தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

"ஆட்டிசம்' குழந்தைகளுக்கு அபாரத் திறமை உண்டு!

"ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைச் சாதாரணமாக எடை போட்டுவிடக்கூடாது. அவர்கள் பின்னாளில் உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும் வரலாம்'' என நம்பிக்கையுடன் கூறுகிறார் தமிழ்ச்செல்வி. இவர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு விழிப்புணர்வு தரும் கவுன்சிலிங்கும் செய்து வருகிறார்.

News image
Updated On :27 ஜூன் 2015, 3:38 pm

ஸ்ரீ

"ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைச் சாதாரணமாக எடை போட்டுவிடக்கூடாது. அவர்கள் பின்னாளில் உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும் வரலாம்'' என நம்பிக்கையுடன் கூறுகிறார் தமிழ்ச்செல்வி. இவர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு விழிப்புணர்வு தரும் கவுன்சிலிங்கும் செய்து வருகிறார்.

மேலும் ஸ்பெஷல் குழந்தைகளுக்கான "டே கேர் சென்டரு'ம் நடத்தி வருகிறார். சென்னை வில்லிவாக்கத்தில் இவரை சந்தித்தோம்:

""எனக்கு மூன்று குழந்தைகள். அதில் இரண்டாவது மகன் ஆட்டிசம் பாதிப்புடையவன். அதனால் அவன் பிறந்ததிலிருந்தே அவனுடன் பழகியதிலும், அவனை ஆங்காங்கே பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றதாலும் அவனைப் போன்ற மற்ற குழந்தைகளுடன் நிறையப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

இவர்கள் பள்ளிக்குச் சென்று தினமும் பாடம் மட்டும் படித்துவிட்டு வருவதில் எந்தப் பயனும் இல்லை என்று தோன்றியது. மேலும் இதுபோன்ற குழந்தைகளிடம் நிச்சயம் ஏதாவது தனித்திறமை இருக்கும் என்பதைப் பத்திரிகைகளிலும் படித்திருக்கிறேன். இதனால் அவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். இதனால் மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் குடும்ப நிர்வாகப் பொறுப்பும் தானாகவே என்னிடம் வந்துவிட்டது.

இதனால் ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. ஆனால் என் மகனைத் தனியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முடியாது. மேலும் ஒரு விபத்தில் என் முதுகு தண்டு பாதித்துவிட்டதால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் என்னால் அமரவும் முடியாது. இந்நிலையில்தான் என் கணவர் உயிருடன் இருக்கும் பொழுது அடிக்கடி கிண்டலாக சொல்லுவார். ""நீ ரொம்ப நல்லா சமைக்கிறாய். இதையே தொழிலாகச் செய்தால் சூப்பரா வியாபாரம் ஆகும் என்று'' அந்த நேரத்தில் அது ஞாபகம் வந்தது.

இதனால் அக்கம்பக்கத்தில் உள்ள கோயில்கள், வீடுகளில் நடத்தப்படும் சிறுசிறு விழாக்கள் போன்றவற்றிற்கு என் தோழியின் உதவியுடன் சமையல் ஆர்டர் பிடித்துச் செய்து கொடுத்து வருகிறேன். இருந்தாலும் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அந்த சமயத்தில் என் மகனுடைய நண்பனின் பெற்றோர் திடீரென ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்ததால், அவர்களது மகனை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

அப்போதுதான் தோன்றியது என் குழந்தையைப் போல் உள்ள குழந்தைகளை வைத்து கஷ்டப்படுபவர்களுக்காக "டே கேர் சென்டர்' துவங்கலாமே என்று. இது டே கேர் சென்டராக மட்டுமில்லாமல் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து, அந்த குழந்தைகளுக்குப் பயன்படும்படியாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்றும் நினைத்தேன். இதற்காக அந்தக் குழந்தைகளுக்கான பயிற்சி, பிஸியோதெரபி பயிற்சி, ஸ்பீச் தெரபி என சில பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கினேன். தற்போது பதினோரு குழந்தைகள் எங்கள் டே கேர் சென்டரில் இருக்கிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு படம் வரைவதில், இசையில், கிராஃப்ட் வேலை செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. இவர்களின் திறமையை மேம்படுத்த அதற்கான கருவிகள், உபகரணங்கள் வாங்கி வந்து, இசை, ஓவியம், கிராஃப்ட் என ஒவ்வொரு துறைக்கான பயிற்சி ஆசிரியர்களையும் வரவழைத்து பயிற்சி அளித்து வருகிறோம்.

என் மகனைச் சோதித்ததில், பன்மொழி திறமை இருப்பது தெரிந்தது. நாங்கள் அவனுக்கு ஆங்கிலம் மட்டும்தான் பயிற்சியளித்திருக்கிறோம். ஆனால் அவன் ஒரு காகிதத்தில் ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருந்தான். என் தோழியின் உதவியுடன் சோதித்துப் பார்த்ததில் அவன் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என ஆறு மொழிகளில் தமிழ்ச்செல்வி என்ற என் பெயரை எழுதியிருக்கிறான் என்பது தெரிய வந்தது. அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதனைச் சோதிக்க வேறு சில பெயர்களைச் சொல்லி எழுத சொன்னோம். அதையும் சரியாக எழுதி காண்பிக்கிறான்.

அதுபோல மற்ற குழந்தைகளில் ஒரு குழந்தையிடம் ஒருவரையுடைய பிறந்த தேதி, மாதம், வருடம் சொன்னால் அவர்கள் எந்த கிழமையில் பிறந்தார்கள் என்பதைச் சொல்லிவிடுகிறான். இதுபோன்று 2040 வரை எந்த தேதி சொன்னாலும் கிழமையைச் சொல்லிவிடுகிறான். மேலும் மற்ற ஒன்பது பிள்ளைகளிடம் இருக்கும் திறமைகளையும் தற்போது கண்டறிந்து வருகிறோம்.

பொதுவாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதுமட்டுமே போதாது. நமது குழந்தைக்கு இவ்வளவுதான் வரும் என்று நீங்களாகவே முடிவு செய்வதும் தவறு. ஏனென்றால் தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆட்டிசம் பாதித்தவர்கள்தான். அவர்களால் சாதனையாளர்களாக எப்படி மாற முடிந்தது. பெற்றோர் அளித்த ஊக்கமே அவரின் சாதனைக்கு வழிவகுத்தது. அதனால் உங்கள் குழந்தையிடம் இருக்கும் தனித்திறமையைக் கண்டுபிடித்து பயிற்சி கொடுங்கள் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.