புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இதைப் படித்துவிட்டு...தேர்வு எழுதச் செல்லுங்கள்!

நாளை பிளஸ் டூ தேர்வுகள் ஆரம்பமாகின்றன. மார்ச் 26 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஆரம்பம். தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் வீடே பதற்றத்தில் இருக்கும்.

News image
Updated On :2 மார்ச் 2014, 3:06 am

ந. ஜீவா

நாளை பிளஸ் டூ தேர்வுகள் ஆரம்பமாகின்றன. மார்ச் 26 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஆரம்பம்.
 தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் வீடே பதற்றத்தில் இருக்கும்.
 படபடப்பு தொற்றிக் கொள்ளும்.
 ""தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் எந்தவிதப் பதற்றமுமில்லாமல் தேர்வு எழுத வழிகள் இருக்கின்றன'' என்கிறார் சுதா லட்சுமி.
 திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்ப்பேட்டையில் உள்ள உ.ந.ந.ங. கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள சுதா லட்சுமியிடம் பேசினோம்:
 ""நாளை பிளஸ் டூ தேர்வு எழுதப் போகும் மாணவர்கள், இன்று இரவு படுக்கும்போது மனதில் சில காட்சிகளைக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்தில் இருப்பது மாதிரி, கேள்வித்தாள் கொடுப்பது மாதிரி, எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் நன்கு தெரிகிற மாதிரி, நல்லமுறையில் குறித்த நேரத்தில் பதில் எழுதி மகிழ்ச்சியுடன் தேர்வு மையத்தை விட்டு வெளிவருவது மாதிரி... கற்பனை செய்ய வேண்டும். மாணவர்கள் இப்படி நினைப்பதால் - கற்பனை செய்வதால் - நிச்சயம் பயன் கிடைக்கும். தேர்வு எழுதுவதைப் பற்றிய பதற்றமான மனநிலையை இது மாற்றிவிடும்.
 தேர்வு எழுதும்போது நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 5 மார்க் கேள்விகளுக்குப் பதில் எழுத எவ்வளவு நேரம், 10 மார்க் கேள்விகளுக்குப் பதில் எழுத எவ்வளவு நேரம் என்று திட்டமிட்டு எழுதினால் தேர்வு எழுதும்போது பதற்றம் இருக்காது.
 கேள்வித்தாளில் ஒரு சில கேள்விகள் மிக நன்கு தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட கேள்விகளை அதிக நேரம் எடுத்துக் கொண்டு எழுதக் கூடாது. இதனால் பிற கேள்விகளுக்குப் பதில் எழுத போதிய நேரம் இல்லாமல் போய்விடும். பிற கேள்விகளுக்கு ஓரளவுக்குத்தான் பதில் தெரியும் என்றாலும், நேரம் இருந்தால் யோசித்து அவற்றுக்குச் சிறப்பாகப் பதில் எழுதிவிட முடியும். நேரம் இல்லையென்றால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் எழுத முடியாமல் போய்விடும். இதனால் மதிப்பெண் குறைந்து போகும். எந்தக் கேள்விக்கான பதிலையும் குறித்த நேரத்திற்குள் சிறப்பாக எழுதுவதே சிறந்தது.
 சில மாணவர்கள் பல வண்ண பேனாக்களைத் தேர்வு எழுதும்போது பயன்படுத்துவார்கள். தலைப்புகள் எழுத ஒரு நிறம். அடிக்கோடிட இன்னொரு நிறம். துணைத் தலைப்புகளுக்கு ஒரு நிறம். எண்களை எழுத வேறொரு நிறம் என பல நிற பேனாக்களைப் பயன்படுத்துவார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். அவசர அவசரமாகத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது எந்த நிறப் பேனாவைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படும். அதுவே டென்ஷனை ஏற்படுத்தும். எனவே பல வண்ண பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.
 மஞ்சள், சிவப்பு, பச்சை, பிங்க் வண்ணப் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது. தேர்வுத் தாளைத் திருத்தும் ஆசிரியர்கள் சிவப்பு, பச்சை, பிங்க், மஞ்சள் வண்ணப் பேனாக்களைப் பயன்படுத்துவார்கள். ஒரு மாணவன் பதில் எழுதும்போது, பிங்க் வண்ணத்தில் அடிக்கோடிட்ட ஒரு வரியை, பிங்க் வண்ணப் பேனாவில் திருத்திய ஆசிரியர், தவறானது என்பதற்காக அந்த வரியைத் தான்தான் அடித்திருப்பதாக நினைத்து மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டுவிட வாய்ப்புண்டு. எனவே ஸ்கை புளூ, மெரூன், வயலட் போன்ற வண்ணங்களைத் தேர்வு எழுதும்போது பயன்படுத்த வேண்டும்.
 ஒரு கேள்விக்கான பதிலில் இந்த இந்த பாயிண்ட்கள் நிச்சயம் இருக்க வேண்டும் என்று வைத்திருப்பார்கள். அந்தப் பாயிண்ட்கள் பதிலில் இருந்தால், முழுப் மதிப்பெண்களையும் கொடுத்துவிடுவார்கள். எனவே தேர்வு எழுதும் மாணவர்கள் தேவையான பாயிண்ட்களைத் தவறாமல் எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு வேறு எதையாவது பக்கம் பக்கமாக எழுதினாலும் மதிப்பெண்கள் கிடைக்காது. தேவையான பாயிண்ட்கள் எழுதப்பட்டிருப்பது, திருத்தும் ஆசிரியருக்குப் பளீச்செனத் தெரிவதற்காக அந்தப் பாயிண்ட்களைத் தலைப்புகளின், துணைத் தலைப்புகளின் கீழ் எழுத வேண்டும். அவற்றைப் பார்த்த ஆசிரியர் உடனே நல்ல மதிப்பெண்களை வழங்கிவிடுவார்.
 தேர்வு எழுதி முடித்தவுடன் அதைப் பற்றிப் பிறரிடம் பேசக் கூடாது. எழுதி முடித்த தேர்வை உடனே மறந்துவிட வேண்டும். இது மிக மிக முக்கியம். இல்லையென்றால் தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், பதற்றம், டென்ஷன் தொற்றிக் கொள்ளும். அடுத்த நாள் தேர்வை நன்கு எழுத முடியாது.
 தேர்வு எழுதி வீட்டுக்கு வந்ததும் அடுத்த நாள் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிக்கக் கூடாது. மனதுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். குறைந்தது 2 மணி நேரமாவது நன்கு தூங்கி எழுந்து, பின் படிக்க வேண்டும். மனதுக்கு ஓய்வு கொடுக்காமல் உடனே படிக்க ஆரம்பித்தால் படிப்பது ஆழ் மனதில் பதியாது.
 விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தேர்வு நேரத்தில் குழுவாக உட்கார்ந்து குரூப் ஸ்டடியெல்லாம் செய்யக் கூடாது. ஏனெனில் தேர்வு நெருங்கிவிட்ட சமயத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொருவிதமான ஐடியா இருக்கும். அவற்றைப் பகிர்ந்து கொண்டால் குழப்பம் தான் மிஞ்சும்.
 தேர்வு நாட்களில் எளிதில் செரிக்கக் கூடிய இட்லி போன்ற உணவுகளே சிறந்தது. பரோட்டா, சப்பாத்தி, பூரி, வடை போன்ற எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுகளைச் செரிக்க நமது உணவு மண்டலம் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் மூளையின் செயல்படும் திறன் குறைந்து விடும். எனவே எதை உண்பது என்பதில் கவனம் வேண்டும்.
 மூன்று மணி நேரம் தேர்வு எழுதும்போது சோர்வு ஏற்படும். ஏற்கெனவே கண் விழித்துப் படித்ததால், போதிய ஓய்வும் இருந்திருக்காது. தேர்வு எழுதும்போது சோர்வு ஏற்படாமல் இருக்க பழச்சாறு அருந்தலாம். சத்துமாவுக் கஞ்சி கூட
 அருந்தலாம்.
 எல்லாவற்றையும் விட முக்கியமானது, தேர்வு சமயத்தில் வீட்டில் எல்லாம் வழக்கப்படி - எந்த புதிய மாற்றமும் இல்லாமல் - நடக்க வேண்டும். விருந்தினர்களின் வருகையைத் தவிர்க்க வேண்டும். வீடு மாற்றக் கூடாது. பெற்றோர் வெளியூர் போகக் கூடாது. டிவி பார்க்கக் கூடாது.
 தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களிடம் நம்பிக்கையூட்டும்விதமாகப் பேச வேண்டும். தேர்வு மையத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்று விடுவது, தேர்வு எழுதிய மாணவர்களை வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது என்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவியாக இருந்தால், எந்தப் பயமும் இல்லாமல் தேர்வு எழுதி நிறைய மதிப்பெண்களை மாணவர்கள் அள்ள முடியும்.
 பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருப்பதால், படித்த பாடங்களை ரிவிஷன் செய்து பார்ப்பது அவசியம். கட்டடத்துக்கு கான்கீரிட் போல தேர்வுக்கு ரிவிஷன்.
 தேர்வுக்கு எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, எவ்வளவு பாடங்களைப் படிக்க வேண்டும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரத்திலும் எவ்வளவு பாடங்களை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர்கள் படிக்க வேண்டும்.
 மனப்பாடப் பகுதிகளை தினம்தோறும் காலையில் எழுந்ததும் ஒருமுறை புரட்டிப் பார்த்துவிடுவது மிகவும் நல்லது. இப்படி முறையாகத் திட்டமிட்டுப் படித்தால், தேர்வு எழுதும்போது பயமோ, பதற்றமோ நிச்சயம் எற்படாது'' என்கிறார் சுதா லட்சுமி.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.