குறட்டை விடுவதைத் தடுக்கும் கருவி!

நன்றாகத் தூங்கிவிட்டு வருபவரைப் பார்த்து, ""நல்லா குறட்டைவிட்டுத் தூங்கினாயா?'' என்று கேட்போம். குறட்டைவிட்டுத் தூங்கினால் அது ஆழ்ந்த தூக்கம் என்று
Updated on
2 min read

நன்றாகத் தூங்கிவிட்டு வருபவரைப் பார்த்து, ""நல்லா குறட்டைவிட்டுத் தூங்கினாயா?'' என்று கேட்போம். குறட்டைவிட்டுத் தூங்கினால் அது ஆழ்ந்த தூக்கம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
 ""குறட்டைவிட்டுத் தூங்குபவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை. குறட்டை ஒரு நோய்'' என்கிறார் டாக்டர் எஸ்.ஜெயராமன். சென்னை அமைந்தகரையில் உள்ள ஸ்ரீ ஜெயம் கிளினிக்கில் அவரைச்
 சந்தித்துப் பேசினோம்:
 ""தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும்.
 குறட்டை ஏன் வருகிறது? நாம் மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழல் வழியாக உள்ளே செல்லும் போது தடை ஏற்பட்டால் குறட்டை வரும். அந்தத் தடை ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
 மூச்சுக் குழலில் உள்ள தசைகள் தளர்வடைவதால் அதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து போகும். மூச்சுக்குழலின் உட்புறம் குறுகிவிடும். இதனால் குறட்டை ஏற்படும்.
 சிலருக்கு கழுத்து சிறியதாக இருக்கும். இதனால் கழுத்தின் உட்புறம் கொழுப்பு அதிகமாகப் படியும். இதனாலும் குறட்டை ஏற்படும்.
 சிலருக்கு பிறவியிலேயே கீழ்த்தாடை உட்புறம் வளைந்திருக்கும். இதனால் மூச்சுப் பாதை குறுகலாகிவிடும். இதனால் மூச்சுக் குழலுக்குள் காற்று சென்று வருவதில் பிரச்னை ஏற்படும். இதனால் குறட்டை ஏற்படும்.
 சிறுவர்களுக்கு டான்சில், அடினாய்டு அலர்ஜி காரணமாகத் தொண்டையில் வீக்கம் ஏற்படும். இதனால் மூச்சுப் பாதை குறுகலாகி குறட்டை
 ஏற்படும்.
 எதனால் குறட்டை ஏற்பட்டாலும், அது நன்றாகத் தூங்குவதைக் கெடுத்துவிடுகிறது. சுவாசத்துக்குத் தேவையான காற்று கிடைக்காமல் மூச்சுத் திணறல், மூக்கடைப்பு ஏற்படுகிறது. எனவே குறட்டை விடுபவர்கள் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்வார்கள். சீரான, தொடர்ச்சியான தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள்.
 அவர்களுக்குக் காலையில் எழுந்தவுடன் சோர்வு, தலைவலி ஏற்படும். உடலில் உற்சாகம் இருக்காது. எப்போதும் சுறுசுறுப்பில்லாமல் மந்தமாகத் தூங்கித் தூங்கி விழு
 வார்கள்.
 நன்றாகத் தூங்காததால் உடலின் செயற்பாடுகளில் சிக்கல் ஏற்படும். ஹார்மோன்கள் சீராகச் செயல்படாது. தைராய்டு பிரச்னை, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படும். ஏற்கெனவே இந்த நோய்கள் இருந்தால் நன்றாகத் தூங்காவிட்டால் அவற்றைக் குணமாக்கவும் முடியாது. பகலில் தூங்கி வழிவதால் வேலைகளை நன்றாகச் செய்ய முடியாது. விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
 இதைவிட முக்கியமானது, புற்றுநோய் வருவதற்கானக் காரணங்களில் ஒன்று குறட்டை விடுவது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறட்டைவிடும்போது உடலுக்குத் தேவையான அளவு காற்று கிடைக்காது. இதனால் செல்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. செல்கள் தோன்றுவது, அழிவது, வளர்வது போன்றவற்றில் பிரச்னை ஏற்படுகிறது. புற்றுநோய் ஏற்படக் காரணமாகிவிடுகிறது. எனவே குறட்டைவிட்டுத் தூங்குவதை ஒரு நோய் என்றுதான் சொல்ல வேண்டும்.
 குறட்டை நோயைச் சரி செய்ய வேண்டும்.
 குழந்தைகளுக்கு வரும் குறட்டை, டான்சில், அடினாய்டு வீக்கத்தினால் வருகிறது என்றால், அவற்றை மருந்து, மாத்திரைகளின் மூலம் குணப்படுத்த முயற்சிக்கலாம். முடியாத போது அறுவைச் சிகிச்சை செய்து சரிப்படுத்தலாம். உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கழுத்துப் பகுதியில் கொழுப்பு அதிகமாகப் படிந்திருக்கும். அந்தக் கொழுப்பை லேசர் சிகிச்சையின் மூலமாக அகற்றிவிடலாம். கீழ்த்தாடை உட்புறமாக வளைந்திருப்பவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் தாடையைச் சரி செய்தால், குறட்டை நோய் நீங்கிவிடும். இப்படி எந்தச் சிகிச்சையாலும் குறட்டை விடுவதை சரி செய்ய முடியவில்லை என்றால், குறட்டைவிடுவதைத் தடுக்க ஒரு கருவி உள்ளது. அதைப் பயன்படுத்தலாம்.
 தூங்கும்போது இந்தக் கருவியின் ஒருமுனையில் உள்ள முகமூடியை மூக்கில் பொருத்திக் கொள்ள வேண்டும். கருவியை ஆன் செய்துவிட்டுக் கொண்டு தூங்க வேண்டும். குறட்டை வரவே வராது. இது எப்படி?
 மூச்சுப் பாதையில் தசை அடைத்துக் கொண்டு குறுகலாகிவிடுகிறது. அதனால் குறட்டை வருகிறது. நாம் உள்ளிழுக்கும் காற்று அந்தக் குறுகலான பாதையை விரித்துக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும்; வெளியே வர வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட அளவு காற்றழுத்தம் தேவை. நாம் சாதாரணமாகச் சுவாசிக்கும்போது அந்த அளவுக்குக் காற்றழுத்தம் இருப்பதில்லை. இந்தக் கருவி ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு காற்றழுத்தம் தேவையோ, அந்த அளவு அழுத்தத்துடன் மூச்சுப் பாதைக்குள் காற்றை அனுப்பி வைக்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான காற்று கிடைக்கிறது. எனவே குறட்டைவிடாமல், எந்தத் தடங்கலுமில்லாமல் நன்றாகத் தூங்க ஆரம்பிக்கிறார்கள். குறட்டை விட்டு இவ்வளவு நாட்கள் தூங்கியதால் உடலுக்கு ஏற்பட்ட பல பாதிப்புகள் குணமாக ஆரம்பிக்கின்றன.
 அப்படியானால் வாழ்நாள் முழுக்க இந்தக் கருவியைப் பொருத்திக் கொண்டுதான் தூங்க வேண்டுமா? என்று கேட்கலாம். சில நோய்களுக்கு வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரை, ஊசி போட்டுக் கொள்வதைப் போலத்தான் இதுவும்.
 அதே சமயம் குறட்டை வராமல் தடுக்க, போதிய அளவுக்கு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும். கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை அளவோடு பயன்படுத்த வேண்டும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். மதுப்பழக்கம், புகைப் பழக்கம் போன்றவற்ரைக் கைவிட வேண்டும். தூக்க மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது. இவற்றையெல்லாம் சரியாகச் செய்து வந்தால் குறட்டை நோயை விரட்டிவிடலாம்'' என்கிறார் டாக்டர் ஜெயராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com