கும்கி - தி கமாண்டோ

கும்கி - இது அண்மையில் வெளியான திரைப்படத்தைக் குறித்து அல்ல. அண்மையில் திருவண்ணாமலை பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த
கும்கி - தி கமாண்டோ

கும்கி - இது அண்மையில் வெளியான திரைப்படத்தைக் குறித்து அல்ல. அண்மையில் திருவண்ணாமலை பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளைப் பிடித்து அவற்றை கும்கிகளாக மாற்ற முதுமலை மற்றும் டாப்சிலிப் பகுதிகளுக்கு அனுப்புவதாக தமிழக அரசே அறிவித்திருந்தது.
 சரி, கும்கி என்றால் என்ன?
 கும்கி என்பது, ஊருக்குள் புகும் அல்லது காட்டுக்குள் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடக்குவதற்காக போதிய பயிற்சியளித்து பழக்கப்படுத்தப்பட்ட யானை என்பதாகும்.
 யானைகளில் தைரியம் படைத்த யானை மட்டுமே கும்கியாக மாறுவதற்கு தகுதி பெற்றதாகும். பயந்த சுபாவமுள்ள யானை கும்கியாக மாறாது.
 எந்த யானையாக இருந்தாலும், காட்டுக்குள் எத்தகைய சூழலில் இருந்தாலும் அதற்கு உரிய பயிற்சியளித்தால் அதை கும்கியாக மாற்ற முடியும். இது தொடர்பாக, ஆசிய யானை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
 ""எந்த யானையையுமே கும்கியாக மாற்ற முடியுமென்றாலும், அது அதை, பராமரிக்கும் பாகனின் கையில்தான் உள்ளது. பாகன் என்ற மாவுத்தன் எந்த அளவுக்கு உறுதியான குரலில் கட்டளை இடுகிறாரோ அதை நிறைவேற்ற வேண்டியதுதான் கும்கியின் வேலை. அதற்காகவே காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு அவற்றை
 கும்கியாக மாற்ற முயற்சிக்கும்போது அடி (முன்னால் போ), பித்தத் (பின்னால் வா), பரோ (அடங்கு) போன்ற வார்த்தைகளைக் கொண்டு அதற்கேற்ப பயிற்சியளிக்கப்படும்.
 அதாவது தாக்க வேண்டியது, தகர்க்க வேண்டியது, பாதுகாக்க வேண்டியது, இழுக்க வேண்டியது, தூக்க வேண்டியது என ஒவ்வொரு பிரிவிலும் இந்தக் கும்கிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும்.
 யானை, அதன் மாவுத்தனுக்கு மட்டுமே கட்டுப்படும். அதனால், கும்கியாக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு யானைக்கும் ஒரு மாவுத்தன், ஒரு காவடி ஆகியோர் நிரந்தர துணையாளர்களாகப் பணியமர்த்தப்பட்டிருப்பர். (காவடி என்றால் மாவுத்தனின் உதவியாளர் என பொருள். பாகனை வார்டன் எனவும், அவரது உதவியாளரை கோ-வார்டன் என அழைக்கப்பட்டு, அது கோவார்டியாக மருவி, காவடியாக உருமாறி விட்டது) அதனால் யானையின் துக்கம், சந்தோஷம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது இவர்கள் இருவர் மட்டுமே. பாகனின் ஒவ்வொரு கட்டளைக்கும் யானை கட்டுப்படுமென்பதால் தான் அது கோபமடையும் நேரத்தில் பாகனைத்தான் முதலில் தாக்குகிறது.
 இதைத்தவிர ஆண் யானைகளுக்கு மதம் பிடிக்கும் நேரத்தில் அது எந்த யானையையும் தாக்கும். அதற்கு கும்கிகளும் விதிவிலக்கல்ல. அத்தகைய நேரத்தில் அந்த யானைகளை அடக்குவதற்காக பெண் கும்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக ஆண் யானைகள் மட்டுமே கும்கிகளாக இருக்குமென்றாலும் ஒவ்வொரு முகாமிலும் ஒருசில பெண் யானைகளும் கும்கிகளாகப் பயன்படுத்தப்படும்.
 பொதுவாக கும்கி யானைகள் 25 வயதிற்கு மேற்பட்டவையாகவே இருக்கும். அப்போதுதான் அவற்றின் உடலில் போதிய வலு ஏற்பட்டு எதையும் தாக்கக்கூடிய திறன் இருக்கும். முதுமலை புலிகள் காப்பகத்தில் "முதுமலை' என்ற கும்கிக்கு தற்போது 52 வயதாகிறது'' என்றார் டாக்டர் ராமகிருஷ்ணன்.
 ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறுகையில், ""மன்னராட்சிக் காலத்திலிருந்தே கும்கி யானைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. தற்போது யானைகளின் வழித்தடங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யானை-மனித மோதல்களும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஊருக்குள் புகும் யானைகளைக் கட்டுப்படுத்துவதில் கும்கிகளே பிரதான பங்காற்றி வருகின்றன. அதனால் மனிதர்கள் பாதிப்பின்றி வாழ்வதில் கும்கிகளின் பங்கும் முக்கியமாகும்.
 யானையை மக்கள் விரட்டுவதைவிட, யானையைக் கொண்டே விரட்டுவது மக்களிடத்தில் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாகும். இதன் மூலமாக யானைகள் பாதுகாக்கப்படுகின்றன. காடு பாதுகாக்கப்படுகிறது. யானையைக் குறித்து நேர்மறையான எண்ணங்கள் உருவாகின்றன'' என்றார் பெருமையுடன்.
 தென்னிந்தியாவிலேயே மிகச்சிறந்த இரண்டு கும்கி யானை பயிற்சி மையங்கள் உள்ளதென்றால், அவை தமிழகத்தில் உள்ள டாப்சிலிப்பும், முதுமலையுமே என்பது மேலும் பெருமை சேர்க்கக்கூடியவை என்றால் அது மிகையல்ல.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com