முகத்தில் எறியப்பட்ட தக்காளி! 

உலக வரைபடத்தில் கடுகு அளவு காணப்படும் பூனல் கிராமம் உலகளவில் புகழ்பெற்று விளங்குவது தக்காளி
முகத்தில் எறியப்பட்ட தக்காளி! 
Updated on
3 min read

உலக வரைபடத்தில் கடுகு அளவு காணப்படும் பூனல் கிராமம் உலகளவில் புகழ்பெற்று விளங்குவது தக்காளி திருவிழாவினால்தான் என்றால் மிகையாகாது. பூனலுக்கு இட்டுச் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினோம். தக்காளி திருவிழாவை கருத்தில் கொண்டு கிராமத்திற்குள் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பொடிநடையாக இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்றால், அது பிளாசா டெல் பியுப்லோ என்கின்ற சதுக்கத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. இங்கேதான் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் அரங்கேற இருந்தன. 

கல்லெறியப்பட்ட தேன்கூடுகளிலிருந்து நாலாபுறமும், சிதறி ஓடும் தேனீக்களுக்கு இணையாக மக்கள் அவசர கதியில் துரித நடை பயின்று கொண்டிருந்தனர். என் கண்களை நான்கு திசைகளிலும் சுழலவிட்டேன். ஆஹா! என்ன ஒரு அழகிய கிராமம் என்று வியந்தேன். 

வயல்வெளிகள், வீடுகளைச் சுற்றி அழகிய தோட்டங்கள், அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்கள், காய்த்து தொங்கும் பழங்கள், புன்னகை பூத்த முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாட குழுக்களாக நின்று பேசிக்கொண்டிருக்கும் பூனல் மக்கள், என்று எங்கும் கண்ட காட்சிகள் என் மனதை கொள்ளை கொண்டது. 
மற்றொரு ஆச்சரியமான விஷயம், பூனல் கிராமத்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் கடைகளை அமைத்து அதில் பலவிதமான பொருட்களை விற்றுக்கொண்டிருந்தனர். இதைத் தவிர, வழியெங்கிலும் பலவிதமான கடைகள் முளைத்திருந்தன. 

டொமடீனா என்ற கொட்டை எழுத்துகளுடன் தக்காளிகள் சிரிப்பது போன்று அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளையும், பலவிதமான சோமபானங்களை விற்கும் கடைகள், கொதிக்கக் கொதிக்க மாட்டு, பன்றி இறைச்சிகளை வறுத்து பன்களுக்கு நடுவே வைத்து விற்கும் தள்ளுவண்டிகள், நசுக்கிய தக்காளிகள் எறியப்படும்போது அது கண்களில் படாமல் தடுப்பதற்காக விற்கப்படும் அலங்கார மூக்கு கண்ணாடிகளையும், தொப்பிகளையும் விற்கும் கறுப்பர்கள் என்று திரும்பிய திசைகளில் எல்லாம் மக்கள் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.

இந்த கடைகளிலிருந்து வெளிப்பட்ட ஜாஸ் இசை, பாப் இசைகளுக்கு ஏற்ப இளவட்டங்கள் போடும் ஆட்டம் ஒருபுறம், மக்கள் கூட்டம் மறுபுறம் என்று தக்காளி திருவிழா சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. 

""மேடம்'' என்று அழைத்துக் கொண்டே ஒரு கறுப்பர் என் பின்னே ஓடிவந்தார். அவர் கழுத்தில் மூக்கு கண்ணாடிகளை மாலையாகக் கோர்த்து அலைந்துகொண்டிருந்தார். கைகளிலும் கறுப்பு கண்ணாடிகள், தோள்களில் மாட்டியிருந்த ஜோல்னா பையிலும் அழகிய பிரேம்களுடன் கூடிய மூக்கு கண்ணாடிகள். 

""என்ன வேண்டும்?'' என்பதைப் போல நான் அவரைப் பார்த்தேன்.
""கண்ணாடி அணியாமல் வந்திருக்கிறீர்களே? கட்டாயமாக ஒரு மூக்கு கண்ணாடியை வாங்கிக்கொள்ளுங்கள், இல்லையென்றால் வீசி எறியப்படும் தக்காளிகள் உங்கள் கண்களைப் பதம் பார்த்துவிடும்'' என்று சொல்லி பயமுறுத்த, "சரி' என்று அவரிடம் இருந்து ஒரு கண்ணாடியை வாங்கி அணிந்துகொண்டேன். 

சரியாகப் பத்து மணிக்குள் சதுக்கத்தை அடைந்துவிட வேண்டும் என்று வேகமாக நடந்தோம். அப்பப்பா, இளைஞர்களில் பலர் விநோதமாக அலங்காரங்கள் செய்துகொண்டிருந்தனர். தர்பூஸ் பழங்களை வெட்டி அதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதிகளை அகற்றிவிட்டுத் தலையிலே ஹெல்மெட் போல வைத்திருந்தார் ஒருவர், மற்றொருவர் தன்னுடைய தலைமுடியை சேவலின் கொண்டையைப் போல வெட்டி முடிந்து அதற்கு பல விதமான வண்ணங்களை தடவியிருந்தார். இவைகளினால் ஆன உடையை அணிந்து நடனமாடியவரை, மக்கள் சூழ்ந்து கைதட்டி மகிழ்ந்தனர். நாங்களும் இதையெல்லாம் ரசித்தபடி நடந்து சதுக்கத்தை அடைந்தோம்.

அங்கே நம்ம ஊர் உரியடி விழாவுக்கு வழுவழுப்பான கம்பத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவி வைத்திருப்பார்களே, அதே போன்ற கம்பம் நடப்பட்டிருந்தது. இதை "பாலோ ஜாபன்' என்று அழைக்கின்றனர்.

இந்தக் கம்பத்தில் மாட்டின் கொழுப்பைத் தடவி உச்சியில் மாட்டிறைச்சியை சொருகி வைத்துவிடுகின்றனர். விருப்பமுள்ள இளைஞர்கள் கம்பத்தில் ஏறி அந்த மாட்டிறைச்சியைக் கீழே தள்ள வேண்டும். இந்த முயற்சியில் ஆட்கள் ஈடுபட்டிருக்கும்பொழுது சுற்றிச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குரலுயர்த்தி பாடுகிறார்கள், வெறி வந்தவர்களைப் போல ஆடுகிறார்கள். 
உயர்ந்த கட்டடங்கள் குடியிருக்கும் பூனல் குடிமக்கள் தண்ணீர் பைப்புகள் மூலம் தண்ணீரைப் பீச்சி அடிக்கிறார்கள். நானும் என் கணவரும் தொப்பலாக நனைந்து போனோம். சிலர் டிரம்களில் தண்ணீரைப் பிடித்து வைத்து அதைப் பக்கெட்டுகளில் எடுத்து மேலே இருந்து கீழே நின்றிருக்கும் ஆட்களின் மீது ஊற்ற, சில்லென்ற நீர் தங்கள் மீது பட்டதும் "ஹோ' என்று கத்தி மீண்டும் ஆடுகிறார்கள். எங்கிருந்தோ பறந்து வந்த தக்காளி ஒன்று என் முகத்தைப் பதம் பார்த்தது. ஒரு வீட்டின் மாடியில் இருந்த இளைஞர் ஒருவர் "ஹலோ இந்தியன் என்ஜாய்' என்று கத்தினார். எய்தவர் அவர் என்று புரிந்துபோக நான் அவரை நோக்கி கைகளை அசைத்தேன். பறக்கும் தட்டுகளாக தக்காளிப் பழங்கள் பறந்து வந்த வண்ணம் இருந்தன. 

அதோ ஒருவர் மாட்டிறைச்சியை வீழ்த்திவிட, ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்கிறது, அவ்வளவுதான்! பெரிய, பெரிய டிரக்குகள், தக்காளிகளை ஏந்தியபடி ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்கின. கைகளை வானத்தை நோக்கி நீட்டியபடி, தொம், தொம் என்று தக்காளிகளை மிதித்தபடி இளமங்கைகளும், வாலிபர்களும் வர, ஜனங்களின் கரகோஷம் காதைப் பிளக்கிறது. சில நொடிகளில் கைகளில் நசுங்கிய தக்காளிக் கூழை எடுத்து மக்கள் மீது வாரி அடிக்கின்றனர். பெரிய பைப்புகள் மூலம் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இப்படி படை எடுத்துவரும் டிரக்குகள் தக்காளி மழையை பொழிவிக்க, மக்கள் வெள்ளம் அதில் நீந்தி மகிழ்கிறது.

ஒரே சத்தம், ஆட்டம், பாட்டம், தலைகளில் தக்காளி சாறு வழிய தெருக்களில் ஓடும் தக்காளி சாற்றில், விழுந்து புரண்டு நீச்சல் அடிப்பதுபோல வழுக்கிச் சென்று கூடியிருக்கும் மக்கள் போடும் ஆட்டம் இருக்கே பார்ப்பவர் இதயங்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன.

ஒரு மணி நேரம் சென்றதும் மீண்டும் ஒரு பெரிய வெடிச்சத்தம். உடனே தக்காளிகளை எறிவதை நிறுத்தி விடுகின்றனர். மறு நிமிடம் கூடியிருப்போரை வெளியேற்றுகின்றனர். 

உச்சி முதல் உள்ளங்கால் வரை தக்காளி சாற்றினால் அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் சுற்றியிருக்கும் சந்துகள் வழியாகக் கூட்டம் வெளியேறுகிறது. ஃபயர் இன்ஜின்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தெருக்களும், வீடுகளும் கழுவப்படுகின்றன. வீடுகளிலிருந்து பைப்புகள் மூலம் வழியும் தண்ணீரில் மக்கள் தங்களைச் சுத்தம் செய்து கொள்கிறார்கள்.

தாகத்திற்கு மதுபானம், பசிக்கு "பயேயா' (இது ஸ்பேனிஷ்காரர்களின் விருப்பமான உணவு), ஜாஸ் இசைக்கு நடனம் என மகிழ்ச்சியாகி விடுகிறார்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com