/

ரோஜா மலரே! - 44: குமாரி சச்சு

நமது தமிழ் நாடு அரசின் சின்னம் என்ன தெரியுமா? அந்தச் சின்னத்தில் வேறு என்ன இருக்கும் என்று கேட்டால், "வாய்மையே வெல்லும்' என்ற வாக்கியம் எழுதியிருக்கும்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:09 pm

நமது தமிழ் நாடு அரசின் சின்னம் என்ன தெரியுமா? அந்தச் சின்னத்தில் வேறு என்ன இருக்கும் என்று கேட்டால், "வாய்மையே வெல்லும்' என்ற வாக்கியம் எழுதியிருக்கும். எங்கள் நாட்டிய நாடகத்திற்குப் பெயர் இந்தச் சின்னத்தில் உள்ள "வாய்மையே வெல்லும்' என்பதையே நாங்கள் வைத்தோம். முழுக்க முழுக்க அரசியல் கதை என்பதால், கொஞ்சம் அரசின் கதையும் இருப்பதால் இந்தப் பெயர் எங்களுக்குச் சரியாகப் பட்டது.  

பெரியாரின் திராவிடக் கழகத்திலிருந்து ஆரம்பித்து, எப்படி அந்தக் கட்சியில் பிரிவு வந்தது எப்படி?  அது திராவிட முன்னேற்றக் கழகமாக உருவாயிற்று என்று சொல்லி, அண்ணாவின் பெருமைகளையும், அவரது திட்டங்களையும் சொல்லி, அது எப்படி மக்களுக்கு நன்மை அளித்தது என்றும், தமிழக அரசின் பெருமைகளையும் சொல்லி இருந்தோம். நாங்கள் நடந்த உண்மைகளைச் சொன்னது மட்டும் அல்லாமல், ஒரு கற்பனை கதையையும் இணைத்து இருந்தோம். அதாவது அரசர் கிருஷ்ண தேவராயர், தமிழ் நாட்டிற்கு வந்து அறிஞர் அண்ணா ஆள்வதைப் பார்த்து, பாராட்டி விட்டுச் செல்வது போல் அந்த நாட்டிய நாடகத்தில் ஒரு சில காட்சிகள் வரும். பலர் என்னிடம் வந்து, இதில் உள்ள சரித்திர உண்மைகளைச் சொன்னது மட்டும் அல்லாமல், கற்பனை கதையும் சிறப்பாக இருந்தது என்று கூறினார்கள். 

இது நாட்டிய நாடகம் என்பதால் பாடல்களைப் புலவர் புலமைப்பித்தன் எழுத, இந்தப் பாடல்களுக்கு இசையமைத்தது எங்கள் குழுவின் இசையமைப்பாளர் புகழேந்தி அண்ணன். எல்லாமல் சரியாக வந்ததனால் நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற, கலைவாணர் அரங்கத்தையும் ஒப்பந்தம் செய்து விட்டோம். அறிஞர் அண்ணா தலைமையில் இந்த நாட்டிய நாடகம் ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து அவரை அழைக்கச் சென்றேன். 

நான் சென்ற போது அவர் உடல் நலமில்லாமல் இருந்தார். அதையும் மீறி, "நான் சச்சு வந்திருக்கிறேன்' என்று சொன்னவுடன், என்னை அழைத்து விவரங்களைக் கேட்டு அறிந்தார். பின்பு நான் கண்டிப்பாக வருகிறேன். ஆனால் அரங்கேற்றத்திற்கு அல்ல. ஏனென்றால் இந்த வார கடைசியில் நான் அமெரிக்கா செல்கிறேன். உடல் பரிசோதனை முடிந்ததும், நான் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததும், ஒரு நாள் இந்த நாட்டிய நாடகம் நடக்கும் போது நான் வந்து கண்டிப்பாகப் பார்க்கிறேன். நீ திறமையாக நடனம் ஆடுவாய் என்று எனக்குத் தெரியும். நீ நடத்தும் இந்த நாட்டிய நாடகம் சிறப்பாக இருக்கும் என்றும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக வந்து நான் தலைமை தாங்கி, உன்னைப் பாராட்டி பேசுகிறேன். இந்த அரங்கேற்றத்திற்கு நாவலர் நெடுஞ்செழியனை வைத்து நடத்து, என்று கூறினார். 

அவர் கூறியது போலவே நாவலர் நெடுஞ்செழியனை வைத்து அரங்கேற்றத்தை நடத்தினேன். நாவலரும் வந்தார்.  என்னையும், என்  குழுவையும் பாராட்டி பேசினார். பல ஊர்களில் இந்த நாட்டிய நாடகத்தினை விமரிசையாக நடத்தினோம். பலரும் எங்கள் நாட்டிய நாடகத்தைப் பாராட்டினார்கள். அதில் ஒரு காட்சியில்  பெரியாரும் வருவார்கள். பெரியார் வேடத்தை என் அக்கா "மாடி' லட்சுமி ஏற்று, திறம்பட நடித்தார். பெரியார் கேட்பது போல் ஒரு பாட்டும் வரும். "பாட்டு பாடும் தம்பி, இந்தப் பழுத்த கிழவனைப் பாரப்பா, நாட்டு நடப்புகள் எப்படி, அதை எனக்கும் கொஞ்சம் எடுத்து சொல்லப்பா' என்ற வரிகள் வரும். அந்த வரிகள் வந்தாலே மக்கள் கரகோஷம் செய்வார்கள்.

அந்த அளவிற்கு பெரியாரின் மீது மக்கள் பாசம் வைத்திருந்தார்கள் என்று தெரிந்தது. பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள், ஆனால் அமெரிக்கா போய் விட்டு சென்னை வந்த பின்னரும் அண்ணாவின் உடல் நிலை சரியாக இல்லை. அவரால் எங்கள் நாட்டிய நாடகத்தைப் பார்க்க முடியவில்லை. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனது நடனத்தைப் பற்றி நேரில் பாராட்டி பேசிய அறிஞர் அண்ணா, மேடையில் வந்து, நாட்டிய நாடகத்தினைப் பார்க்க, நாங்கள் கொடுத்து வைக்கவில்லை என்று தான் கூறவேண்டும். 

அவரது அரசியல் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாட்டிய நாடகத்தை பார்த்து விட்டு பாராட்டிப் பேசுவார் என்று எதிர்பார்த்து நாங்கள் இருந்த போது, அவர் பார்க்காமலேயே போய்விடுவார் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை. என்னிடம் நேரில் பாராட்டிய அண்ணா பார்க்காமலேயே போனது எனக்கு மட்டும் அல்ல எங்கள் குழுவிற்கும் இழப்பு என்று தான் சொல்லவேண்டும். இவ்வாறு நடனத்தில் எல்லா வகையான நடனங்களையும் நாங்கள் ஆடியிருக்கிறோம். பாராட்டுகளை வாரிக் குவித்திருக்கிறோம்.

தங்கவேலு அண்ணனின் நிகழ்ச்சியில் நடனம் ஆடி விட்டு வந்த அடுத்த நாள் கார் வந்தது. ஏவிஎம் ஸ்டுடியோ சென்றோம். அங்கு என்னைப் பார்த்து விட்டு எல்லோருக்கும் என்னைப் பிடித்துப் போய் விட்டது. சரி என்று சொல்லி எனக்கு ஒப்பந்தம் போடச் சொன்னார்கள்.  "அன்னை'  மற்றும் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கும் சேர்த்து 5 ஆண்டுகளுக்கு மாத சம்பளத்தில் வேலை பார்க்க ஒப்பந்தம் தந்தார்கள். அவர்கள் நிறுவனத்தில் நான் தான் மாத சம்பளத்தில் வேலை பார்த்த கடைசி நடிகை என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து எனக்கு முன் வைஜெயந்தி மாலா,  ஏவிஎம் நிறுவனத்தில் மாத சம்பளத்தில் இருந்தார்கள் என்று சொன்னார்கள். 

அன்று வைஜெயந்தி மாலா,  என்னைப் போலவே 15 வயசுதான் ஆகி இருந்தது. அதனால் அந்த மாத சம்பள ஒப்பந்தத்தில் அவருக்குப் பதிலாக அவருடைய பாட்டி தான் கையெழுத்துப் போட்டார்கள். எனக்கும் அதே நிலைதான். நானும் அதே 15 வயசு என்பதால் என் பாட்டி தான் எனக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். வைஜெயந்தி மாலா அன்று நடித்த படங்கள் "வாழ்க்கை' மற்றும் இந்தியில் “"லட்கி'” போன்ற சில படங்கள். அவருக்கு 5 ஆண்டுகள் ஒப்பந்தம். எனக்கும் 5 ஆண்டுகள் தான் கேட்டார்கள். அதில் பல நிபந்தனைகள் உள்ளன. 

அதில் முக்கியமானது அவர்கள் ஒப்பந்தத்தில் இருக்கும் போது, ஏவிஎம் படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும். வேறு படங்களில் நடிக்கக் கூடாது. அவர்கள் எடுக்கும் கதைப்படி பல பயிற்சிகள் கொடுப்பார்கள். அதில் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் படத்தில் ஒரு பாடகியான கதாபாத்திரம் என்றால், பாட்டு  சொல்லிக் கொடுப்பார்கள். நீங்கள் நடிக்கும் படத்தில் சண்டை செய்ய வேண்டும் என்றால், சண்டை போடுவது எப்படி என்று கற்றுக் கொடுப்பார்கள். ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம் தாங்கள் எடுக்கும் படங்களின் விளம்பரங்களை சரியாக, பெரியதாக தரமாக இருக்கும் வண்ணம் செய்வார்கள். அதுவும் அவர்கள் அறிமுகம் செய்தால் அந்த நடிகருக்கோ, நடிகையருக்கோ முக்கியத்துவம் வாய்ந்ததாக விளம்பரம் செய்வார்கள். அவர்கள் அறிமுகம் என்றால் சும்மாவா என்ன? 

இப்படிப்பட்ட நிலையில் எனக்கும் அந்த ஒப்பந்தப் பத்திரம் தரப்பட்டது. அந்த ஒப்பந்தப் பத்திரத்தை படித்துப் பார்த்த பாட்டி, அதில் கையெழுத்திட மறுத்து விட்டார். ஏன் தெரியுமா?

(தொடரும்)

 சந்திப்பு: சலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.