கல்வி... வகுப்பறைக்குள் மட்டுமல்ல!
தேவகோட்டை ஸ்டேட் பாங்க். பள்ளி மாணவ,மாணவியர்கள் நிரம்பி வழிந்தனர். வங்கி மேலாளர் இன்பசேகரன், மாணவர்களுக்கு வங்கி நடைமுறைகளை விளக்கிக் கொண்டிருக்கிறார்.


தேவகோட்டை ஸ்டேட் பாங்க். பள்ளி மாணவ,மாணவியர்கள் நிரம்பி வழிந்தனர். வங்கி மேலாளர் இன்பசேகரன், மாணவர்களுக்கு வங்கி நடைமுறைகளை விளக்கிக் கொண்டிருக்கிறார். எப்படி பணம் எடுப்பது? பணம் போடுவது? செக் என்றால் என்ன? ஏடிஎம் எப்படி வேலை செய்கிறது? மாணவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தேவகோட்டை கிளை நூலகம். அங்கேயும் அதே மாணவர்கள். நூலகத்தில் புத்தகங்களை எப்படி வகை வகையாகப் பிரித்து வைக்கிறார்கள்? நூலகத்தில் புத்தகம் எடுப்பது எப்படி? எத்தனை நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும்? திருப்பிக் கொடுக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? மாணவர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் கிளை நூலகப் பணியாளர் ராதா சிரித்தவாறே பதில் சொல்கிறார்.
"எங்கள் மாணவர்கள் படிப்பது பள்ளியில் மட்டுமல்ல, பள்ளிக்கு வெளியிலும்தான்'' என்கிறார் அந்த மாணவர்கள் பயிலும் தேவகோட்டை "சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி'யின் தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம்.
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கற்பித்தலில் புதுமை செய்திருக்கும் ஆசிரியர்களைத் தேர்வு செய்திருக்கிறது. தமிழ்நாடு முழுக்க உள்ள சுமார் 5 1/2 லட்சம் ஆசிரியர்களில் 75 பேரைத் தேர்வு செய்திருக்கிறது. அந்த 75 பேரில் ஒருவர் லெ.சொக்கலிங்கம். அவரிடம் பேசியதிலிருந்து...
""மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் கல்வி, வாழ்க்கையோடு தொடர்புடையது. வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது. மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கிவிடாமல், முழுமையான அறிவு பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்கிறோம். இதனால் மாணவர்களின் அறிவு, திறமை வளர்கிறது. அதுமட்டுமல்ல, பிறரிடம் பழகுவதற்கு அவர்கள் கூச்சப்படுவதில்லை.
பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெரிய அறிஞர்களிடம் 1-2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட தைரியமாக கேள்வி கேட்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதற்கு நாங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொருவிதமாகக் கொண்டாடுகிறோம். பேச்சு மாதம், கவிதை மாதம், நடன மாதம், நாடக மாதம், ஓவிய மாதம், பாட்டு மாதம், கதை சொல்லும் மாதம், கையெழுத்து மாதம் எனப் பெயரிட்டு, அந்த ஒரு மாதம் முழுக்க பள்ளியில் அந்த மாதம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். உதாரணமாக, பேச்சு மாதத்தில் ஒவ்வொரு வாரமும் பேச்சுப் போட்டி நடைபெறும். திங்கள் கிழமை அந்த வாரத்துக்கான பேச்சுப் போட்டிக்கான தலைப்பு அறிவிக்கப்படும். வியாழக்கிழமை ஒவ்வொரு வகுப்பிலும் அந்த வகுப்புக்கான பேச்சுப் போட்டி வகுப்பாசிரியரால் நடத்தப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு வகுப்பிலும் பேச்சுப் போட்டியில் வென்ற மூன்று மாணவர்களை வெள்ளிக்கிழமை நடக்கும் பள்ளி பேச்சுப் போட்டியில் பங்கேற்கச் செய்து அதில் மூன்று மாணவர்களைத் தேர்வு செய்து பரிசளிப்போம். இதில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்பார்கள்.
இதைப் போன்றே ஓவிய மாதத்தில் ஓவியப் போட்டி நடத்தப்படும். நாடக மாதத்தில் நாடகப் போட்டி நடத்தப்படும். இப்படி நாங்கள் நடத்துகிற நிகழ்ச்சிகளால் மாணவர்கள் திறமையானவர்களாக வளர்கிறார்கள். தைரியமானவர்களாக, பிறருடன் பழகுவதில் கூச்சமில்லாதவர்களாக வளர்கிறார்கள்.
அதேபோன்று பல துறைசார்ந்த நிபுணர்களை அழைத்து மாணவர்கள் மத்தியில் பேசச் சொல்கிறோம். அதன் மூலம் மாணவர்களும் அவர்களைப் போல நிபுணர்களாக ஆசைப்படுகிறார்கள். உதாரணமாக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை மாணவர்களிடையே பேச அழைத்திருந்தோம். அப்போது அவரிடம், ""எங்களைப் போன்ற சிறிய பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலெக்டர் ஆக முடியுமா?'' என்று மாணவர்கள் கேட்டனர். அவரும், ""நானும் இதுபோன்ற சிறிய பள்ளியில்தான் படித்தேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
இங்கு 5 - 8 வகுப்புப் பயிலும் மாணவிகள் பூப்பெய்தி விடுகின்றனர். அவர்களுக்குப் பயம் வந்துவிடுகிறது. உடலில் ஏற்படும் அந்த மாற்றத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் விழிக்கிறார்கள்.
அதைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த தேவகோட்டை நகராட்சி மருத்துவமனையில் மருத்துவராக உள்ள பிரியாவை அழைத்திருந்தோம். பெண் ஆசிரியைகள், மாணவிகள், மாணவிகளின் தாய் ஆகியோர் மட்டுமே பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவிகள் தெளிவு பெற்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடுகளை எதிர்த்து விழிப்புணர்வு நாடகம் ஒன்றை மாணவர்கள் முன் நிகழ்த்திக் காட்டினோம். அந்த நாடகத்தைப் பார்த்த 2 - 3 வது படிக்கும் மாணவர்கள் கூட பிளாஸ்டிக்கை நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என்று சொன்னார்கள்.
மிகவும் பின்தங்கிய பகுதியான இந்தப் பகுதியில் படிக்கும் மாணவர்கள் நூலகத்தை அதற்கு முன்பு பார்த்தது கூட இல்லை. எங்கள் பள்ளியிலிருந்து 5 கி.மீ. தொலைவு உள்ள நூலகத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்று காட்டினோம்.
இப்போது 10 மாணவர்கள் அந்த நூலகத்தில் சேர்ந்து புத்தகங்களை எடுத்துப் படித்து வருகின்றனர். தேவகோட்டையில் புத்தகத் திருவிழா நடந்தபோதும் மாணவர்களை அங்கே அழைத்துச் சென்றோம்.
திருக்குறள். அபிராமி அந்தாதி போன்றவற்றைப் பாடி, அதற்கேற்ப நடனமாடுகிறார்கள் எங்கள் மாணவர்கள்.
மாணவர்களை கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சோதனைக் கூடங்களைக் காட்டினோம். ஒரே நாளில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆய்வுக் கூடங்களுக்குச் சென்று மாணவர்கள் நிறையக் கற்றுக் கொண்டனர். எட்டாவது மட்டுமே உள்ள பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் ஆய்வுக் கூடத்தைப் பார்ப்பதே அரிது.
மாணவர்களின் கல்வியை வகுப்பறைக்குள்ளேயே முடக்கிவிடாமல், வகுப்பறைக்கு வெளியேயும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்க நினைக்கும் என் முயற்சிகளுக்கு பள்ளிச் செயலர் சோமசுந்தரமும், கல்வி முகவர் மீனாட்சி ஆச்சியும் மிகுந்த ஊக்கமளிக்கிறார்கள்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...