இசைக்கருவிகள் வாசிப்பதில் தனக்கென தனிப்பெயர் பெற்றவர் "கடம்' கார்த்திக். "விக்கு' விநாயகராமின் சீடர். லயவாத்தியமான கடத்தில் தனது கற்பனை திறத்தாலும், லய ஞானத்தாலும், தனித்துவமான வாசிப்பாலும் இன்றைய தலைமுறைக்கலைஞர்களில் பிரபலமானவர். தான் கடந்து வந்த பாதையை நம்மிடம் நினைவு கூர்ந்தார்:
"எங்கள் குடும்பத்தில் இசையை முழு நேர தொழிலாகக் கொண்டவர்கள் யாரும் கிடையாது. அப்பா இ.வி.சுப்ரமணியம் ஆடிட்டர். அம்மா பத்மா. கர்நாடக இசை கற்றவர். பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு பாடுபவர். திருவல்லிக்கேணியில் ஆரம்ப கால வாழ்க்கை. அம்மா பாட்டு சொல்லிக்கொடுப்பார். ஆனால் எனக்கு பாட்டு பாடுவதை விட தாளத்தில் தான் விருப்பம் அதிகம். 4 வயதிலே வீட்டிலுள்ள தாம்பாளத்தில் தாளம் போடுவேன். மண்பானையில் தாளம் போட்டு உடைத்துவிடுவேன். வீட்டில் அடி விழும். அடுத்து பித்தளை பானையில் தாளம் போடுவன்.
நங்கநல்லூரில் என் அத்தை வீடு இருந்தது. அவர் வீட்டிற்கு அருகே பானை செய்யும் இடம் இருந்தது. அவர் 1 ரூபாயில், எனக்கு பானை வாங்கி கொடுத்தார். அதை வாசித்துக் கொண்டே இருப்பேன். வீணை, மிருதங்கம் போன்றவை இசைக்கருவிகள் என்பது சிறுவயதிலேயே தெரியும். ஆனால் கடம் என்பது சொன்னாலும் தெரியாது. அது பானையாக தான் தெரிந்தது. என்னை அறியாமல் பானையில் தாளம் போட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.
எங்க அப்பாவின் நண்பர் ஒருவர் விஜயதசமி அன்று என்னை அழைத்துக் கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் விக்கு விநாயகராம் வீட்டிற்குச் சென்றார். அவர் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தார். என்னை அவரிடம் காட்டி வகுப்பில் சேர்த்து கொள்ளுங்கள் என்றார். "உனக்கு என்ன கத்துகனும்னு' கேட்டார். நான் அமைதியாக இருந்தேன். வீட்டிலிருந்து கிளம்பும் போதே அம்மா, அப்பா வாய்க்கு பூட்டு போட்டுத்தான் அழைத்துப் போனார்கள். அவர் மிருதங்கத்தை கொடுத்து வாசிக்கச் சொன்னார். எனக்கு கடம் வாசிக்கதானே ஆசை. ஆனால் மிருதங்கம் தருகிறாரே என்று விரும்பம் இல்லாமல் வாசித்தேன். அடுத்து கடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். விடுவேனா? கடம் கிடைத்ததும் வாசித்தேன். எனக்கு கடம் மீது விருப்பம் என்பதை புரிந்து கொண்டார். அப்போது எனக்கு வயது 8. ஆனால் 12 வயதுடைய தோற்றம் இருக்கும். "உனக்கு விரல் சரியா இருக்கு. நீ கடம் கத்துகோன்னு' சொல்லி கற்றுக்கொள்ள வரச் சொன்னார்.
அவர் கிட்ட கடம் கற்றுக்கொண்டு, பள்ளி சென்று வந்தேன். மாலை நேர கச்சேரிகளில் கடம் வாசிப்பேன். அம்மா பாடின கச்சேரிகளில் வாசித்தது அதிகம். ஒரு வழியாக மேடை அனுபவம் கிடைத்தது.
இப்போது இருப்பது போன்று அப்போது அரங்கேற்றம் கிடையாது. அடி, மிதிபட்டு, மோதி எழுந்து வர வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசு வாங்குவேன். வடமொழியில் ஈடுபாடு உண்டு. ஆனால் எப்போதும் காதல் என்பது கடம் மீது மட்டுமே. பி.ஏ, எம்.ஏ , எம்.ஃபில், பி.எச்டி என அனைத்துமே சமஸ்கிருதத்தை பாடமாக கொண்டு படித்து முனைவர் பட்டம் வாங்கினேன். படிப்பு ஒரு புறம் இருந்தாலும், என்னுடைய கடம் வாசிக்கும் பயிற்சி விடாமல் தொடர்ந்தது.
1992-ஆம் ஆண்டு, வீணை காயத்ரி அவருடைய இசை கச்சேரி ஒன்றிற்காக என்னை மஸ்கட் அழைத்துச் சென்றார். அது தான் நான் வாசித்த முதல் வெளிநாட்டுக் கச்சேரி. கார்த்திக் கடம் நல்லா வாசிப்பான் என்ற வாய்மொழியாக இசைத்துறையில் பரவ ஆரம்பித்தது. நானும் விடாமல் கடம் பயிற்சியை தொடர்ந்தேன். ஒவ்வொரு மேடையும் எனக்கு பரீட்சையாக அமைந்தது.
பாலமுரளிகிருஷ்ணா, குன்னக்குடி வைத்தியநாதன், சேஷகோபாலன், சங்கரநாராயணன் என பலருக்கு வாசித்த அனுபவம் கிடைத்தது. தொடர்ந்து திரையிசை, மேல்நாட்டு இசையும் என்னை கவர்ந்தது. இசைஞானி இளையராஜாவுக்கு பாடல்கள் வாசித்து இருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 50 பாடல்களுக்கு மேல் கடம் வாசித்துள்ளேன். இசையில் பன்முறை தன்மையை அடைந்தேன். அடுத்து என்ன செய்வது என்று யோசித்த போது ஏங்ஹழ்ற் ஆங்ஹற் என்ற இசைக்குழுவை ஆரம்பித்தேன். என்னுடைய சிறுமுயற்சி இது. என்னுடன் சேர்ந்து 5 அல்லது 6 பேர் டிரம்ஸ், தபேலா, மிருதங்கம், கடம் என கச்சேரிகளில் வாசிப்போம். புதுபுது யுக்திகளை புகுத்தி ஜனங்களிடம் இசையை கொண்டு சென்றேன். அனைத்து தரப்பிலும் இருந்து பாராட்டுக் கிடைத்தது.
கடின உழைப்பு நிச்சயம் நம்மை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கும் இது என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் என்கிறார் கடம் கார்த்திக்.
-வனராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


