மனதில் உறுதி வேண்டும்!
சென்னை அசோக் நகர். கே. பாயிண்ட் மருத்துவமனை. மனநல ஆலோசகராக ஓர் இளைஞர்.


சென்னை அசோக் நகர். கே. பாயிண்ட் மருத்துவமனை. மனநல ஆலோசகராக ஓர் இளைஞர். உளவியல்துறையில் முதுகலை பயின்றிருக்கும் அவர், இப்போது ஆராய்ச்சி மாணவரும் கூட. "ஆனந்த தாண்டவம்' என்று ஒரு சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அவர் குமரன்.
இளம் வயதிலேயே மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இரு கால்களும் அதனால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் உலகை வலம் வருபவர். "" மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும்'' என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் அவர்.
""நான் பத்து மாதக் குழந்தையாக இருந்தபோதே எனது கை விரல்களைப் பிரிக்க முடியவில்லையாம். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்து பார்த்திருக்கின்றனர். பிறவியிலேயே நிகழக் கூடிய உடற்குறைபாடாக நான் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த பாதிப்பால் உடலின் தசைகள் இறுக்கமடைந்துவிடும். தசைகளுக்கு இயங்கும் திறன் இல்லாமல் போய்விடும். அப்படித்தான் எனது இருகால்களும் இயங்காமல் போய்விட்டன. இது ஒரு நோய் அல்ல. நோயாக இருந்தால் குணப்படுத்திவிடலாம். இது ஒரு குறை. உடலின் ஒரு நிலை. இதைக் குணப்படுத்த முடியாது. ஆனால் முறையாக பிசியோ தெரபி செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். அப்படிக் கட்டுப்படுத்தித்தான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன் '' என்கிறார் குமரன்.
பள்ளியில் பிற மாணவர்களுடன் சேர்ந்து படித்தது ஐந்தாம் வகுப்பு வரைதான். அதற்குப் பின்னால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. வீட்டிலிருந்தே கல்வி. ஐந்தாம் வகுப்பு முடித்த ஓராண்டில் தனிப்பட்ட முறையில் பயின்று பத்தாம் வகுப்புத் தேறியிருக்கிறார் அவர்.
""குமரனுக்கு நுண்ணறிவுத் திறன் அதிகம். ஞாபக சக்தியும் அதிகம். நான் ஒரு பாடத்தை ஒரு முறை அவனுக்குப் படித்துக் காட்டினால் போதும். அப்படியே திரும்பவும் அதைச் சொல்லிவிடும் அளவுக்கு ஞாபக சக்தி அவனுக்கு இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு முடித்ததுமே, நேரடியாகப் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதலாம் என்று தெரிந்து கொண்டோம். "நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஒபன் ஸ்கூலிங்' மூலம் சென்ட்ரல் போர்ட் சிலபஸில் பத்தாம் வகுப்புத் தேர்வை வீட்டிலிருந்தபடியே படித்து எழுதலாம் என்பதைத் தெரிந்து கொண்டு, குமரனை அதில் சேர்த்தோம். குமரன் அந்தத் தேர்வை எழுதி எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டான்'' என்கிறார் குமரனின் அம்மா
கற்பகம்.
ஐந்தாம் வகுப்பு படித்த கல்வித்திறனுடன் எப்படி உடனே பத்தாம் வகுப்பு எழுத முடியும்? ""இதுதான் படிக்கப் போகிறோம் என்று தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு அதைப் படிப்பதற்கு ஏற்றவாறு மனதைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நான் அப்படித்தான் என்னுடைய மனதை உறுதிப்படுத்திக் கொண்டேன்''என்கிறார் குமரன்.
ஆனால் அந்த பத்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் மட்டும்தான் கட்டாயம் படிக்க வேண்டிய பாடம். பிற பாடங்களை மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். குமரன் உளவியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்.
""குமரன் பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும், அடுத்த 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டும். அப்போது சிறிய இடைவெளி இருந்தது. உடனே நாங்கள் குமரனை பிரெஞ்ச் மொழி கற்க ஏற்பாடு செய்தோம். பிரெஞ்ச் மொழி கற்பதில் உள்ள நான்கு லெவல்களை தனது 16 வயதிலேயே முடித்துவிட்டார் குமரன். அதுமட்டுமல்ல, அவருடைய பிரெஞ்ச் மொழி உச்சரிப்பை அந்தக் கல்வி நிலையத்தின் தலைவரே பாராட்டியிருக்கிறார். அதற்குப் பிறகு இந்தி மொழியைப் பயின்று அதில் பி.ஏ., பட்டமும் வாங்கினார் குமரன்'' என்கிறார் கற்பகம் பெருமையாக.
பிளஸ் டூ முடித்தவுடன், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எஸ்ஸி சைக்காலஜி, எம்.எஸ்ஸி சைக்காலஜி படித்துத் தேறியிருக்கும் குமரன், இப்போது பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்.
குமரனுக்கு படிப்பது ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் அவரால் தேர்வு எழுத முடியாது. அவர் சொல்லச் சொல்ல அதை எழுத ஒருவர் வேண்டும்.
குமரனுக்குச் சிறுவயதில் இருந்தே புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் இருக்கிறது. எந்தப் புத்தகம் கிடைத்தாலும் உடனே படித்துவிடுவாராம். அவர் சிறு பையனாக இருந்தபோதே அவருடைய பாட்டி புனிதவதி இளங்கோவன் (அவர் வானொலியில் நாடகங்களைத் தயாரித்தவர். வானொலி நிலைய உதவி இயக்குநராக இருந்தவர்) திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
""நான் ஏதேனும் சாதித்திருக்கிறேன் என்றால் அதற்கு என் குடும்பப் பின்னணிதான் காரணம். என் அம்மா எனக்காகவே உயிர் வாழ்பவர். என்னைக் கவனித்துக் கொள்வதே அவருடைய வாழ்க்கை. என் அப்பா குமணன், எனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார். என் தம்பி பரதன், எனது தோழனும் கூட. என் சித்தப்பா குடும்பமும் என்னை உருவாக்கியிருக்கிறது.
நான் வெளியுலகம் தெரியாதவனாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக என்னைப் பல இடங்களுக்கும் என் பெற்றோர் என்னை அழைத்துச் செல்கின்றனர். திரைப்படங்களை திரையரங்குகளில்தான் நான் பார்க்கிறேன். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். துபாய்க்குப் போகப் போகிறேன்'' என்கிறார் குமரன்.
பிற குழந்தைகள் எல்லாருடனும் நன்றாகப் பழகுவார்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அந்த வாய்ப்புக் குறைவு. ""எனக்கு நண்பர்கள் கிடைக்கவில்லையே என்ற குறை இருந்தது. ஆனால் அதுவும் இப்போது தீர்ந்து விட்டது. ஃபேஸ் புக்கில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள். அவர்களில் பலரை நேரில் சந்தித்துப் பேசி பழக முடிகிறது. என்னிடம் மன நல ஆலோசனைக்காக வருகிறவர்களிடம் நிறையப் பேசுகிறேன். அதனால் பிற மனிதர்களின் பல பிரச்னைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. என்னிடம் மனநல ஆலோசனைக்காக வருபவர்களிடம், மனதில் நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். மனதில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றுதான் நான் சொல்வேன்'' என்கிறார் குமரன்.
உண்மைதானே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...