பாரம்பரியத்தைக் காக்கும் சிலம்பு வீராங்கனை!
தமிழரின் வீர விளையாட்டுகளான வேல் கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், மான் கொம்பு, தராசு, நெருப்பு கம்பு என சிலம்பாட்ட வகைகள் அனைத்தையும் மிக அநாயாசமாகச் சுழற்றி அருகில் இருப்பவரை கலங்கடிக்க


தமிழரின் வீர விளையாட்டுகளான வேல் கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், மான் கொம்பு, தராசு, நெருப்பு கம்பு என சிலம்பாட்ட வகைகள் அனைத்தையும் மிக அநாயாசமாகச் சுழற்றி அருகில் இருப்பவரை கலங்கடிக்க செய்கிறார் சிலம்பாட்ட வீராங்கனையான அர்ச்சனா. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள "முகமது சதக்' மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் இவரைச் சந்தித்தோம்:
""எனது தாத்தா, அப்பா இருவருமே அந்தக் காலத்தில் சிலம்பம் நன்றாக விளையாடுவார்கள். நான் சிறு வயதாக இருந்த பொழுது அருகில் இருந்த சிலம்பு விளையாட்டு கற்றுத் தரும் கூடத்திற்கு என் தாத்தா என்னை அடிக்கடி அழைத்துச் செல்வார். இதனால் சிறுவயதிலேயே எனக்குச் சிலம்பு விளையாட்டின் மீது ஈர்ப்பு வந்துவிட்டது. தாத்தாவிடம் சிலம்பு கற்றுக் கொடுக்கும்படி கேட்பேன். அதற்கு அவர், ""கம்பு பிடித்து விளையாடும் அளவிற்கு உடலில் வலு வந்ததும் கற்றுக் கொடுக்கிறேன்'' என்பார். அதன்படி நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது சிலம்பு விளையாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
அதன் பிறகு 6வது படிக்கும்போது முதன்முதலில் வட்ட அளவிலான சிலம்பு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து விளையாடிய மாவட்ட அளவிலும் வெற்றி பெற்றேன். இதனால் சிலம்பு விளையாட்டை நான் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய என் தந்தை கிருஷ்ணமூர்த்தி வில்லிவாக்கத்தில் உள்ள மாஸ்டர் சையது அமீது என்பவரிடம் பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட்டார். மேலும் எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியர் பிரபாகரனும் சிலம்பாட்ட வீரர் என்பதால் அவரும் எனக்கு அவ்வப்போது ஆலோசனையும், பயிற்சியும் கொடுத்து உதவினார்.

அதன் பின்னர் படிப்படியாக மாநில அளவிலான போட்டிகள், தனியார் நடத்தும் போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள் என பலவற்றிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். சிலம்ப விளையாட்டுகளான வேல் கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், மான் கொம்பு, தராசு, நெருப்பு கம்பு வைத்து சுற்றுவது என அனைத்து வகையான சிலம்பு விளையாட்டுகளையும் விளையாடுவேன்.
பொதுவாக சிலம்பு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் வயது வரம்பை பத்து, பத்தாக பிரித்திருப்பார்கள். இதனால் பெரும்பாலும் நான் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் என்னை விட 4-5 வயது மூத்தவர்களுடனே அதிகம் போட்டியிட்டிருக்கிறேன். சற்று குறி தவறினால் கூட அடி பலமாக விழுந்து உடம்பெல்லாம் பட்டைப் பட்டையாக வீங்கிவிடும். இருந்தாலும் போட்டியில் ஜெயித்துவிட்டால் பட்ட அடி எல்லாம் மறந்து சந்தோஷமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் தோல்வியைச் சந்திக்கும் பொழுது வலி அதிகமாகத் தெரியும்.
இதுவரை 3 மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறேன். 15க்கும் மேற்பட்ட தனியார் நடத்தும் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளேன். 2014-இல் மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றேன். கடந்த ஆறு ஆண்டுகளாக "தமிழ் வளர்ச்சிக் கழகம்' நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழும் பெற்று வருகிறேன். இதைத் தொடர்ந்து தற்போது சர்வ தேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளேன்'' என்றார்.
உங்களது பகுதியில் "சாதனைப் பெண்கள்' உள்ளனரா? அவர்களது அனுமதியுடன் அவரைப் பற்றிய கட்டுரையை எழுதி, அவருடைய புகைப்படத்துடன் அனுப்புங்கள். சிறந்த கட்டுரை "மகளிர் பகுதி'யில் இடம்பெறும். பிரசுரமாகும் சிறந்த கட்டுரைகளுக்குச் சன்மானம் உண்டு.
கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி:
கொண்டாட்டம் (மகளிர் பகுதி)
தினமணி, எக்ஸ்பிரஸ் கார்டன்,
29, 2-வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600 058.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...