கோணல் முகத்தை நேராக்கலாம்!
ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் அப்துல்லா. அவருடைய மகள் சுபிரா. பிறக்கும்போது சுபிராவின் முகத்தின் இடது பக்கம் கோணிக் கொண்டு இருந்தது. அதிர்ச்சியடைந்தார் அப்துல்லா. மகள் வளர, வளர கவலையும் வளர்ந்தது.


ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் அப்துல்லா. அவருடைய மகள் சுபிரா. பிறக்கும்போது சுபிராவின் முகத்தின் இடது பக்கம் கோணிக் கொண்டு இருந்தது. அதிர்ச்சியடைந்தார் அப்துல்லா. மகள் வளர, வளர கவலையும் வளர்ந்தது.
ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவர்களிடம் சுபிராவை அழைத்துக் கொண்டு போனார். சுபிராவை சோதித்துப் பார்த்துவிட்டு, அவருடைய இடது பக்கத் தாடை எலும்பு தேவையான அளவுக்கு வளரவில்லை; அதனால்தான் முகம் கோணலாக இருக்கிறது என்றார்கள். மகளின் முகத்தை எப்படியாவது சீராக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார் அப்துல்லா. மருத்துவர்களும் முயன்றார்கள். ஆனால் முகம் சரியாகவில்லை. தாடை எலும்பைச் சரியான முறையில் சீரமைக்க முடியவில்லை. அப்துல்லா சோர்ந்துவிடவில்லை. மகளுடைய முகத்தை யார் சரியாக சீரமைப்பார்கள் என்று தேடிக் கொண்டேயிருந்தார்.
அப்போதுதான் சென்னையில் உள்ள முகச் சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜியைப் பற்றிக் கேள்விப்பட்டார். மகள், மனைவி ஷரீபாவுடன் சென்னைக்குப் பயணம். டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் சிகிச்சைக்குப் பிறகு, சுபிராவின் முகம் சீரமைக்கப்பட்டுவிட்டது. எல்லாக் குழந்தைகளையும் போல அழகான முகத்துடன் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிவிட்டார் சுபிரா.
சுபிராவுக்கு என்ன குறை? அதை எப்படிச் சீரமைத்தீர்கள் என்று டாக்டர் எஸ்.எம்.பாலாஜியைக் கேட்டோம்:
""சுபிராவுக்கு ஹெமிபேஷியல் மைக்ரோசோமியா என்ற முகக் குறைபாடு இருந்தது. இடது பக்கத் தாடை எலும்பு முழுமையாக வளரவில்லை. இதனால் முகத்தில் கோணல் இருந்தது. இதைச் சரி செய்ய தாடை எலும்பை சரியான அளவுக்கு வளர்க்க வேண்டும்.
விபத்தினால் கால், கை எலும்பு முறிந்தவர்களுக்கு மாவுக்கட்டு போட்டு எலும்பை முறிவைச் சரி செய்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே அடிப்படையில் எலும்பைத் தேவையான அளவுக்கு வளர்க்கும் தொழில் நுட்பம் இப்போது உள்ளது.
நான் சுபிராவின் தாடை எலும்பை முப்பரிமாண சிபிசிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தேன். இதற்கு முன்பு மருத்துவம் செய்தவர்கள் தாடை எலும்பை வளரச் செய்வதற்கு தவறான சிகிச்சை முறையைக் கையாண்டிருந்தார்கள் என்பது தெரிய வந்தது.
ஆப்பிரிக்காவில் சுபிராவின் தாடை எலும்பை வளர்க்க, அங்குள்ள மருத்துவர்கள், டிஸ்டிராக்ஷன் என்ற கருவியைத் தவறான முறையில் பொருத்தியிருந்தார்கள். இந்த டிஸ்டிராக்ஷன் கருவி எலும்பைத் தேவையான திசையில், தேவையான அளவுக்கு வளரச் செய்யக் கூடியது. ஆனால் அவர்கள் அதைத் தவறான முறையில் பொருத்தியிருந்ததால், சுபிராவின் தாடை எலும்பு தவறான திசையில் வளர ஆரம்பித்திருந்தது. அப்படியே விட்டிருந்தால் அந்த எலும்பு வளர்ந்து கன்னத்தில் காயத்தையும், தழும்புகளையும் ஏற்படுத்திவிட்டிருக்கும். முகத்தின் கோணலும் சரியாகியிருக்காது.
எனவே முதலில் அவர்கள் பொருத்தியிருந்த டிஸ்டிராக்ஷன் கருவியை அகற்றினேன். வளர்ச்சி குறைந்த கீழ்த்தாடையில் ஒரு சிறு பிளவை உண்டாக்கினேன். தாடைகளையும் பற்களையும் உரிய வகையில் மாற்றி அமைத்தேன். அதற்குப் பிறகு ழ்ட் ஆஙட-2 என்ற அதி நவீன புரதத்தை பாதிக்கப்பட்ட தாடை எலும்பின் அருகில் செலுத்தினேன். அது ஸ்டெம் செல்களை ஊக்குவித்து எலும்புகளை வளரச் செய்தது. சுமார் ஒரு மாதச் சிகிச்சைக்குப் பிறகு, சுபிராவின் தாடை எலும்பு தேவையான அளவுக்கு வளர்ந்துவிட்டது. முகத்தின் இடது பக்கக் கோணல் மாறிவிட்டது. எல்லாக் குழந்தைகளின் முகத்தைப் போலவே சுபிராவின் முகமும் இப்போது அழகாகிவிட்டது.
முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் எல்லாராலும் மிகச் சிறப்பாகவும் சரியாகவும் அறுவைச் சிகிச்சைகளைச் செய்துவிட முடியாது; அனுபவமும், பாதிப்பின் தன்மையைச் சரியாகக் கணிக்கும் திறனும், தொழில்நுட்பத்தில் நல்ல தேர்ச்சியும் இருந்தால்தான் இத்தகைய அறுவைச் சிகிச்சைகளைச் சரியாகச் செய்ய முடியும் என்பதை சுபிராவுக்கு மருத்துவம் செய்த போது என்னால் உணர முடிந்தது''
என்கிறார் பெருமையுடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...