கழிவு பொருள்களினால் பசுமை வீடு..!

"யாருக்கும் தேவையில்லை  என்று ஒதுக்கித் தள்ளப்படும் பழைய பொருள்களைக் கொண்டு அழகான வீட்டை அதுவும் பலரும் பாராட்டும்படியான  பசுமை வீடாக  நான்கு மாதத்திற்குள் கட்டமுடியும்'
கழிவு பொருள்களினால் பசுமை வீடு..!
Updated on
2 min read

"யாருக்கும் தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ளப்படும் பழைய பொருள்களைக் கொண்டு அழகான வீட்டை அதுவும் பலரும் பாராட்டும்படியான பசுமை வீடாக நான்கு மாதத்திற்குள் கட்டமுடியும்' என்கிறார் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரவி. வீடு கட்டுமானத்தில் பொறியாளராக இருக்கும் ரவி, வீடு கட்டமைப்பு தொடர்பான படிப்பை நாகப்பட்டினத்தில்படித்தவர்.

உலகெங்கும் நடக்கும் கட்டுமானப்பணிகளால் சுற்றுப்புறச் சூழலில் முப்பத்தைந்து சதவீதம் கார்பன் வாயு கலக்கிறது. கட்டடப்பணிகளால் ஏற்படும் தூசுகள், கழிவுப் பொருள்களும் சுற்றுப்புறச்சூழலை பாதிக்கின்றன. அதனால் சொந்தமாக வீடு கட்டும்போது சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பாதிப்பினைக் குறைக்க முடியுமோ அந்த வழியில் வீட்டினைக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

இடிக்கப்படும் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட ஓடுகள், செங்கல்கள், கதவு ஜன்னல் தூண்கள் போன்றவற்றை சேகரித்தேன். அவற்றை கட்டுமானத்தில் சேர்த்துக் கொண்டேன். மூங்கில்களும் வீட்டுக் கட்டுமானத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

நாங்கள் வாங்கிய மனையில் நில அமைப்பில் பெரிய மாற்றங்களை செய்யாமல், வீட்டின் கட்டுமானத்தை நில அமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டோம். எனது மனையில் ஒரு பக்கம் சரிவாக இருந்தது. அந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி சமதளமாக மனையை மாற்ற முடியவில்லை. சரிந்த பகுதியிலிருந்து மேடான பகுதிக்குப் போகப் படிகள் அமைத்து சமரசம் செய்து கொண்டோம்.

மூன்று அடுக்கு வீடு 2500 ச. அடி கொண்டுள்ளது. வீட்டின் பக்கவாட்டில் பெரிய மரம் இருந்தது. அதையும் உள்ளடக்கி வீட்டினைக் கட்டி முடித்துள்ளோம். வீடு கட்டுமானத்தில் சிமெண்ட் எவ்வளவு குறைவாகப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு குறைவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணாடி மது பாட்டில்ககளை சுவற்றில் பதித்திருப்பதுடன் விளக்குகளுக்கு மறைவாகவும் (SHADE) பயன்படுத்தியிருக்கிறோம்.

பாட்டில்களால் கட்டப்பட்ட முழு சுவரும் உள்ளது. இந்த சுவரில் சிமெண்டிற்குப் பதிலாக சுண்ணாம்பு, களிமண்ணைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

தப்படுத்தப்பட்ட மூங்கில் இரும்பு கம்பிகளைவிடப் பாரம் தாங்கும். அதனால் மூங்கிலை பயன்படுத்தியுள்ளோம். அது போல பதப்படுத்தப்பட்ட தென்னை மரங்களின் சட்டங்களும் தூண்களும் வீட்டின் கட்டுமானத்தில் இணைந்துள்ளன. பழைய இரும்புக் கம்பிகள், சைக்கிளின் உதிரிப் பாகங்களைக் கூட பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் வாழ்ந்த வீட்டை புதிதாகக் கட்டுவதற்காக பழைய வீட்டை இடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே கிடைத்த பெரிய கதவையும் , கதவைத் தாங்கி நிற்கும் நிலைப்படியையும், பெரிய ஜன்னலையும் விலைக்கு வாங்கினேன். கதவை நிலைக்கு கதவாக மாற்றினேன். ஜன்னலை சுத்தம் செய்த போது அது பித்தளையில் செய்யப்பட்டிருந்தது. அதையும் அப்படியே பயன்படுத்திக் கொண்டேன்.

தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் ரேக்ளா வண்டியில் சக்கரங்களை வாங்கி வந்து செப்பனிட்டு வட்ட ஜன்னலாக வீட்டில் பதித்திருக்கிறேன். வீட்டினுள் சமதள மண் ஓடுகளைத் தரையில் விரித்துள்ளேன். மூன்றாம் மாடியில் மூங்கில்களை விரித்து அதன் மேல் சாணம் பூசி சமதளமாக்கி , சிமெண்ட் பாலில் நனைக்கப்ட்ட சாக்கை விரித்து தரை அமைத்திருக்கிறேன்.

இதனால் கோடையில் வீட்டிற்குள் வெளியே உள்ளதை விட வெப்பம் குறைவாகவும், குளுமையும், மழை, பனிக் காலத்தில் வெளியே இருப்பதைவிடக் கதகதப்பாகவும் இருக்கும். சுவர்கள் சிமெண்ட் கலவையால் பூசப்படவில்லை. அதனால் வீட்டிற்குப் புராதன தோற்றம் கிடைத்திருக்கிறது' என்று சொல்லும் ரவிக்கு 27 வயதாகிறது. கேரளா அரசின் கிராமப்புற வளர்ச்சிக்கான அமைப்பில் கட்டட பொறியாளராகப் பணிபுரிகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com