

ஜிம்பாப்வே-ஷோனா நாடோடிக் கதை:
காட்டில் நடுவே ஒரு குக்கிராமம். காட்டிலிருந்து வந்த கொடூரமான சிங்கங்கள் பலரைக் கொன்றுவிட, கிராமத்து மக்கள் பயந்து ஊரை விட்டே ஓடிவிட்டனர். ஒருநாள் காலை, ஊரை விட்டு ஓடும் அவசரத்தில் திமிதி என்ற பார்வையற்ற கிழவனும், பண்டா என்ற சோம்பேறி இளைஞனும் தனியே விடப்பட்டனர். காலையில் எழுந்து ஊர் காலியானதைத் தெரிந்துகொண்ட திமிதி மெதுவாக நடந்து செல்கையில், தூங்கியெழும்பி வந்த பண்டா, "பெரியவரே, என்ன நடந்தது? எல்லோரும் எங்கு போய்விட்டார்கள்'' என்று தவிப்புடன் கேட்டான். "நானும் தனியனாக விடப்பட்டேன். இனி நாமிருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருப்போம். கிராமத்தார் எங்கு போய்விட்டார்கள் என்று இனி எப்படி தேடிக் கண்டுபிடிப்பது'' என்று பெரியவர் அங்கலாய்க்க, அதற்கு பண்டா, "சிங்கங்கள் நம்மை கொன்றுவிடக்கூடாது. கிராமத்தில் இருந்தால்தானே அவை நம்மைப் பிடிக்கும். எனவே, நாம் காட்டுக்குள் ஓடி போய்விடுவோம்'' என்றான்.
சரியென்று சொல்லி இருவரும் கிராமத்தை விட்டுச் சென்று அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். அங்கு ஓர் அகலமான "பாவ்பாவ்' மரத்தைத் தேர்ந்தெடுத்து அதன் மேல் பரண் அமைத்து குடிசை ஒன்றை அமைத்தனர். திகிதி பார்வையற்றவன் என்றாலும், மீன் பிடிப்பது பொறிகள் அமைத்து பறவைகள், சிறிய மிருகங்கள் ஆகியவற்றைப் பிடிப்பது போன்ற வித்தைகளை நன்கு அறிந்தவன். அவற்றை பண்டாவுக்குக் கற்பித்து அவனை திறமைமிக்கவனாக மாற்றினான். இருவரும் பகலில் காட்டுக்குச் சென்று வேட்டையாடிவிட்டு, இரவில் தங்கள் பரண் வீட்டிற்கு வந்து பசியாறி இளைப்பாறினர். இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.
ஒருநாள் திமிதி, "பண்டா, நீயும் வளர்ந்து வாலிபம் அடைந்துவிட்டாய். உனக்கு ஒரு மணப்பெண் தேவை. நான் இறந்துவிட்டால் நீ துணையற்றவனாகிவிடுவாய். எனவே நீ மணமுடித்து கொள்வது நல்லது'' என்று கூற பண்டா ஒத்துக்கொண்டான். "ஆனால் எங்கே போய் எனக்குப் பெண் தேடுவது?'' என்றான் பண்டா.
"இங்கிருந்து நேர்கிழக்கே இரண்டு நாட்கள் நடந்து சென்றால் அங்குள்ள பெரிய ஏரியின் கரையில் ஒரு கிராமம் இருப்பது பற்றி என் அப்பா அடிக்கடி சொல்லுவார். "மணமுடித்தால் அந்தக் கிராமத்தில் மணமுடிக்க வேண்டும். அங்குள்ள பெண்கள் வீரமிக்கவர்கள், கடினமான வேலை செய்பவர்கள்' என்று கூறுவார்'' என்று திமிதி ஒரேயடியாகப் புகழ, அதைக் கேட்ட பண்டா, "சரி அங்கேயே போய் பெண் கேட்போம்'' என்றான்.
அடுத்த நாள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு இருவரும் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
காட்டு வழி செல்கையில் முதியவர் கல் போன்று ஏதோ ஒன்றை மிதிக்க, பண்டாவிடம் தான் மிதித்தது என்ன என்று கேட்டான். அது ஒரு ஆமை என்று பண்டா கூற, "அதைப் பிடித்து வைத்துக்கொள். ஒரு நேரம் உதவியாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது'' என்றான்.
அடுத்த நாள் அது போலவே கட்டை போன்ற ஒன்றின் மீது காலை வைத்து "இது என்ன?' என்று பார்வையற்ற கிழவன் இளைஞனைக் கேட்டான். "அது யாரோ வேட்டைக்காரன் தவறி விட்டுச் சென்ற துப்பாக்கி'' என்று பண்டா பதிலளிக்க, "அது தேவையாக இருக்கும் ஒரு நேரம். எனவே அதை எடுத்து வைத்துக்கொள்'' என்றான்.
"பெரியவர் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கும், போகப் போகத்தான் அது பற்றித் தெரியும்' என்று எண்ணியவாறு பண்டா துப்பாக்கியை பத்திரப்படுத்தினான். காட்டு வழி வேகமாக நடந்தவர்கள் இரண்டாம் நாள் ஏரிக்கரையை அடைந்தார்கள். கரையின் ஒருபுறம் அமைந்த அழகான குக்கிராமத்தைப் பார்த்து பண்டா, "உங்கள் தந்தை விவரித்த கிராமம் இதுவாகத்தான் இருக்கும். நாம் போய் அவர்களிடம் பேசலாம்'' என்று கூறி கிராமத்தை நோக்கி நடந்தனர். கிராமத்தின் அருகே ஏரிக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்களிடம் பேச ஆரம்பித்தான் திமிதி. "உங்கள் கிராமத்தின் பெயர் என்ன? நாங்கள் வெகுதூரத்திலிருந்து வருகிறோம்'' என்றார். அதற்கு அந்த பெண்கள், "எங்கள் ஊர் பெயர் பெண் கிராமம். ஊர் முழுக்க பெண்களே. ஆண்கள் அனைவரையும் சிங்கம் ஒன்று கொன்றுவிட்டது. அது ஊரில் எந்த ஆணையும் தங்க விடுவதில்லை'' என்று சொல்லி அங்கலாய்த்தனர்.
"அந்த சிங்கத்தை எந்த ஆணும் வேட்டையாடவில்லையா?'' என கேட்க, ""சில வீரமுள்ள ஆண்கள் சிங்கத்தை வேட்டையாட வந்தனர். ஆனால் அந்தச் சிங்கமோ அவர்களைத் தந்திரமாக ஒழித்துவிட்டது'' என்றனர். "சரி, நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?'' எனக் கேட்டனர்.
"என் வளர்ப்பு மகனுக்கு திருமணம் முடிக்க இங்கு வந்தேன். அவனுக்கு ஒரு நல்ல பெண் எடுக்க உங்கள் கிராமத்துக்கு வந்தோம்'' என்றான் திகிதி. மேலும், "எங்களை இந்தக் கிராமத்தில் தங்க விட்டால் கட்டாயமாக அந்த சிங்கத்தை வேட்டையாடிக் கொன்றுவிடுவோம்'' என்றான். அவர்கள் இருவரின் தைரியத்தைப் பார்த்து அந்தப் பெண்கள், "சரி. கிராமத்திற்கு உள்ளே வாருங்கள்'' என்று அழைத்தனர். கிராமத்துத் தலைவியும் வந்த இருவரிடம் பேசி, அவர்கள் சிங்கங்களுக்கு அஞ்சவில்லை என்பதை அறிந்து, "நீங்கள் தங்கலாம். ஆனால், உங்களுக்கு ஏற்படவிருக்கும் விபத்துக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல'' என்று கூறினாள்.
அவள் சொல்வதைக் கேட்டு பாண்டாவுக்கு பயம். "ஐயா பெரியவரே, நாம் இருட்டுவதற்குள் ஓடிவிட்டால், சிங்கம் நம்மைக் கொன்றுவிடாது அல்லவா. அப்புறம் நாம் பிழைத்துக் கொள்வோம்'' என்றான். ஆனால் கிழவனோ, "பயப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றான். இந்தக் குருட்டுக் கிழவனால் என்ன செய்ய முடியும் என்று கிராமத்துப் பெண்கள் வியந்தனர்.
திமிதியும், பண்டாவும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிசைக்குச் சென்றனர். திமிதி, "சிங்கம் வரும் வரை நான் தூங்க போகிறேன். வந்தால், என்னை எழுப்பு'' என்றான். காட்டின் வழி நடந்து வந்தபோது பிடித்த ஆமையையும், கண்டெடுத்த துப்பாக்கியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு கிழவன் குறட்டை விட ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் பலத்த கர்ஜனையுடன் சிங்கம் கிராமத்திற்கு வந்தது. கிராமத்துக்குள் ஆண்கள் இருப்பதை மோப்பம் பிடித்து நேராக அவர்கள் தங்கியிருந்த குடிசைக்கு வெளியே வந்து நின்று, "என் கிராமத்திலே, எனக்குப் பயப்படாமல் வந்து தங்கிய முட்டாள் யார்?'' என்று கோபாவேசத்துடன் கத்தியது.
திமிதி எழுந்து கொண்டு, "அடே அறிவு கெட்ட சிங்கமே. என்னையா யாரென்று கேட்கிறாய்? முதலில் நீ யாரென்று கூறு'' என்றான்.
சிங்கத்திற்கு மேலும் கோபம் வந்தது. தன் பேன் படர்ந்த தாடி முடி ஒன்றைப் பிடுங்கி கதவு இடுக்கு வழியே நீட்டியது. "என் தாடி முடியைப் பார்த்து நான் யாரென்று தெரிந்துகொள்'' என்றது. திமிதியும், "சரி. இப்போது என் தாடி முடியைப் பார்'' என்று கூறி, நூல் ஒன்றில் கட்டப்பட்ட ஆமையை கதவுக்கு வெளியே திணித்தான். "இவ்வளவு பெரிய தாடி முடி, பேன் என்றால் உள்ளே இருப்பவன் பெரிய ராட்சஷனாக இருக்க வேண்டும்'' என நினைத்து சிங்கம் பயந்தது. என்றாலும், ""நான் ஒன்றும் உன் தாடி முடியைக் கண்டோ, அதிலுள்ள பேனைக் கண்டோ பயப்பட மாட்டேன். என் கர்ஜனையைக் கேட்டிருக்கிறாயா?'' என்று சொல்லி, பலமாகக் கர்ஜித்தது.
புத்திசாலியான திமிதி, "நீ என்ன சொன்னாய்? இதை கர்ஜிப்பு என்றா கூறுவது? எலி கத்தியது போலல்லவா இருந்தது. மறுபடியும் கேட்க வேண்டும். கதவில் உள்ள ஓட்டையில் மறுபடியும் கர்ஜித்தால் என்னால் கேட்க முடியும்'' என்றான்.
சிங்கம் கதவின் ஓட்டை வழியாக கர்ஜிக்க வாயைத் திறக்க திமிதி அந்த ஓட்டை வழியாக துப்பாக்கி முனையை வைத்து சிங்கத்தை சுட்டு வீழ்த்தினான். மறுநாள் பெண் கிராமத்துப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். தங்களை சிங்கத்திடமிருந்து காப்பாற்றிய திமிதியை கிராமத்தின் தலைவன் ஆக்கினர். பண்டாவுக்கு அதே கிராமத்தில் பெண் எடுத்து மணமுடித்தான் குருட்டுக் கிழவன் திமிதி. பண்டாவுக்கு வாய்த்த மனைவிக்குப் பிறந்த குழந்தைகள் சிங்கத்தைக் கண்டு பயப்படாத குழந்தைகளாக வளர்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.