எடைக்கற்கள் அளவைகள் - மியூசியம்
ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட நூற்பாலைகள் நிறைந்த தாவணகரேயில், பசவராஜ் எலமல்லி என்பவர் சாம்ராஜ் பேட் பகுதியில் பல்லாண்டுகாலமாக புழக்கத்தில்


ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட நூற்பாலைகள் நிறைந்த தாவணகரேயில், பசவராஜ் எலமல்லி என்பவர் சாம்ராஜ் பேட் பகுதியில் பல்லாண்டுகாலமாக புழக்கத்தில் இருந்த எடை கற்கள், தராசுகள், அளவைகள் மற்றும் எடை மெஷின்களை சேகரித்து, அபூர்வமான மியூசியமாக இந்தியாவிலேயே முதன் முறையாக அமைத்துள்ளார். இதற்கு "துலா பவனம்' என்று பெயரிட்டுள்ளார்.
பசவராஜ் குடும்பத்தினர் பரம்பரையாக எடை கற்கள், தராசுகள், அளவைகள் விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு, மன்னர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு சமஸ்தானத்திலும் பொருட்களை எடைபோட எடை கருவிகள், எடை கற்கள் போன்றவை ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்டு வந்தன. இது தவிர, அரிசி, பருப்பு போன்ற பொருட்களை அளக்க மரம், பித்தளை, இரும்பு போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட அளவைகள் பயன்பாட்டில் இருந்தன.
தபால் நிலையங்கள், மின் விநியோக அலுவலகங்களிலும் எடை பார்க்கும் கருவிகள் இருந்தன. காலப் போக்கில் மாற்றம் ஏற்பட்டபோது, பழைய அளவைகள், எடை கற்கள் பயன்பாடு குறைந்தது. புதிய எடை முறைகள் அமல் படுத்தப்பட்டன; அப்போதுதான் பழைய எடை கற்களையும், அளவைகளையும் பாதுகாக்கவேண்டுமென்ற எண்ணம் பசவராஜூக்கு தோன்றியது. அதன் விளைவுதான் "துலா பவனம்' மியூசியம்.
2006-ஆம் ஆண்டில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட எடை கற்கள், எடை கருவிகள் அளவைகளை சேகரித்த பசவராஜ், அவை எந்தெந்த காலகட்டத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டன என்ற தகவல்களையும் புத்தகங்கள் மூலம் சேகரித்தார். இந்தியா முழுவதும் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பயன் படுத்தப்பட்ட அளவைகள், எடை கற்கள் கிடைத்தன. போர்ச்சுக்கீசியர், ஆதில் ஷா, நிஜாம், பெஷாவர் மன்னர்கள் காலத்திய அளவைகளும் கிடைத்தன. இதற்காக பழைய சாமான்கள் விற்பனை செய்யும் கடைகளுக்குச் செல்லவும் பசவராஜ் தயங்கவில்லை. இவரது சேகரிப்புக்கு காலஞ்சென்ற இவரது தந்தை சென்ன வீரப்ப எலமல்லி, மகன் ஸ்ரீராஜ் எலமல்லி மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்.
2012-ஆம் ஆண்டு தன் நண்பர்கள் ஹொன்னப்ப கவுடா, நவீன் குமார் உதவியுடன் குறிப்பாக இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு உதவும் வகையில், "துலா பவனம்' என்ற பெயரில் மியூசியத்தைத் தொடங்கினார். இந்த மியூசியத்தைப் பராமரிக்க அவரது தந்தை பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றையும் அமைத்தார். இவரது அரிய சேவையைப் பாராட்டி இந்திய தபால்துறை அண்மையில் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது.
இந்த மியூசியத்தைக் காண, வாரந்தோறும் சனிக்கிழமை தவிர, மற்ற நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்கும் பசவராஜ் இதற்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இலவசமாகப் பார்க்கலாம். இந்த அரிய கண்காட்சியில், ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ளும் வகையில் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...