புருவா தீவின் நாடோடிக்கதை: தாயின் பொறுப்பும் கடமையும்!
கழுகு ஒன்று கடலுக்கு நடுவில் உள்ள தீவில் உள்ள மரத்தில் கூடு கட்டி முட்டைகளை இட்டது. அந்த முட்டைகளில் இருந்து மூன்று குஞ்சுகள் வெளிவந்தன.


கழுகு ஒன்று கடலுக்கு நடுவில் உள்ள தீவில் உள்ள மரத்தில் கூடு கட்டி முட்டைகளை இட்டது. அந்த முட்டைகளில் இருந்து மூன்று குஞ்சுகள் வெளிவந்தன.
தன் குஞ்சுகளைக் கடலுக்கு அப்பால் உள்ள நாட்டில் சேர்க்க விரும்பியது கழுகு. முதலாவது குஞ்சை, தனது கால் நகங்களால் பற்றித் தூக்கிக் கொண்டு கடலின் மீது பறக்கத் தொடங்கியது.
நீண்ட தூரம் பறந்து பாதி கடலைத் தாண்டியதும் அது மிகவும் களைப்பு அடைந்தது. தனது இறகுகளை மெல்ல அசைக்கத் தொடங்கியது.
நான் இப்பொழுது வலிமையுடன் இருக்கிறேன். எனது குஞ்சு எதையும் செய்ய இயலாத நிலையில் உள்ளது. எதிர்காலத்தில் இது வளர்ந்து வலிமையுடன் விளங்கும். நானோ முதுமை அடைந்து வலிமை இழந்த நிலையில் பதிலுக்கு என்னைக் காப்பாற்றுமா?' என்பதை அறிய விரும்பியது.
தன் குஞ்சைப் பார்த்து, ""நான் உன்னைத் தூக்கிச் சென்று காப்பாற்றுவதுபோல, முதுமை அடைந்து பறக்க இயலாத நிலையில் இருக்கும்போது என்னைத் தூக்கிச் சென்று காப்பாற்றுவாயா? உண்மையைச் சொல்'' என்று கேட்டது.
தன் தாய் எங்கே தன்னை நடுக்கடலில் தள்ளிவிடுமோ என்று அஞ்சிய குஞ்சு, ""கண்டிப்பாக உங்களைத் தூக்கிச் சென்று காப்பாற்றுவேன்'' என்றது.
ஆனால் அதன் பேச்சை நம்பாத கழுகு தன்பிடியை விட்டது. அந்த குஞ்சு கடலில் மூழ்கி மறைந்தது. கழுகு மறுபடியும் தீவுக்குப் பறந்து வந்தது.
இரண்டாம் குஞ்சையும் கால் நகங்களால் பற்றித் தூக்கிக் கொண்டு பறந்து சென்றது.
நடுக்கடலில் களைப்பு அடைந்த கழுகு, முதலாவது குஞ்சைக் கேட்ட அதே கேள்வியைக் கேட்டது.
எங்கே தன் தாய் தன்னை நழுவவிட்டு விடுமோ என்று அஞ்சி நடுங்கிய குரலில், தள்ளாத நிலையை நீங்கள் அடையும்போது உங்களைத் தூக்கிச் சென்று காப்பாற்றுவேன் என்றது.
அதன் பேச்சை நம்பாத கழுகு அதையும் கடலில் போட்டுவிட்டுத் தீவுக்கு வந்தது.
சில நாட்கள் சென்றது. மீண்டும் வலிமை பெற்ற கழுகு தனது மூன்றாவது குஞ்சையும் தூக்கிக் கொண்டு கடலின் மீது பறந்தது. நடுக்கடலை அடைந்த அது வழக்கம்போல் களைப்பு அடைந்தது.
இவ்வளவு முயற்சி செய்து இந்தக் குஞ்சைக் காப்பாற்ற வேண்டுமா? எதிர்காலத்தில் இது என்னைக் காப்பாற்றுமா? என நினைத்தது கழுகு.
தன் இரண்டு குஞ்சுகளிடமும் கேட்ட அதே கேள்வியை மூன்றாவது குஞ்சிடமும் கேட்டது.
நான் உன்னைக் காப்பாற்றமாட்டேன் என்றது அந்தக் குஞ்சு.அதிர்ச்சி அடைந்த கழுகு ஏன்? என்று கேட்டது.
சில ஆண்டுகள் சென்றதும் நான் பெரியவனாகிவிடுவேன். நீ கிழவியாகிவிடுவாய். எனக்குத் தனிக்கூடு இருக்கும். நான் என் குஞ்சுகளைக் காப்பாற்றித் தூக்கிச் செல்ல வேண்டியிருக்கும். பெற்றோரின் முதல் கடமை தன் குழந்தைகளைக் காப்பாற்றுவதுதான். அடுத்துதான் உன்னைக் கவனிப்பேன். தாயின் கடமையைச் செய்யும் விதத்தில் தான் நீ என்னைத் தூக்கிச் செல்கிறாய் என்று குஞ்சு பதில் கூறியது.
குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது பெற்றோர் கடமை. குழந்தை பிற்காலத்தில் தன்னைக் காப்பாற்றும் என்றெல்லாம் ஆராயக் கூடாது, என்ற உண்மையைத் தாய்க்கழுகு உணர்ந்து கொண்டது.
மிகவும் முயன்று அந்தக் குஞ்சைத் தூக்கிச் சென்று மறுகரையில் பாதுகாப்பாகச் சேர்ந்தது தாய்க் கழுகு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...