1983-ஆம் ஆண்டு மைசூரில் உள்ள "தொன்யாலோகா' என்ற அறக்கட்டளையின் இயக்குநர் சி.டி.நரசிம்மையா ஓர் அஞ்சல் அட்டை எழுதியிருந்தார். அவர் பெயர் பெற்ற ஆங்கிலப் பேராசிரியர். மைசூர் மகாராஜா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்.
அவரது அஞ்சல் அட்டையிலுள்ள சாரம் இதுதான்: "1983-ஆம் ஆண்டு மே மாதம் முதல் "தொன்யாலோகா' செயல்பட ஆரம்பமாகிறது. அது ஓர் சர்வதேச இலக்கிய அமைப்பு. எல்லா நாடுகளில் இருந்தும் இரண்டு மூன்று எழுத்தாளர்களை விருந்தினர்களாக அழைக்கிறோம். அவர்களுக்கு, உணவு, உறைவிடம் தருகிறோம். எங்கள் தொன்யாலோகாவில் தங்கி இருந்து சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என்று இலக்கிய ரீதியில் விருப்பமான எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதற்கு பிரதி கூலமாக அவர்கள் ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. இப்படைப்பு தொன்யாலோகாவில் எழுதப்பட்டது என்று ஒரு வரி எழுதுவதன் மூலம் குறிப்பிட்டால் போதும்'- என்று இருந்தது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாற்பத்து மூன்று வயதாகிவிட்டது. முதல் நாவலான "சாயாவனம்' வெளிவந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. "அவன் ஆனது' எனது இரண்டாவது நாவலும், "தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் கூட பிரசுரமாகி இருந்தன. ஆனால் நான் பிரபலமான எழுத்தாளன் இல்லை. தமிழ்நாட்டின் வெகுஜன பத்திரிகைகள் என் கதைகளைத் தொடராக வெளியிட்டது கிடையாது. நான் சிறுகதைகளை, பத்திரிகைகளுக்கு அனுப்பியதும் இல்லை. பத்திரிகைகளும் என்னிடம் சிறுகதைகள் கேட்டதும் கிடையாது. ஆனாலும் எழுதி கொண்டிருந்தேன். அது நிறைவாகவே இருந்தது.
மைசூர் தொன்யாலோகா அழைப்பு, ஓர் அங்கீகாரத்தின் வெளிப்பாடாக இருந்தது. கர்நாடகத்தில் உள்ள மைசூரில் பேசப்படும் கன்னட மொழி தெரியாது. ஆங்கிலம் அரைகுறை. எழுத்தில் பெரிய சாதனை எதுவும் புரியாதவன். பிரபலமான பன்மொழி எழுத்தாளர்கள் கூடும் போது அவர்களுக்கிடையே எப்படி பொருத்தமான எழுத்தாளனாக இருப்பது என்ற ஐயம் ஏற்பட்டது. எனக்குப் பழக்கமான பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் தான். அவர் இந்தியாவின் சில மாநிலங்களுக்குச் சென்று இலக்கியக் கருத்தரங்குகள் மாநாடுகளில் சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறவர். ஆங்கிலம் அறிந்தவர். இலக்கியம் தெரிந்தவர். "கணையாழி' ஆசிரியராகவும் இருந்தவர். அவர் நல்லாலோசனைக் கூறுவார் என்று சி.டி.நரசிம்மையா கார்டை எடுத்துக் கொண்டு தியாகராய நகரில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றேன்; அவர் இருந்தார்.
"தொன்யாலோகா' சி.டி.நரசிம்மையா கார்டை எடுத்து நீட்டினேன். அவர் கவனமாகப் படித்தார். அவரது முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேன். கார்டை என்னிடம் கொடுத்துவிட்டு, “"நல்ல அழைப்பு. கலந்து கொள்வதாக உடனே பதில் எழுதிவிடுங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். அதோடு எழுதுவதற்கு உகந்த இடம்'” என்றார்.
""கன்னடம், ஆங்கில மொழி தெரியாதே. மொழி தெரியாமல் என்ன செய்வது?'' என்று கேட்டேன்.
""மொழி ஒரு பிரச்னையே இல்லை. எந்த இடத்திலும் சமாளித்துக் கொண்டு விடுவீர்கள். தயக்கமே வேண்டாம்'' என்றார்.
நான் அவரையே பார்த்தபடி இருந்தேன். ""இப்போது ஏதாவது எழுதி கொண்டிருக்கிறீர்களா?''”என்றார்.
“""ஒரு நாவல் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.'' என்றேன்
"" நன்றாகப் போய்விட்டது. அதனை தொன்யாலோகாவில் முப்பது நாட்களில் எழுதி முடித்துவிடலாம். தைரியமாகப் போய் வாருங்கள்.''” என்று வழியனுப்பி வைத்தார்.
1983-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் அதிகாலையில் பெங்களூர் வந்தேன். அதனைத் தொடர்ந்து திப்பு எக்ஸ்பிரசில் மைசூர் வந்தேன். பொழுது புலர்ந்துவிட்டது. ஆனாலும், பனியாகவும், குளிராகவும் இருந்தது. ஆட்டோ பிடித்து மைசூர் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியிருந்த தொன்யாலோகா வந்து சேர்ந்தேன்.
தொன்யாலோகாவின் அடையாளமாக தெற்கு முனையில் பெரிய சில்வர் ஓக் மரம் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் தொன்யாலோகா என்று ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் பெயர் பலகை இருந்தது.
தோட்டத்திற்குள் சென்றேன். எட்ட எட்ட புதிதாகக் கட்டப்பட்ட மூன்று மாடி வீடுகள். முதல் வீட்டில் இருந்து ஒரு வெள்ளை நாய் குரைத்துக்கொண்டு ஓடி வந்தது.
பேராசிரியர் சி.டி.நரசிம்மையா வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தார். நாயை அடக்கிவிட்டு “""கந்தசாமி''” என்று கேட்டார்.
நான் வணக்கம் தெரிவித்தேன். கையை நீட்டி பையைக் கேட்டார். பின்னால் நகர்ந்து கொண்டேன். நடைபாதை வழியாக விருந்தினர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். நான் கூடவே சென்றேன்.
""ஒரு மணி நேரத்திற்கு முன்னால் தான் நஸிம் இஸிக்கில் வந்தார். அவர் பெரிய கவிஞர். ஆங்கிலத்தில் எழுதுகிறவர். மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசியர். "இம்பிரிண்ட்' என்ற ஆங்கில இலக்கியப் பத்திரிகை நடத்தியவர். அவர் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா?''
“""இல்லை. ஆனால் "இம்பிரிண்ட்' பார்த்து இருக்கிறேன். சில இதழ்கள் படித்திருக்கிறேன்.''
நான் தங்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே மேசை, நாற்காலிகள், எழுத காகிதம், இரண்டு பேனாக்கள், குடிப்பதற்கு தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அடுத்த அறை கொசு வலை கட்டிய தூங்கும் அறை.
அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எதிரில் என்னை அமர சொன்னார். அமர்ந்ததும் “ ""உங்களுக்கு சைவ சாப்பாடு. காலையிலும், மத்தியானமும் நாம் ஒன்றாகச் சாப்பிடுகிறோம். இரவு அறைக்கே சாப்பாடு வந்துவிடும். காலையில் ஆறு மணிக்கு நாம் மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டே நடைப்பயிற்சிக்குப் போகிறோம். இவை தவிர வேறு என்ன வேண்டு
மானாலும் தயக்கம் இல்லாமல் கேட்கலாம். நீங்கள் எங்கள் விருந்தினர்''” என்றார்.
நான் தலையசைத்தேன்.
""“உங்களுக்கு காபி வரும். குடித்துவிட்டு, குளித்துவிட்டு வாருங்கள். நாளையில் இருந்து ஆங்கிலப் பத்திரியை கொடுக்கப்படும்.''” என்று சொல்லி விட்டெழுந்தார்.
பறவைகள் கத்திக் கொண்டு பறந்து சென்றன.
நான் குளித்து உடை மாற்றிக் கொண்டு, தொன்யாலோகாவை ஒரு சுற்றுச் சுற்றுவிட்டு அவர் இல்லத்திற்குச் சென்றேன். பேராசிரியரும், நஸிம் இஸிக்கிலும் வரவேற்றார்கள். நஸிம் இஸிக்கில் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர். அவரது கவிதைகள் "டைம்ஸ் ஆப் இந்தியா' வில் வெளிவந்து கொண்டிருந்தன. அதோடு ஆங்கில பேராசிரியர். எனவே அவர் இந்தியா முழுவதிலும் அறியப்பட்டக் கவிஞராக இருந்தார்.
நான் தமிழ்மொழி எழுத்தாளன். என் எழுத்துக்கு மொழி பெயர்ப்பு எல்லாம் கிடையாது. எனவே வெளி மாநிலங்களில் அறியப்படாத எழுத்தாளன். அது தான் இந்திய மொழி எழுத்தாளர்களுக்கும், இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு. ஆங்கிலத்தில் எழுதப்படுவதைப் பலர் படிக்காவிட்டால், பெயர் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நஸிம் இஸிக்கில் இங்கிதமானவராக இருந்தார். குறைவாக சப்தம் இல்லாமல் பேசினார். அவர் பேச்சின் வழியாகத் தெரிந்தது அடக்கமான மனிதர் என்பது தான். காலை உணவு சாப்பிட்டதும், நான் தொன்யாலோகா நூலகத்திற்குச் சென்றேன்.
நூலகம் கட்டடக் கலைஞரால் வட்ட வடிவமாகக் கட்டப்பட்டிருந்தது. சுவரெல்லாம் இதமான வெளிர் நீலவர்ணம். புத்தகங்கள் கைக்கும் எட்டும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள். இந்திய எழுத்தாளர்களில் ஜவஹர்லால் நேரு எழுதிய "உலக சரித்திரம், சுய சரித்திரம்' எல்லாம் இருந்தன. நூலகத்தோடு ஒட்டி திறந்தவெளி நாடக அரங்கம் இருந்தது. அதில் சோதனை நாடகங்கள் பலவும் சிறிய திறந்த வெளி நாடக அரங்கில் நடித்தப்பட்டன என்று கூறினார்கள்.
காலை நடைபயிற்சியின் போது இலக்கியம், சமூகவியல், மொழி பற்றியெல்லாம் பேசிக்கொண்டே சென்றோம். சில நாட்கள் சுய சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டோம்.
சி.டி. நரசிம்மையா, ராம்நகர் கோலசபெட் தாசப்பா நரசிம்மையா என்றார். ""தாய்மொழி தெலுங்கு, நான் கர்நாடகாவில் வாழ்வதால் கன்னடம் தாய் மொழியாகிவிட்டது'' என்றார்.
அவர் அப்பா தாசப்பா மளிகைக் கடைக்காரர். அவருக்கு உதவியாக இருக்கத்தான் பத்தாவது வயது வரையில் படித்தால் போதுமென்று படிக்க வைத்தார். ஆனால் அவர் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர்களது ஆலோசனைப் பேரில் மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். பிறகு, இங்கிலாந்து, அமெரிக்கா எல்லாம் சென்று மேல்படிப்பு படித்து, மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகிவிட்டதாகச் சொன்னார். தன் இரண்டு மகன்களும், ஒரு மகளும் ஆங்கிலப் பேராசிரியர்கள் தான். வேறு என்னென்னவோ படிப்புகள் இருக்கின்றன. ஆனால் கற்பதும், கற்பிப்பதுமான ஆசிரியர் தொழிலே உவப்பாதையாகிவிட்டது என்றார்.
நாங்கள் கேட்டுக் கொண்டே பெரிய அரச மரத்தைத் தாண்டிச் சென்றோம். எதிரில் வந்தவர்கள் எல்லாம் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டுச் சென்றார்கள். அவர் கெüரவம் மிக்கவராக இருப்பது தெரிந்தது.
நஸிம் இஸிக்கில் தன் மூக்குக் கண்ணாடியை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு சூரியனைப் பார்த்தபடி கண்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு நிமிடங்கள் கழித்து எங்களோடு சேர்ந்து கொண்டார். கண்ணாடியை அணிந்து கொண்டு நடந்தார்.
""கண் பயிற்சியா?'' என்று கேட்டேன்.
""ஆமாம். உடல் பயிற்சி இருப்பது போல கண்களுக்கும் பயிற்சி இருக்கிறது. என் மூக்குக் கண்ணாடி முப்பதாண்டுகளுக்கு முன்னால் போட்டது. மாற்றவே இல்லை. தினமும் சூரியனைப் பார்த்து பயிற்சி செய்கிறேன். கண் டாக்டர்களைப் பார்த்தேன். அவர்கள் பலவிதமான சோதனைகள் செய்து பார்த்துவிட்டு கண்ணாடியை மாற்ற வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கும் பிரச்னை இல்லை''” என்றார்.
அவர் ஒரு யூதர். ஐந்து தலைமுறைகளாக மும்பையில் வாழ்வதாகச் சொன்னார். “""ஆனால் தாய்மொழி குஜராத்தியோ மராட்டியோ இல்லை. ஹிப்ரு இல்லை. ஆங்கிலம் தாய்மொழியாகிவிட்டது. வீட்டில் பேசுவதும், பள்ளி, கல்லூரிகளில் படிப்பதும் ஆங்கில மொழி வழியாகத் தான். மொழிகளில் சுதேசி மொழி அன்னிய மொழி என்பதெல்லாம் கிடையாது.''” என்றார்.
""இந்தியாவிலேயே மொழி அபிமானிகள் தமிழர்கள் தான். ஐரோப்பிய நாடுகளில் பிரெஞ்சு மொழி பேசுகிறவர்களைத்தான் மொழி வெறியர்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் போலவே பன்மொழிகள் பேசப்படும் இந்தியாவில் தமிழர்கள் பார்க்கப்படுகிறாக்ள்.''
“""தமிழ் ஓர் இந்திய மொழி. அம்மொழி ஒன்றுதான் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பேசப்படும் மொழியாகவும், எழுதப்படும் மொழியாகவும் இழையளாமல் இருக்கிறது. அதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு மொழி வெறியர்கள் பிரிவினைவாதிகள், தேசப்பக்தி இல்லாதவர்கள் என்றெல்லாம் சொல்லி ஒதுக்கப்பார்க்கிறார்கள்.''”
""பெரிய நாட்டின் பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ ஆங்கிலம் நம் பிரச்னைகளை எல்லாம் தீர்த்துவிடும் என்று படுகிறது.''” என்றார் பேராசிரியர் நரசிம்மையா, அதற்கு நஸிம் இஸிக்கில் தலையசைத்தார்.
“""நீங்கள் இருவரும் பேராசிரியர்கள். பல நாடுகளுக்கும் சென்று நாட்டின் நிலவரம் அறிந்தவர்கள். நான் தமிழன். தமிழ்மொழி மட்டும் அறிந்தவன். என் முன்னோர்களில் சிலர் தமிழில் எழுதி சர்வதேச கவியாகி இருக்கிறார்கள். அதுவே என்னை எழுத வைக்கிறது.”''
“""எல்லா எழுத்தாளர்களும் தாய்மொழியில் தான் எழுதுகிறார்கள். எங்களைப் போன்று புலம் பெயர்ந்து வந்தவர்களில் சிலர் வேறு மொழிகளில் எழுதுகிறார்கள்.“நீங்கள் எங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள்?''”
“""என் மூதாதையர்கள் மதுரை மேலூர் பகுதி மக்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரும் கூட்டமாகப் புலம் பெயர்ந்து காவிரி ஆறு பாயும் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பிரிந்து வாழ்ந்தர்கள். அவர்களில் சிலர் தென்ஆப்பிரிக்கா, மலேசியா, மொரீஷியஸ், பிரிட்டிஷ், பிரெஞ்சு, கயானா நாடுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாகச் சென்றவர்கள். சிலர் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு செல்லப்பட்டவர்கள். நாங்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறோம்.''”
“""மனிதர்கள் எப்பொழுதும் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மனித சரித்திரம் என்பதே புலம் பெயர்ந்த சரித்திரமாகவே இருக்கிறது''” என்றார். நஸிம் இஸிக்கில் தொடர்ந்து யூதர்களில் சரித்திரமும் அது தான்.''” என்றார்.
நடைப் பயிற்சியின் போது அவரின் நண்பர்கள், மாணவர்கள் சிலர் சேர்ந்து கொண்டார்கள்.
இலக்கியம், தத்துவம், சமூகம், சமயம் என்று பலவற்றையும் பற்றி பேசிக் கொண்டே நடந்தோம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


