ஆகாயத் தாமரையை  அழிக்க ஒரு மருந்து!

மனிதர்களின் மிகப் பெரிய எதிரி யார்? என்று நகரவாசிகளைக் கேட்டுப் பாருங்கள். கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சொல்வார்கள் கொசு என்று.
ஆகாயத் தாமரையை  அழிக்க ஒரு மருந்து!
Updated on
2 min read

மனிதர்களின் மிகப் பெரிய எதிரி யார்? என்று நகரவாசிகளைக் கேட்டுப் பாருங்கள். கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சொல்வார்கள் கொசு என்று. வெயில் காலத்தில் தாக்குதலின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் கொசுக்கள், அதற்குப் பின்பு தொடுக்கும் தாக்குதல்களைச் சமாளிக்கவே முடிவதில்லை.
 அதிலும் நகரங்களில் நதி என்ற பெயரில் ஓர் ஓரமாக ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடைகளில் கொசுக்கள் பல்கிப் பெருகுகின்றன. சாக்கடை நீரில் மட்டும் அல்ல, அங்கே படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரையிலும் கொசுக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
 பார்க்க அழகாக இருக்கும் இந்த ஆகாயத் தாமரைகளை அழிக்க ஒவ்வோர் ஆண்டும் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
 ஆகாயத் தாமரையை அழிக்க ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்து இருக்கிறார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் தாவரவியல்துறை இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் எஸ்.ராஜேந்திரன். அவருடன் பேசுவோம்:
 ""ஆகாயத் தாமரை நமது நாட்டு தாவரம் அல்ல. அது அழகுத் தாவரமாக பிரேசிலில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் மேற்கு வங்காளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறப்பிடம் அமெரிக்கா. இப்போது மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. நீர்நிலைகளில் பார்ப்பதற்கு அழகாகப் படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரை நிறையத் தீங்குகளை ஏற்படுத்தக் கூடியது.
 நான் எனது முனைவர் பட்ட ஆய்வுக்காக, மதுரையில் கழிவுநீரைச் சுத்தப்படுத்தும் முறைகள் குறித்து ஆராய்ந்தேன். தற்போதுள்ள முறையில் கழிவுநீரைச் சுத்தப்படுத்த நிறைய செலவு பிடிப்பதைத் தெரிந்து கொண்டேன். அப்படிச் சுத்தப்படுத்திய கழிவுநீரை புல்லுக்குத்தான் பாய்ச்சுகிறார்கள். கழிவுநீரைச் சுத்தப்படுத்துவதற்கு அதிக செலவு பிடிக்காத முறையைக் கண்டுபிடித்தேன். தாவரங்களை வைத்துக் கழிவு நீரைச் சுத்தம் செய்யும் முறைதான் அது. அதற்குப் பயன்பட்ட தாவரங்களில் ஒன்றுதான், ஆகாயத் தாமரை.
 அப்போது ஆகாயத் தாமரை எப்படி, எவ்வளவு வேகமாக வளர்கிறது? என்றெல்லாம் ஆராய்ந்தேன். ஆகாயத் தாமரையால் நன்மைகளை விட தீமைகளே அதிகம்.
 ஒரு குளத்தில் ஆகாயத் தாமரை இருந்தால், அது குளம் முழுக்க விரைவில் பரவி விடுகிறது. குளத்தின் மேல் மட்டப் பரப்பளவை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகப் பரப்பளவு உள்ள ஆகாயத் தாமரை குளத்தில் வளர்ந்து விடுகிறது. இதனால் குளத்தின் நீருக்குள் சூரிய ஒளி போக முடியாது. அடிக்கிற வெயில் எல்லாம் ஆகாயத் தாமரையில் விழ, அதில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்க குளத்தில் உள்ள நீர் ஆவியாகிறது. ஆகாயத் தாமரை இலைகளில் உள்ள நுண் துளைகளின் வழியே இந்த ஆவி வெளியேறுகிறது. ஆகாயத் தாமரை இல்லாத குளத்தில் நேரடியாக வெயில் பட்டால் வற்றும் தண்ணீரை விட ஆகாயத் தாமரை உள்ள குளத்தில் அதிகம் தண்ணீர் ஆவியாகிறது. குளம் விரைவில் வற்றிப் போகிறது.
 காற்றில் உள்ள ஆக்சிஜன் தண்ணீரில் கலக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் குறைந்தது 8 மி.கிராம் ஆக்சிஜன் இருக்க வேண்டும். ஆகாயத் தாமரை படர்ந்துள்ள தண்ணீரில் ஆக்சிஜன் கலப்பது தடைபடுவதால், தேவையான அளவுக்கு ஆக்சிஜன் தண்ணீரில் கலப்பதில்லை. இதனால் மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. குளங்களில் வளரக் கூடிய பாசிகள் வளர்வதில்லை. காற்றில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் சுவாசிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீன்கள், உண்ணுவதற்குப் பாசிகளும் கிடைக்காமல் பட்டினியால் திண்டாடுகின்றன. எனவே நாளடைவில் மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் பல அழிய நேர்கிறது.
 அதுமட்டுமல்ல, அல்லி, தாமரை போன்றவற்றை வளர விடாமல் நீர்நிலை முழுவதையும் ஆகாயத் தாமரையே கைப்பற்றிக் கொள்கிறது.
 மின் உற்பத்திக்குத் தேவையான தண்ணீர், நீர்மின்
 நிலையங்களில் குழாய்களின் மூலம் கொண்டு வரப்படுகின்றன. ஆகாயத் தாமரை இந்தக் குழாய்களை அடைத்துக் கொள்ளும். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
 இவை எல்லாவற்றையும் விட ஆகாயத் தாமரை கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது. கொசுக் கடியிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு குடும்பமும் மாதா மாதம் கொசுவிரட்டிகளுக்காக நிறையச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
 மாநகராட்சியோ, நகராட்சியோ ஒவ்வோர் ஆண்டும் ஆகாயத் தாமரையை அழிக்கிறார்கள். அதற்கு அதிகச் செலவு பிடிக்கிறது. எனவே ஆகாயத் தாமரையை ஒழிக்க, நாங்கள் ஒருபொருளைக் கண்டுபிடித்து இருக்கிறோம். தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆஐஞ ஊஐசஉ என்ற ஒரு பொருளை ஆகாயத் தாமரையின் மீது தெளித்தால் இரண்டு நாட்களில் செடிகள் கருகிவிடுகின்றன. இந்தப் பொருளை சாக்கடை ஓரங்களில், திறந்தவெளிகளில் தெளித்தால், கொசுக்கள் அழிந்துவிடுகின்றன.
 விவசாயத்துக்குப் பயன்படும் குளம் குட்டைகளில் இந்த மருந்தைத் தெளித்தால் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடுகின்றன. இந்தப் பொருளைத் தயாரிக்க ஆகும் செலவும் குறைவு. தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருள் என்பதால், பிற ரசாயனப் பொருட்களைப் போல தீங்கானது அல்ல. நச்சுத்தன்மை உள்ளதல்ல. இந்தப் பொருளுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.
 என்னுடைய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு எங்கள் கல்லூரியில் ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிக்கிறார்கள். அதனால்தான் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளில் என்னால் ஊக்கத்துடன் ஈடுபட முடிகிறது'' என்றார் எஸ்.ராஜேந்திரன்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com