

ஹிக்கிம்.. இந்தியாவின் மிக உயரமான கிராமம் என்ற பெருமை கொண்டது. ஹிமாச்சலப் பிரதேசம், லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 14,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பரந்த நிலப்பரப்பில் புத்த மடாலயங்களும் , புத்த போதகர்களும்தான் அதிகமாக வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டுமெனில் 46 கி. மீ தொலைவில் உள்ள கஸா கிராமத்திற்குத்தான் வர வேண்டும். இதுதான் அவர்களுக்கு டவுன். கடந்த 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி இங்கு மொத்தம் 77 வீடுகள் உள்ளன. 187 ஆண்கள் மற்றும் 179 பெண்கள் என மொத்தம் 366 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்குக் கட்டப்படும் வீடுகளுக்கு கற்கள் மற்றும் கட்டைகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இந்த கிராமத்தின் மற்றொரு சிறப்பு என்னவெனில் இங்கு இருக்கும் தபால் நிலையம் உலகின் உயரமான இடத்தில் இருப்பதுதான். 1983-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தபால் நிலையம் அதிக பனிப் பொழிவுக் காரணமாகக் குளிர் காலத்தில் மட்டும் முற்றிலுமாக மூடி வைக்கப்படும். இந்த தபால் நிலையத்தோடு அதன் தபால்காரரான ரின்சென் செரிங்கும் உலகின் பிரபலமானவர். இவர் தன்னுடைய 22-ஆவது வயதிலிருந்து இன்று வரை பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இது அங்கிருக்கும் மக்களுக்குச் சேமிப்பு வங்கியாகவும் செயல்படுகிறது. பணம் எடுக்கவும் போடவும் இந்த தபால் நிலையம்தான் உதவியாக இருக்கிறது. அடுத்ததாக உலகின் உயரமான வாக்குச் சாவடி இருப்பதும் இங்குதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.