சாகலேட பருபபுத தேஙகாய்!
வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் சூழ்ந்து கொண்டாலும் திறமை இருந்தால், எதிர் நீச்சல் போட்டு ஜெயித்துவிடலாம் என்பதற்கு உதாரணப் பெண்மணியாக வாழ்ந்து


வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் சூழ்ந்து கொண்டாலும் திறமை இருந்தால், எதிர் நீச்சல் போட்டு ஜெயித்துவிடலாம் என்பதற்கு உதாரணப் பெண்மணியாக வாழ்ந்து வருகிறார் சிவகாம சுந்தரி. இவர் பல வகையான பருப்புத் தேங்காய் செய்வதில் கைத்தேர்ந்தவர். இவரது புதிய கண்டுபிடிப்பு சாக்லேட் பருப்புத் தேங்காய். இது குறித்து சென்னை அம்பத்தூரில் வசிக்கும் அவரைச் சந்தித்துக் கேட்டோம்:
""சிறுவயதில் இருந்தே வெளி உலகம் தெரியாமல் வளர்ந்தவள் நான். திருமணத்திற்கு பிறகு என் மாமியார் குடும்பத்தாருக்கும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே சென்று வேலை பார்ப்பதெல்லாம் பிடிக்காது. இதனால் திருமணத்திற்கு பின்பும் அப்படியே இருந்துவிட்டேன். இந்நிலையில் என் கணவருக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போனது. மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவே கூறுவார்கள். இப்படி பல முறை நடந்துவிட்டது. இதற்கிடையில், நண்பர் ஒருவர் ""காசிக்கு சென்று பித்ரு கடன் செய்து விட்டு வாருங்கள் உங்கள் பிரச்னை தீர்ந்துவிடும்'' என்றார். பல முயற்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக குடும்பத்துடன் காசிக்குச் சென்றோம். அங்கே பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதற்காக ரயில் நிலையம் வந்தோம். அப்போது திடீரென என் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே இறந்துவிட்டார். அங்கிருந்த சிலர் ""உடலை இங்கிருந்து கொண்டு போகக்கூடாது'' என்று கூறிவிட்டார்கள். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் நின்றிருந்தேன். அதன்பிறகு நெருங்கிய சொந்தங்களை மட்டும் வரவழைத்து காசியிலேயே என் கணவரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டுத் திரும்பினோம்.

அதுவரை வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த எனக்கு இனி குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறேன் என்று புரியாத நிலை. இந்நிலையில் தான் நான் சிறுவயதில் கற்றுக்கொண்ட தையல் பயிற்சி பெரிதும் உதவியது. அருகில் உள்ளவர்களுக்குத் துணி தைத்துக் கொடுப்பது, காய்கறி கூடைப் பின்னித் தருவது என செய்து கொடுக்க ஆரம்பித்தேன். மேலும் கேட்பவர்களுக்குக் க்ரொஸôவினாலான கைவினைப் பொருள்களும் செய்து தந்தேன்.

இதற்கிடையே அருகில் உள்ள கோயில் விசேஷங்களுக்குப் புளியோதரை, கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் என பிரசாதங்களும் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பின்னர் வீடுகளில் நடைபெறும் காதுகுத்து, கல்யாணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்றவற்றுக்குப் பலகாரங்கள் செய்து தரும்படி ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதிலும் குறிப்பாக பருப்புத் தேங்காய்க்கு அதிக ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. ஏனென்றால் இப்போது பலருக்கும் பருப்புத் தேங்காய் செய்யத் தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் பருப்புத் தேங்காய்க்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பொதுவாக பிராமணர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பருப்புத் தேங்காயே முதலிடம் பெற்றிருக்கும். அதிலும் திருமணம் என்றால் 5 வகையான பருப்புத் தேங்காய்கள் வைப்பது வழக்கம். அதில் வழக்கத்தில் இருப்பது வேர்க்கடலை பருப்புத் தேங்காய், பொரிகடலை பருப்புத் தேங்காய், பூந்தி பருப்புத் தேங்காய், மிட்டாய் பருப்புத் தேங்காய், மைசூர்பாகு பருப்புத் தேங்காய், தேங்காய் பர்பி பருப்புத் தேங்காய், மனோகரம் பருப்புத் தேங்காய் இவைதான். இதில் இருந்து ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாம் என்று நினைத்தபோது ஹோம் மேட் சாக்லேட்டில் பருப்புத் தேங்காய் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும், நன்றாகவும் இருந்தது. பிரிஜ் இல்லாமல் கெட்டுப் போய்விடுமோ என்று பயந்தேன். ஆனால் பதினைந்து நாள்கள் வரை கெட்டு போகாமல் அப்படியே இருந்தது. அதன் பிறகு சாக்லேட் பருப்பு தேங்காய்யை ஒரு வீட்டு விசேஷத்திற்கு செய்து கொடுத்தேன். நல்ல வரவேற்புக் கிடைத்தது. தற்போது சாக்லேட் பருப்புத் தேங்காயைத்தான் அதிகம் விரும்பிக் கேட்கின்றனர். சிலர் இதனைக் கற்றுக் கொடுக்கும்படியும் கேட்கின்றனர். இதனால் சாக்லேட் பருப்புத் தேங்காய் செய்வதற்கும், கைவினைப் பொருள்கள் செய்வதற்கும், தையல் பயிற்சியும் அளித்து வருகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...