ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

ரோஜா மலரே! - 35: குமாரி சச்சு

ஏன் இவ்வளவு  இடைவேளை விட்டோம்?  என்று நினைக்கும் அளவிற்கு அந்த இடத்தில் எல்லாமும்  நடந்தது. இரவு 10-30 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:12 pm


ஏன் இவ்வளவு இடைவேளை விட்டோம்? என்று நினைக்கும் அளவிற்கு அந்த இடத்தில் எல்லாமும் நடந்தது. இரவு 10-30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் எல்லோரும் கிளம்புகிறார்கள் என்று நினைத்தேன். இப்படி எல்லோரும் போய் விட்டால் நம்முடைய நடனத்தை யார் பார்ப்பார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இந்த நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரையே கூப்பிட்டு கேட்டு விடலாம் என்று முடிவு செய்து அவரைக் கூப்பிடச் சொன்னேன். அவரும் வந்தார். “""ஏன் எல்லோரும் வெளியே போகிறார்கள். நாங்கள் பாதி தான் ஆடி உள்ளோம். மீதி பாதி இன்னும் இருக்கிறது. அதையும் பார்த்து விட்டுப் போகச் சொல்லுங்கள். இந்தப் பாதியில்தான் சிறப்பான பல்வேறு பாடல்களை தொகுத்து உள்ளோம். அதற்கு உரிய நடன அசைவுகளைப் பார்த்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். எல்லோரையும் உட்கார சொல்லுங்கள்''”, என்று நான் சொல்லிக் கொண்டே போக, அவர் பேசாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு தொடர்ந்து பேசினார். ""அம்மா நீங்கள் கால தாமதமாக வந்தீர்கள். அதனால் நான் நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக இரு நிகழ்ச்சிகளாக இதை மாற்றி விட்டேன். ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கிளம்புகிறார்கள். மீதி பாதியைப் பார்ப்பதற்காக இன்னுமொரு கூட்டம் வெளியே நிற்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்னும் பத்து நிமிடங்
களில் அவர்கள் உள்ளே வந்து அமர்வார்கள். நீங்கள் இடைவேளைக்குப் பிறகு எப்பொழுதும் போலவே தொடர்ந்து நடனம் ஆடுங்கள். பார்ப்பதற்கு உங்கள் ரசிகர்கள் வெளியே நிறையப் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்''”, என்று சொல்லி விட்டு, கிளம்பி விட்டார்.
அவர் சொன்னது போலவே வேறு ரசிகர்கள் பலர் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர் விரும்பியபடி பிற்பாதியை அழகாக ஆடிவிட்டு கிளம்பினோம்.

எப்பொழுதுமே முதல் பாதியில் சில சிறிய பாடல்களை நாங்கள் ஆடுவோம். குறிப்பாகப் பதங்கள் என்று இதைச் சொல்லுவோம். சினிமா பாடல்களுக்கான நடனங்களை என்றுமே நாங்கள் மேடையில் ஆடமாட்டோம். இதுவரை நாங்கள் ஆடியதில்லை. முதல் பாதியில் சில பாடல்களை ஆடிவிட்டு, உதாரணமாக, தனியாகப் பல தமிழ் பாடல்களை ஆடுவோம், அதில் கண்டிப்பாகப் பாரதியார் பாடல் ஏதாவது ஒன்று இருக்கும். காரணம் பரத நாட்டியத்தில் சாஸ்ரோத்தமாக ஆடினால் அவர்களுக்குப் புரியாது என்று நினைத்து, இப்படி எங்கள் நடன நிகழ்ச்சியை அமைத்தோம்.

அது நாங்கள் நடனம் ஆடும் வரை சரியாகத்தான் இருந்தது. முதல் பாதியில் நாங்கள் எங்களுடன் அழைத்துக் கொண்டு வந்த சில பெண் கலைஞர்களை ஆடச் சொல்லுவோம். அவர்களும் சிறப்பாக ஆடிப் பாராட்டுப் பெறுவார்கள். பிற்பாதியில் ராதா கிருஷ்ணா, விஸ்வாமித்ரர், மேனகா, பாம்பாட்டி, பாம்பாட்டியின் மனைவி, குறவன் குறத்தி போன்ற பல்வேறு விதமான கதைகளை, பாடல்களாக மாற்றி, அவைகளுக்கு நடன அசைவுகளைக் கொடுத்து மக்களைக் கவர்ந்து விடுவோம்.

இது ஒரு விதமான அனுபவம் என்று சொன்னால், வேறு ஒரு விதமான அனுபவமும் எங்களுக்கு கிடைத்தது. ஒரு முறை சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாரியம்மன் கோயிலில் எங்களை நடனமாட அழைக்க வந்திருந்தார்கள். எங்களைப் போன்ற சினிமா நட்சத்திரங்கள் நடன நிகழ்ச்சியை அமைத்துக் கொண்டால் சில பல தொண்டு நிறுவனங்களுக்கும் வேண்டும் அளவு பணம் சேர்ந்து விடும்.

அதோடு மட்டும் அல்லாமல் சினிமா நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை அமைத்து கொடுப்பவருக்கு அந்த கிராமத்திலோ, நகரத்திலோ ஒரு விதமான புகழ் பெற்று விடுவார்கள். சினிமா நட்சத்திரங்களை தெரிந்தவர்கள் என்று ஒரு தனி அந்தஸ்து கிடைத்து விடும். அதனாலேயே பலவிதமான காரியங்களை அவர்களால் தங்கள் இடத்தில் செய்து கொள்ள முடியும்.

இதைப் போல நாங்கள் ஆடிய கோயில் நடன நிகழ்ச்சிகள் ஏராளம். காளையார் கோயில் என்ற இடத்தில் நகரத்தார்கள் வெகு விமரிசையாக நடன நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இந்த கோயில் நடன நிகழ்ச்சி என்றால் பல ஆயிரம் பேர் கூடுவார்கள். அதனால் அந்த கோயிலின் உள் பிரகாரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்த மாட்டார்கள். கோயிலின் வாசலில் பெரிய பந்தல் போட்டு 7 அல்லது 10 நாட்கள் இந்த நடன நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் நாங்கள் மட்டும் ஆட மாட்டோம், லலிதா, பத்மினி, ராகினி, ஈ.வி.சரோஜா, குசல குமாரி போன்றவர்கள் கூட இங்கு எங்களைப் போன்று நடனமாடி இருக்கிறார்கள்.

இதே போல் கேரளாவில் உள்ள கோட்டயத்தில் ஒரு ஐயப்பன் கோயில் நிகழ்ச்சிக்கும் நாங்கள் சென்றிருந்தோம். அது திறந்த வெளி மைதானம். கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை மனித தலைகளாகவே இருக்கும். நான் நினைத்துக் கொள்வேன். கடைசியில் நிற்கும் மனிதர் என்னை எப்படி பார்ப்பார் என்று? காரணம் அவர் பார்க்கும் போது, ஒரு பொம்மையைப் போலவே அவரது கண்களுக்கு நான் தெரிவேன். ஏதோ ஒரு பொம்மலாட்டம் நடக்குது என்று தான் அந்த மனிதர் என்னைப் பார்க்கும் போது நினைப்பார் என்றும் நான் நினைப்பதுண்டு. அந்த அளவிற்குக் கூட்டம் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அது ஒரு சிவன் கோயில். நாங்கள் சென்ற போது பின்னணி பாடகர் ஜெயசந்திரன் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. நான் மலையாளப் படங்களில் நடித்து அன்று புகழ் பெற்றிருந்தேன். அது மட்டும் அல்ல அவர்களுக்கு சினிமா புகழ் இருந்தாலும் சாஸ்திரிய பரத நாட்டியம் தான் வேண்டும் என்று எங்களிடம் வந்தார்கள். கோயில்களில் சுத்தமான பரத நாட்டியம், கதகளி போன்றவைகளை தான் வேண்டும் என்று கேட்பார்களே ஒழிய, சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுபவர்கள் வேண்டாம் என்று அவர்களாகவே ஒதுக்கி விடுவார்கள்.

கேரளா போகிறோம் என்பதால், எங்கள் நடனத்தில் "மோகினி' ஆட்டம், "கதகளி'யில் ஒரு பாடல், "கீதோபதேசம்' போன்றவற்றை நாங்கள் பிரத்யேகமாகக் கற்றுக் கொண்டு அந்த நடன நிகழ்ச்சியில் ஆடி கேரள பார்வையாளர்களைக் கவர்ந்து விடுவோம். குறிப்பாக கலாபவன் என்ற நடன அமைப்பிற்கு சென்று, அவர்களில் உள்ள ஒரு சிறந்த ஆசிரியரிடம் சில பாடல்களை கற்றுக் கொண்டு வந்து, கேரளா மக்களை அசத்தி விடுவோம்.

"கீதோபதேசம்' ஆடும் போது என் பெரிய அக்கா "மாடி' லட்சுமி கிருஷ்ணனாகவும், நான் அர்ஜுனனாகவும் நடனமாடி அவர்களை மகிழ்விப்போம். அது போல ஆந்திரா போனால் அவர்களுக்கு ஏற்ற, நாட்டுப்புற பாடலும், ஜாவளிகளும் கற்றுக்கொண்டு அங்குள்ள மக்களை சந்தோஷப்படுத்துவோம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்லும் போது, அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியாக அது மாற, எங்களை நாங்கள் பல்வேறு வகைகளில் தயார்படுத்திக்கொள்வோம்.

கோயில் விழா என்று வந்தால், மற்ற மாநிலத்தில் உள்ள கோயில் விழாக்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து விட்டேன். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் விழாவிற்கு வருவோம். தங்களுடைய கோயில் விழாவிற்கு எங்களை அழைக்க, அந்தக் கோயில் குழுவினர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். என்னுடைய பாட்டி தான் எப்பொழுதுமே இந்த மாதிரி வருபவர்களிடம் பேசுவார்கள். நானோ அக்காவோ பேசமாட்டோம். இன்னும் சொல்லபோனால் வெளியே வரமாட்டோம். எப்பொழுதுமே பாட்டி எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும் அது உண்மையும் கூட. இந்த முறையும் அவர்கள் ஒரு தேதியை கூற அது இருந்ததால் பாட்டி ஒப்புக் கொண்டார்கள்.

பண விவகாரங்களை அவர்கள் பேச ஆரம்பிக்க, மிகவும் கம்மியாக கேட்டார்கள். கோயில் விழா என்பதால் பாட்டி பணத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒப்புக்கொண்டார். அவர்களும் நன்றி சொல்ல, அடுத்தது, நாங்கள் தங்கும் இடம் பற்றிப் பேச்சு வந்தது. எப்பொழுதுமே எங்களுக்கு தனியாக ஒரு அறையும், இசை குழுவிற்கு ஒரு சில அறைகளும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு சில அறைகளும் தேவை என்றும், இந்த அளவிற்கு மேடை அமைப்பு இருக்க வேண்டும் என்றும் சொல்வோம்.

காரணம் நாங்களும் ஆட வேண்டும், எங்கள் இசைக்குழுவும் மேடையிலேயே உட்கார்ந்து கொண்டு இசைக்க வேண்டும் என்பதால் முன்பே கூறிவிடுவோம். இதையெல்லாம் விட, உடை மாற்ற ஒரு சிறிய அறை வேண்டும் என்று கேட்கும் குறிப்புகள் அடங்கிய சில பேப்பர்களையும், எப்பொழுதுமே கொடுப்போம். சொன்னால் சிலவற்றை அவர்கள் மறந்து விடக்கூடும் என்பதால், முன்பே தயார் செய்து வைத்திருக்கும் இந்தக் கையேடு அவர்களிடம் கொடுக்கப்படும். அவர்கள் அவ்வப்போது படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் எங்களை ஒப்பந்தம் செய்ய வரும் அனைவருக்கும் இந்தக் கையேடு கொடுப்பது வழக்கம்.

எங்களை ஒப்பந்தம் செய்ய வந்த குழுவின் தலைவர், நாங்கள் இவ்வளவையும் சொல்ல, அவர் ஒன்றும் தெரியாதது போல் உட்கார்ந்திருந்தார். பின்னர் அவர்களுக்குள் ஒரு சில விநாடிகள் பேசிக்கொண்டார்கள். அதற்குள் என் பாட்டி மேடை இந்த அளவிற்கு இருக்க வேண்டும், இவ்வளவு சதுரம், இவ்வளவு நீளம் என்று சொல்ல, மேடை ஏன், என்று கேட்டார், அந்த கோயில் குழுவின் தலைவர். இதை எல்லாம் நாங்கள் அடுத்த அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். மேடையில்லாமல் எப்படி நடனம் ஆடுவது என்று எனக்கும் என் அக்காவிற்கும் புரியவில்லை. கோயில் விழாவில் நடனம் ஆடினேனா, இல்லையா?

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.