கிராமியக் கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு!
எனக்கு சொந்த ஊர் செங்கல்பட்டு அருகே உள்ள "கழவெளி' கிராமம். எனக்கு சின்ன வயதில் இருந்தே நாட்டுப்புற பாடல்கள் பாடுவது, அதற்கு ஏற்றபடி நடனமாடுவதில்


""எனக்கு சொந்த ஊர் செங்கல்பட்டு அருகே உள்ள "கழவெளி' கிராமம். எனக்கு சின்ன வயதில் இருந்தே நாட்டுப்புற பாடல்கள் பாடுவது, அதற்கு ஏற்றபடி நடனமாடுவதில் ஆர்வம் இருந்தது. கொஞ்சம் வளர்ந்த பிறகு சமூகம் சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில்தான் "அறிவொளி இயக்கம்' என்ற திட்டம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது கையெழுத்துக் கூட போடத் தெரியாமல் யாரும் இருக்க கூடாது என்று மாலை நேரத்தில் கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்காக ஆரம்ப கல்வி பயிற்சியளித்து வந்தார்கள். இந்த இயக்கத்தின் இன்னொரு பகுதி என்னவென்றால் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நாடகங்கள் நிறைய நடத்துவது. அதில் ஆடி, பாடி, நடிப்பது எனக்கு வேலை'' என்கிறார் கிராமிய கலை நிகழ்ச்சி குழுவை நடத்தி வரும் வி.சிட்டு. இது குறித்து அவருடன் பேசினோம்:
""அறிவொளி இயக்கத்தின் மூலம் ஆரம்பத்தில் ஊர் ஊராகச் சென்று அரசு நடத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று பெண்கல்வி குறித்தும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வுப் பாடல்கள் பாடுவது, விழிப்புணர்வு நாடகங்கள் நடத்துவது போன்று செய்துவந்தோம்.
அதன்பிறகு திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்ததால் என் மாமியார் வீட்டில் இதற்கெல்லாம் அனுமதி தரவில்லை. அதனால் 6 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்தேன்.
ஆனால் எனக்குள் திரும்பவும்
இந்தத் துறைக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. இதைப் புரிந்து கொண்ட என் கணவர் வெங்கடேசன் என்னை மீண்டும் இந்தத் துறையில் வர அனுமதித்தார்.
அதன்பிறகு "அறிவொளி தீபம்' என்ற ஒரு குழுவை உருவாக்கி கடந்த 18 ஆண்டுகளாக கிராமிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் அரசு விழாக்கள், திருமண விழாக்கள், கோயில் விழாக்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகிறேன். இதில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், கொண்டத்தாட்டம், மான்கொம்பு ஆட்டம், ஆதிவாசி ஆட்டம், கழில் ஆட்டம், பெரியகுச்சி ஆட்டம் போன்ற கிராமிய நடனங்களை இடங்களுக்கு தக்கவாறு நடத்துகிறோம்.
இப்போது என் மாமியார் வீட்டினர் மூலமே நிகழ்ச்சிகள் நடத்த நிறைய வாய்ப்புகள் கிடைப்பது சந்தோஷமாக இருக்கிறது.
உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற ஊர்களில் இருந்தும் படிக்க வசதியில்லாத குழந்தைகள் என்னிடம் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, இந்தக் கலையையும் கற்றுக் கொடுத்து, அவர்கள் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் உதவி வருகிறேன்.
அவர்கள், இந்த கலைநிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் ஒரு பகுதியை அவர்களது குடும்பத்திற்கும் அனுப்பி வைக்கிறார்கள்.
ஆண்களுக்கே சவாலான இந்த கிராமிய கலைநிகழ்ச்சிகளை எப்படி நடத்தி வருகிறீர்கள் என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த "மாற்று ஊடக மையத்தின்' பொறுப்பாளர் பேராசிரியர் காளீஸ்வரனுக்குதான் நான் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்தான் இந்த ஆட்டங்களை எல்லாம் எப்படி நடத்த வேண்டும் என்று பயிற்சியளித்து, ஊக்கமளித்து வருகிறார். அதுதவிர, என் இசைக் குழுவை சேர்ந்த சுப்பு என்பவரின் ஒத்துழைப்பு இல்லை என்றாலும் இது சாத்தியப்பட்டிருக்காது. பெண்கள் முன்னேற்றம் குறித்தும், முறையாக எப்படி விழிப்புணர்வு பாடல்களை எழுத வேண்டும் என்றும் எப்படிப் பாட வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொடுத்தவர் இவர்தான். இப்போது ஒரே சமயத்தில் எந்த தயக்கமும் இன்றி 20 விழிப்புணர்வு பாடல்களைக் கூடஎன்னால் பாட முடிகிறது.
முன்பைவிட இப்போது கிராமியக் கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. போகும் இடங்களில் நல்ல மரியாதையும் கிடைப்பது சந்தோஷமாக இருக்கிறது.
இருந்தாலும் நலிந்து வரும் இந்த கிராமிய கலைகளுக்கு மேலும் அரசும், மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் நமது பாரம்பரிய கலைகள் அழிந்துவிடாமல் இருக்கும்.
அதுபோல எங்களைப் போன்ற கிராமிய கலைஞர்களைச் சினிமாவிலும் பயன்படுத்தினால் இன்னும் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற ஆசையும் இருக்கிறது'' என்றார்.
படங்கள்: யு.கே.ரவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...