நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹோமி பாபாவின் தலைமையின் கீழ்...!

இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியமானதாகக் கருதப்படும் அணுசக்தித் துறையுடன் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடர்புடையவர் அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீநிவாசன் (85).

News image
Updated On :4 ஜூலை 2015, 6:33 am

வே.சுந்தரேஸ்வரன்

இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியமானதாகக் கருதப்படும் அணுசக்தித் துறையுடன் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடர்புடையவர் அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீநிவாசன் (85).

அறிவியல் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக இவருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்விருதை வழங்கினார். நாட்டின் அணுசக்தி துறையில் பல்வேறு தளங்களில் பணியாற்றியுள்ள இவர், தற்போது அணு சக்தி ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார். அணு பொறியியலில் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். அணுசக்தி துறையில் தனக்குள்ள 60 ஆண்டுகால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தங்களது கல்வி, வேலை பற்றிய பின்னணி என்ன?

பெங்களூருவில் பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படிப்பை எடுத்துப் படித்தேன். எனக்கு இயற்பியலில்தான் ஆர்வம். எனினும், தந்தை, மாமா விருப்பத்தால் என்ஜினீயரிங் துறையில் படிக்க நேர்ந்தது. அப்போது, விமான இயந்திரத் தொழில்நுட்பம் சார்ந்த கேஸ் டர்பைன் தொழில்நுட்பம் மிகவும் நல்ல துறை என்று எனது பேராசிரியர் நாராயண அய்யங்கார் அறிவுரை கூறினார். இந்நிலையில், கனடாவில் ஸ்காலர்ஷிப் கிடைக்கவே, அங்குள்ள மெக்கில் பல்கலையில் அத்துறையில் முதுகலை படித்தேன். தொடர்ந்து பி.எச்டி. பட்டமும் பெற்றேன். இங்கிலாந்தில் லண்டனில் வேலை செய்து கொண்டிருந்தபோது, இந்திய அணு விஞ்ஞானி ஹோமி பாபாவிடம் இருந்து நான் உள்ளிட்ட இந்திய மாணவர்களுக்குக்

கடிதம் வந்தது. அணுசக்தி துறை ஆரம்பித்துள்ளதாகவும் வேலை அளிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, 1955-இல் இந்திய அணுசக்தி துறையில் பணியில் சேர்ந்தேன்.

அப்போது, இந்தியாவின் முதல் ஆராய்ச்சி அணு உலையான "அப்சரா'வை உருவாக்கும் பணி தொடங்கியது. அந்தத் திட்டத்தில் ஹோமி பாபாவின் தலைமையின்கீழ் பணியாற்றினேன். 1956, ஆகஸ்டில் அப்சரா செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு, 1959-இல் இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது, அதற்கான முதன்மைத் திட்டப் பொறியாளராக நான் நியமிக்கப்பட்டேன். தாராபூரில் இடம் தேர்வானது. அமெரிக்க ஒத்துழைப்புடன் அந்த அணு மின் நிலையப் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கல்பாக்கம் அணு மின் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக 1967-இல் தலைமை திட்டப் பொறியாளாராக நியமிக்கப்பட்டேன். சில ஆண்டுகள் இப்பணியில் ஈடுபட்டேன். 1972-73-இல் மீண்டும் பம்பாயில் மின் திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டேன். சில அணு மின் நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.

அணுசக்தி விஞ்ஞானி ஹோமி பாபாவுடன் பணியாற்றிய அனுபவம்?

டாக்டர் ஹோமி பாபாவுடன் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதேபோன்று, விஞ்ஞானி சாராபாய்யுடனும் பணியாற்றியுள்ளேன். அந்த அனுபவம் மகத்தானது. தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். அவர்களது நோக்கத்தை நாம் அடைந்தாக வேண்டும். இந்தியாவில் மூலப் பொருள்கள், விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்களைச் ஒன்றிணைத்து மேலாண்மை செய்தால் இது சாத்தியம்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முக்கியத்துவம் என்ன?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு 1983-இல் தொடங்கப்பட்டது. இது பெரிய சாதனையாகும். இதற்கான கட்டுமான பாகங்கள், வடிவமைப்புகள் அனைத்தும் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்தியத் திட்டமாகும். 1983-இல் ஜூலையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இதைத் திறந்துவைத்தார். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷியா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் ஆகியவை மட்டுமே தனித்து அணு மின் உலைகளை அமைத்து செயல்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. அச்சமயத்தில், கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம் அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இது ஒரு மைல்கல் சாதனையாகும். அந்தச் சாதனைக்காக 1984-இல் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது.

கூடங்குளம் அணு மின் திட்டம் பற்றி...

1987-இல் அணு சக்தி ஆணையத்தின் தலைவராகி 1990 வரை பதவியில் இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்காக அன்றைய சோவியத் ரஷியாவுடன் இந்தியா உடன்படிக்கை மேற்கொண்டது. இந்த உடன்படிக்கையில் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, ரஷிய அதிபர் கோர்ப்பசேவ் ஆகியோர் கையெழுத்திட்டனர். நான் தலைவராக இருந்ததால் சாட்சியாக இருந்தேன்.

2011-இல், கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. முதலில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பின்னர், முதல்வராக இருந்த ஜெயலலிதா எனது தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவை அமைத்தார். நாங்கள் இத்திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள், திட்ட வடிவமைப்பு, அப்பகுதி மக்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை அளித்தோம். அதன்பிறகு அத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. போராட்ட சூழலால் இரு ஆண்டுகள் திட்டப் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், அதன்பிறகு பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

உங்கள் குடும்பம் பற்றி?

எனது முன்னோர் பழைய மைசூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் வீட்டில் தமிழ்தான் பேசுவோம். நான் ஸ்ரீராமானுஜரின் வழியைப் பின்பற்றுவதால் தமிழின் மீது ஆர்வம் ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. எனது மனைவி கீதா ஸ்ரீநிவாசனின் மூதாதையர் சென்னை, கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாத்தா சி.பி.ராமசாமி ஐயர்.

எனது மகள் டாக்டர் சாரதா பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். மகன் ரகுவீர் ஸ்ரீநிவாசன் பின்லாந்தில் வேதியியல் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.