

காலை சூரியனின் இளங்கதிர்கள், விலகியிருந்த திரைச்சீலைகளின் வழியாக என் முகத்தில் விழ திடுக்கிட்டுக் கண்விழித்தேன். பக்கத்தில் இருந்த கடிகாரம் காலை மணி 7.30 என்று காட்டியது. அம்மாடி, இப்படி தூங்கிவிட்டோமே என்று எண்ணி முடிப்பதற்குள் என் கணவர் குளித்து முடித்து ஃபிரஷ்ஷாக வந்தார்.
""நன்றாக தூங்கினாயா, நீண்ட பயணம் செய்து வந்து இருக்கிறோம், அதனால்தான் நான் உன்னை எழுப்பவில்லை, அக்டோபர் ஃபெஸ்டின் பரேடு, பத்து மணிக்குத்தான் ஆரம்பமாகிறது. அதுவும் ஊர்வலம் நாம் தங்கியிருக்கும் ஹோட்டலின் வீதி வழியாகத் தானே செல்கிறது, அதனால் பதட்டப்படாமல் கிளம்பு'' என்றார்.
அக்டோபர் பீர் திருவிழா நடந்தேறும் டிரிஸ்ஸியன்வீஸ் மைதானத்தின் அருகிலேயே, அங்கு ஐந்து நிமிடங்களில் நடந்து சென்றுவிடும் வகையில் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்னரே இந்தியாவிலிருந்து இன்டர்நெட் மூலம் ஹோட்டலை புக் செய்து இருந்தோம். இதில் கூடுதல் செüகரியம் என்னவென்றால் உலகப்புகழ் பெற்ற பரேடைப் பார்க்க, எங்கள் ஹோட்டலை விட்டு வெளியே வந்து நின்றாலே போதும்.
வெளியே குளிர்காற்று வெயிலையும் மீறி, போட்டிருந்த ஸ்வெட்டரின் வழியாக ஊடுருவி உடம்பை நடுங்க வைத்தது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூட ஆரம்பித்திருந்தார்கள். உலகிலேயே, மிகப் பெரிய நாட்டுப்புறப் பண்பாட்டை வெளிப்படுத்தும் அணிவகுப்பு இது என்று கேள்விப்பட்டதினால் அதைக் காண பெரும் ஆர்வம் கொண்டிருந்தோம். திடீர் என்று பீர் பேரல்கள் பலவற்றை சுமந்தவண்ணம் ஒரு பெரிய தள்ளுவண்டி வந்தது. அந்த வண்டியை இழுத்துவந்த குதிரைகளின் அழகையும், அவைகள் அலங்கரிக்கப்பட்டிருந்த விதங்களைப் பார்த்த மக்கள் கைகளைத் தட்டி மகிழ்ந்தனர்.
"அக்டோபர் ஃபெஸ்ட்' என்கிற பீர் திருவிழா கொண்டாடப்படும் டிரிஸ்ஸியன்வைஸ் மைதானத்தில், உலகெங்கிலும் வந்து குழுமும் மக்களுக்கு பீரை சப்ளை செய்ய என்று பீர் கூடாரங்களை அமைக்கிறார்கள். இங்கு மியுனிக்கிலும், அதனுடைய சுற்றுப்புறங்களிலும் தயாராகும் பீரை மட்டுமே வழங்குகிறார்கள். இதைப் போன்ற கூடாரங்கள் 30 இருந்தாலும், மிகப்பெரிய மெகா சைஸ் கூடாரங்கள் பதினான்கே உள்ளன.
பீர் திருவிழாவுக்கு நாள் ஒன்றுக்கு ஆறு லட்சம் மக்கள் வருகிறார்கள். ஆனால் நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்கள் மட்டுமே அமர்ந்து பீரை குடிக்க முடியும் என்பதால், இத்தகைய கூடாரங்களில் இருக்கைகளுக்கான முன்பதிவை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மிகவும் புகழ்வாய்ந்த ஸ்சுட்ஜென் கூடாரத்தில் (Schutzen Tent) இரண்டு இருக்கைகளை, மூன்று மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தோம். பீர் திருவிழாவின் அணிவகுப்பில் ஹாக்கர் சுவார் (Hacker Pschorr), ஹோப்பிராய் ஹவுஸ் (Hofbrau haus) போன்ற பல புகழ்பெற்ற பீர் தயாரிப்பாளர்களின் கூடாரங்களைச் சேர்ந்த பீர் பேரல்கள் வண்டிகளை குதிரைகள் இழுத்து வந்தன. இந்த வண்டிகளில் அழகிய பெண்கள் நின்றுகொண்டு பெரிய பெரிய பீர் மக்குகளில் வழிய வழிய பீரை ஊற்றி சுற்றியிருக்கும் மக்களை நோக்கி நீட்ட, அவர்களும் குடு, குடு என்று ஓடிச்சென்று அவைகளைப் பெற்றுக் கொண்டனர். குவளையும் பீரும் இலவசம் என்றால் மகிழ்ச்சிக்கு சொல்லவா
வேண்டும்.
தொலைதூரத்தில், பீர் திருவிழாவின் அணிவகுப்பு வருவது பார்வையில் பட்டது. என் மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறந்தது. மொத்தம் 8,000 - 10,000 மக்கள் விதவிதமான உடைகளில் அணிவகுத்து வர இருந்தனர். 70 வகையிலான வாத்தியக் குழுக்கள் இசைத்த வண்ணம் வருவார்கள் என்றனர்.
நாங்கள் காத்துக் கொண்டிருந்த வீதியில் ஊர்வலம் நுழைந்தது, மியுனிக்கிலேயே அழகிய பெண் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவள் குதிரையில் அமர்ந்து கைகளை அசைத்த வண்ணம் வந்தாள். பின்னர் என் கண்களுக்கு விருந்து படைத்தவற்றை எழுதி மாளாது. இரண்டு மணி நேரத்துக்கு சற்றுக்கூடுதலாக, மொத்தம் ஏழு கி.மீ நீளம் நீண்ட ஊர்வலத்தை, கற்பனை சக்தியின் விளிம்புகளை உடைத்தெறிந்து, மெய்மறக்க செய்தவற்றில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.
வண்டிகளை இழுத்து வந்த குதிரைகளின், முன் நெற்றியில் கற்றையாகப் புரளும் முடி காற்றில் பறக்க, தரையைத் தொடும் வால்களில் இருந்து நீளும் முடியின் அழகு, நான்கு கால்களில் பரவிக் கிடக்கும் ரோமம், வெள்ளை, கறுப்பு, சாந்து நிறம், சாம்பல் நிறம் என்று பேண்டு வாத்தியங்களின் இசைக்கு ஏற்ப நடந்த அந்த வாயில்லா ஜீவன்கள் கடைவிரித்த அழகையும், அவைகளை அலங்கரித்த ஆபரணங்களை வடிவமைத்தவர்களின் கைத்திறனையும் புகழ வார்த்தைகள் என்னிடம் இல்லை.
எத்தனை விதமான வண்ண உடைகள், தொப்பிகள், காலணிகள், மலர்கள், அவைகளை அணிந்து வந்த மங்கையர்கள், காளைகளின் அழகு, குழந்தைகள் கூட சின்ன தள்ளுவண்டிகளில் ஊர்வலம் வந்தனர். நான்கு வயது முதல் பத்து வயது பிள்ளைகள் தங்கள் பெற்றோர் கைகளைப் பற்றி நடந்து வந்தனர். ஜெர்மனியின் மூலை முடுக்குகளில் இருக்கும் பலவகை கலாச்சாரங்கள், அங்கே அணிவகுத்து வந்த மக்கள் மூலமாக தங்கள் பாரம்பரியத்தையும் சுமந்து வந்தன.
பலருடைய உடைகளில், சூரிய ஒளியில் பளபளத்த மெடல்கள் மாலைகளாக அவர்களுடைய கழுத்திலிருந்து இடுப்பு வரை தொங்கி நடையின் வேகத்திற்கேற்ப நடனம் புரிந்தன. பல கிளப்புகளில் நடந்த ஏர் ரைபில், ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் வென்ற மெடல்கள் அவை என்று கேட்டு அறிந்து பிரம்மித்தோம். என் மனதை மிகவும் நெகிழவைத்த நிகழ்வு ஒன்று இத்தனை அமர்க்களத்திலும் நடந்தேறியது. பல உயர் ரக நாய்களின் அணிவகுப்பும் நடந்தது. ஓடி வந்து கொண்டிருந்த அந்த நாய்களுக்கு!...
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.