/

சேலையைத் தேர்ந்தெடுக்க ஒரு நிமிடம் போதும்!

துணிக்கடையில் துணி எடுக்க பெண்கள் காலையில் சென்றால் மாலையில்தான் வருவார்கள் என பத்திரிகைகளில் ஜோக் வருவதுண்டு.

News image
Updated On :19 ஜூலை 2015, 12:27 pm

துணிக்கடையில் துணி எடுக்க பெண்கள் காலையில் சென்றால் மாலையில்தான் வருவார்கள் என பத்திரிகைகளில் ஜோக் வருவதுண்டு. பெண்கள் ஆயிரக்கணக்கான சேலைகளைப் பார்த்து பின்னர் ஒரு சேலையைத் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்த சேலையை அணிந்து பார்க்க டிரஸ்ஸிங் ரூமுக்குச் செல்வார்கள். ஒன்றைத் தேர்வு செய்து அணிந்து பார்த்து திருப்தியில்லை என்றால் மீண்டும் சேலையைத் தேடும் படலம் தொடரும். இந்த விஷயத்தில் ஆண்களும் பெண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல.

இப்படி உடைகளை அணிந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பதினால் ஏற்படும் கால விரயத்தைத் தவிர்க்கவும்,பெண்களின் பாதுகாப்பு கருதியும், ஆடைகள் சேதமடையாமல் இருக்கவும், பல ஆடைகளைக் குறைந்த நேரத்தில் அணிந்து பார்த்து எது நமது தோற்றத்திற்கு சிறப்பாக உள்ளது என்பதைக் கண்டறியவும் இப்போது ஒரு புதியமுறை வந்துவிட்டது. "வெர்ச்சுவல் டிரெஸிங் ரூம்' என்ற கணினி அடிப்படையிலான புதிய தொழில்நுட்பம்தான் அது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் பி.எஸ்.சி.,கணினி அறிவியல் படித்துள்ள சி.வெங்கடசுப்பிரமணியனும், பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள ஜி.மகேஷ்குமாரும் இணைந்து வெர்ச்சுவல் டிரெஸிங் ரூம் என்ற புதிய கண்டுபிடிப்பினை உருவாக்கியுள்ளார்கள். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது:

""தொடக்கத்தில் வெப்சைட் தயாரித்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தோம்.

அதில் போட்டி அதிகமாகிவிட்டது. எனவே வித்தியாசமாக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என யோசனை செய்தோம்.

அதன் பலனாக வெர்ச்சுவல் டிரெஸிங் ரூமைக் கண்டுபிடித்தோம்.

துணிக்கடைக்குச் சென்று ஆடையைத் தேர்வு செய்து, ஆடையை அணிந்து பார்த்து வாங்குவதால் கால விரயம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க ஒரு மென் பொருளைக் கண்டுபிடித்தால் என்ன என யோசனை செய்து செயலில் இறங்கினோம்.

ஒரு துணிக்கடையில் பெண்களுக்கு, ஆண்களுக்கு, சிறுவர்களுக்கு என பல ஆயிரக்கணக்கான ரகங்கள் இருக்கும். அவற்றைத் தனித்தனியே ஸ்கேன் செய்து கடையில் உள்ள கணினியில் ஏற்றி

வைத்துக் கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர் கணினித் திரைக்கு முன்பாக நின்றால், சென்சார் அவருடைய உருவத்தைப் பதிவு செய்து கொள்ளும்.

கேமிராவுடன் கூடிய மானிடர் முன்பு வாடிக்கையாளர் நின்று கொண்டு, கையை அசைத்தால், மானிட்டரில் அவருக்குத் தேவையான ஆடை தெரியும்.

அதைத் தேர்வு செய்தால், அந்த ஆடையை வாடிக்கையாளர் அணிந்திருப்பதைப் போன்ற உருவம் கணினித் திரையில் தெரியும். இவ்வாறு ஒரு டிசைனைத் தேர்வு செய்து, அதனை அணிந்து பார்க்க சில விநாடிகளே ஆகும்.

இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆடைகளை ஒரு வாடிக்கையாளர் சிறிதுநேரத்திலேயே அணிந்து பார்க்க முடியும்.

இதனால் ஒரு சேலை எடுக்க இவ்வளவு நேரமா? என்று பெண்களை யாரும் சலித்துக் கொள்ள முடியாது. ஒரு சேலையைத் தேர்ந்தெடுக்க ஒரு நிமிடம் போதும்.

அதுமட்டுமல்ல, ஆடை அணிந்து பார்க்கும் அறையில் கேமரா எதுவும் பொருத்தியிருப்பார்களோ என்ற பயமும் இனிமேல் தேவையில்லை.

இதனால் குறைந்த நேரத்தில் பிடித்த ஆடையை அணிந்து பார்த்து வாங்கலாம். வாடிக்கையாளர்கள் மானிட்டரை பார்க்காத நேரங்களில் கடையின் விளம்பரங்களை அதில் ஒளிபரப்பலாம்.

இந்த மென்பொருளைக் கண்டுபிடிக்க சுமார் 6 மாத காலம் கடுமையாக உழைத்தோம்.

எங்களது கண்டுபிடிப்பினை மத்திய அரசின் மைக்ரோ சுமால் மீடியம் எண்டர் பிரைஸஸ் அங்கீகரித்து சான்றிதழ் அளித்துள்ளது.

இதனை நாங்கள் விற்பனை செய்யும் கடை ஊழியர்களுக்கு இதனைக் கையாளுவது குறித்து பத்து முதல் பதினைந்து நாள்கள் வரை பயிற்சி அளிக்கிறோம்.

இந்த மென்பொருளை துணிக் கடைகளில் மட்டுமல்ல, கண் கண்ணாடிக் கடைகள், நகைக்கடைகள், பியூட்டி பார்லர்கள், பேஷன் டிசைன் தொழில் செய்பவர்கள் என அனைவரும் பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் இதுபோன்ற மென் பொருளை கண்டுபிடித்தவர்கள் 4 பேர்மட்டுமே. தமிழகத்தில் நாங்கள் தான் இந்த மென் பொருளை முதன்முதலில் கண்டு பிடித்துள்ளோம். வெளிநாடுகளில் இதுபோன்ற மென்பொருள்களின் விலை ரூபாய் 20 லட்சம் வரை உள்ளது. ஆனால் நாங்கள் எங்கள் கண்டுபிடிப்பினை குறைந்த விலைக்கே விற்பனை செய்து வருகிறோம்'' என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.