக்யூ பிராபர்ட்டி ஆக்ட்'-ன் கீழ் இந்திய அரசு அந்த மாளிகையை கையகப்படுத்தியது. டீனா, தந்தையின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டார். பிரபல தொழிலதிபரை மணந்து கொண்டு அமெரிக்க பிரஜையாகிவிட்டார். பின்னர் மீண்டும் வீட்டை முறைப்படி அவரது வாரிசான தன்னிடம் ஒப்படைக்கும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதுவரை எவ்வித முடிவுக்கும் வராமல் இழுபறியாகவே உள்ளது.
 1917-ம் ஆண்டு இந்த வீட்டை விலைக்கு வாங்கிய ஜின்னா பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் கிளைவ் டி பேட்லி உதவியுடன் இரண்டு லட்சம் செலவழித்து புனரமைத்து 1936-ஆம் ஆண்டு குடியேறினார். முஸ்லிம் லீக் கட்சியைத் துவக்கிய இவர் 41 வயது வரை பிரம்மச்சாரியாகவே இருந்தார். பார்சி இனத்தில் பிரபலமான சர் தின்ஷா பாட்டீலின் மகள் ரத்தன் பாயிடம் மனதை பறிகொடுத்தார்.
 அவரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி மரியம் என பெயர் சூட்டித் திருமணம் செய்து கொண்டார். ஜின்னாவின் முன்னோர்களும் பாடியா இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவரது உண்மையான குடும்பப் பெயர் பஞ்சா. ஜின்னா என்பது அடையாளப் பெயர். குடும்பப் பெயரை கைவிட்டு அவர் "ஜின்னா' என்ற பெயரையே பயன்படுத்தத் தொடங்கினார் என்பது வரலாறு.
 அரபிக் கடலைப் பார்த்தபடி 2.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பங்களா 1997-ஆம் ஆண்டு முதல் இந்தியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், ஜின்னாவின் உறவினர்களே வந்தாலும் அனுமதி மறுக்கப்படுகிறது.
 இந்திய சுதந்திர தினத்தின் 60-வது ஆண்டு நிறைவின்போது இதை கலாசார பரிமாற்றங்களுக்காக சார்க் நினைவிடமாக மாற்ற மத்திய அரசு யோசனை தெரிவித்தது. மிகவும் பழுதடைந்த நிலைமையில் இருப்பதால் இதை கான்ட்ராக்ட் விட்டு சீரமைப்பு செய்த பின்னர் இந்தியன் நேஷ்னல் டிரஸ்ட்டிடம் ஒப்படைக்கலாமென திட்டமிட்டனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
 சுதந்திரமடைந்தவுடன் தன்னுடைய வீட்டைப் பற்றி ஜின்னா உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.
 ""அது ஒவ்வொரு செங்கலாகப் பார்த்துக் கட்டிய வீடு. அத்தனை அழகான வீட்டில் வசிக்க யார்தான் விரும்பமாட்டார்கள்? அந்த வீடு ஒரு சிறிய ஐரோப்பிய குடும்பத்தினருக்கோ, நாகரிகமான இளவரசனுக்கோ வசிக்க போதுமானது. மும்பையை நான் மிகவும் நேசித்தேன். மீண்டும் அங்கேயே திரும்ப வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டால் நிச்சயம் வருவேன்'' என்றார்.
 அந்த பங்களாவின் மேல் மாடியில் ஜின்னாவின் குடும்பம் வசித்து வந்தது. அந்த பங்களா வரவேற்பறையில் தான் ஜின்னா, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், நேரு போன்றவர்கள் இந்திய விடுதலைக்காக பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர். 1982-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் உதவி ஹை கமிஷனர் அந்த பங்களாவை பயன்படுத்தி வந்தார். அதன் பின்னர் பொதுப் பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சார்க் நினைவிடமாக மாறியது. இந்திய வரலாற்றில் ஜின்னாவின் பங்களா ஒரு வரலாற்று சின்னம் என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.