தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரோஜா மலரே! - 64: இக்கட்டான நிலையில் உதவிய நடிகர் - குமாரி சச்சு

ஏன் தடுத்தார் அந்த நிர்வாகி என்று கேட்டபோது, ""நீங்கள் விண்ணப்பத்தைக் கொடுக்கும் போது மருத்துவச் சான்றிதழ் வைக்க மறந்து விட்டீர்கள்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 12:30 am

சலன்

ஏன் தடுத்தார் அந்த நிர்வாகி என்று கேட்டபோது, ""நீங்கள் விண்ணப்பத்தைக் கொடுக்கும் போது மருத்துவச் சான்றிதழ் வைக்க மறந்து விட்டீர்கள். அது இருந்தால் தான் நாங்கள் உங்களை உள்ளேயே விட முடியும். அதை எங்களுக்குக் காண்பியுங்கள், அல்லது அதன் ஒரு நகலை வேண்டுமானாலும் எங்களுக்குத் தாருங்கள்'', என்று கூறினார். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றோம்.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் வசந்தி இறந்ததற்கான சான்று கொடுத்தார்களா இல்லையா என்று யாருக்கும் நினைவில்லை. அப்படியே கொடுத்திருந்தாலும், அது எங்கே இருக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். வீட்டை விட்டு கிளம்பின பிறகு, இறந்தவர் உடலை திரும்பவும் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போக முடியாது. இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க ஒரு ஐடியா எனக்குத் தோன்றியது. வேறு வழி தெரியாமல் அங்கிருந்து எஸ்.எஸ்.ஆருக்கு போன் செய்தேன். அன்று அவர் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்ல, சட்டசபை உறுப்பினராகவும் இருந்தார். அவர் யாரிடமோ சொல்லி எங்களை உள்ளே விட வழி செய்தார். அப்புறம் நாங்கள் எங்கள் சடங்குகளை எல்லாம் முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். இப்படி இக்கட்டான நிலையில் பல தடவை உதவிகள் செய்திருக்கிறார் எஸ்.எஸ்.ஆர்.

எஸ்.எஸ்.ஆர். எனக்கு மட்டும் அல்ல திரைப்பட உலகை சேர்ந்த பலருக்கும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார். பழகுவதற்கு எளிமையானவர். அன்று அவர் ஒரு புகழ் பெற்ற கதாநாயகர். அவரது, தமிழ் உச்சரிப்பால், ரசித்த படங்கள் ஏராளம். “"மணப்பந்தல்', "தை பிறந்தால் வழி பிறக்கும்'”போன்ற படங்களை இங்குக் குறிப்பிடலாம்.

நான் “"வீரத்திருமகன்'” படத்தில் நடித்த பிறகு என்னைக் கூப்பிட்டு எனக்கு ஒரு கதாநாயகி வேடம் கொடுத்தார். அந்தப் படத்தின் பெயர் “"தங்க ரத்தினம்'. எஸ்.எஸ்.ஆர். படத்தில் வரும் கதாநாயகி வேடம் வயது முதிர்ந்த கதாநாயகி வேடம். எனக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்து விட்டு என்னிடம் வருத்தபட்டு, “""நான் உன்னைத்தான் கதாநாயகி வேடத்துக்கு நினைச்சேன். இது நான் தயாரிக்கும் படம் என்பதால், நான் முடிவு எடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உன் முகம் குழந்தை வடிவில் இருக்கிறது. வேறு ஒரு படத்தில் நாம் நிச்சயமாகச் சந்திபோம்'' என்று கூறினார்.

எஸ்.எஸ்.ஆரை எப்படி தெரியும் என்று இங்குக் கூற வேண்டும். அவர் “"சொர்க்க வாசல்'” என்ற படத்தில் நடிக்க சென்ட்ரல் ஸ்டுடியோ வந்திருந்தார். நான் அப்பொழுது மிகவும் சிறிய பெண். அன்றே தெரியும் என்றாலும் அப்புறம், நான் அவருக்குத் தங்கையாக ஒரு படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் பெயர் “"ராஜா தேசிங்கு'. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்தது. எஸ்.எஸ்.ஆரும் அதில் நடித்தார். இந்தப் படத்தில் பி.பானுமதி, பத்மினி, டி. எஸ். பாலையா, என்.எஸ். கிருஷ்ணன், மதுரம், கே.ஏ. தங்கவேலு, எம்.என்.ராஜம், எம்.சரோஜா போன்ற பலர் நடித்திருந்தார்கள். இசை ஜி.ராமநாதன். இந்தப் படத்தில் ஒரு டஜன் பாடல்கள் இருந்தன. அன்று புகழ் பெற்ற பலரும் இந்தப் படத்தில் பாடி இருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தில் நடித்த, நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகை பி.பானுமதி, எம்.எல். வசந்தகுமாரி, சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, சி.எஸ்.ஜெயராமன் என பலரது பெயரை சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பாடல்களை எழுதியது, உடுமலை நாராயண கவி, கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ். இந்தப் படத்தை இயக்கியது டி.ஆர்.ரகுநாத்.

அதற்குப் பிறகு தான் அவரது சொந்தப் படத்தில் கதாநாயகி வேடம் கொடுத்தாலும் சரியாக அமையவில்லை. அதன் பின்னர் “"அவன் பித்தனா?'” என்ற படம் எனக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க எஸ்.எஸ்.ஆர். தான். அவர் சொல்லித்தான் எனக்கு இந்தப் படம் கிடைத்தது. இந்தப் படத்தை அன்று புகழ் பெற்ற கலை இயக்குநராக இருந்த பி.அங்கமுத்து
வுடன் கூட சில நண்பர்களை இணைந்து தயாரித்தனர். இந்தப் படத்தை இயக்கியவர் ப.நீலகண்டன். இதன் திரைக்கதை வசனத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. இதில் மிக முக்கியமான வேடங்களில் நடித்தவர்கள் எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி, டி.எஸ்.பாலையா போன்றவர்கள். இதில் எஸ்.எஸ்.ஆருக்கு முறை பெண்ணாக நடிக்க என்னை அழைத்தார்கள். இந்த வாய்ப்பையும் எனக்கு வழங்கியது லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். தான்.

இந்தப் படத்தில் நடிக்கும்போது நான் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். பின் எதற்கு எனக்கு 2 ஆவது கதாநாயகி வேடம் என்று பலர் கேட்கக் கூடும். அதற்கும் எஸ்.எஸ்.ஆர் காரணத்தையும் கூறினார். "நீ நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்து இருந்தாலும், என்னைப் பொருத்த அளவில் நீ கதாநாயகி வேடத்திற்குப் பொருத்தமானவள் தான். அதனாலேயே இந்த வேடத்தைக் கொடுத்து திரும்பவும் கதாநாயகி ஆக்க நான் ஆசைப்படுகிறேன். முயற்சி செய்து பார்ப்போம்', என்று கூறியே இந்த 2- ஆவது கதாநாயகி வேடத்தை எனக்குக் கொடுத்தார்.

இந்தப் படத்தில் எனக்கு இரு அருமையான பாடல்கள் கிடைத்தன. ஒன்று நானும் அவரும் இணைந்து நடித்த டூயட் பாடல்.

இந்தப் படத்தின் கதைப்படி நாங்கள் இருவரும் விரும்ப மாட்டோம். ஆனால் எங்கள் இரு குடும்பமும் நாங்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு ஏற்றவாறு இந்தப் பாடல் இருக்கும்.

மற்றொரு பாடல்,

"கிழக்கு வெளுத்தடி கீழ் வானம் சிவந்ததடி,
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி'

இந்த இரண்டு பாடல்களும் எனக்குப் பெரிய புகழை அளித்தது. இந்தப் பாடல்கள் இன்றும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டு தான் இருக்கிறது.

நாடகத்தில் இருந்து வந்தவர் எஸ்.எஸ்.ஆர். "மணிமகுடம்', "தங்க ரத்தினம்' போன்ற நாடகங்களை அவர் மேடையில் நடிக்கும் போது பார்த்திருக்கேன். தமிழ் வசனங்களை எந்தவிதமான பிழையும் இல்லாமல், பேசும் திறமை படைத்தவர். தமிழ் உச்சரிப்பும் மிக நேர்த்தியாக இருக்கும். அவரது குரல் எல்லோரையும் கவரும் வகையில் அமைந்தது.

எஸ்.எஸ்.ஆர். உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். இதற்கு ஒரு உதாரணத்தை நான் இங்குச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மறைந்த "ப்ரியா விஷன்' நாடகக்குழுவை நடத்திய ராது (ராதாகிருஷ்ணன்) ஒரு நாள் என்னிடம் வந்து ""இவ்வளவு காலம் நீங்கள் இந்தத் திரை உலகில் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு விழா எடுக்க நான் விரும்புகிறேன்'', என்று சொன்னார். சரி என்று நானும் ஒத்துக் கொண்டேன். ""இந்த விழாவில் யார் யாரெல்லாம் வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்'' என்றும் கேட்டார்.

எஸ்.எஸ்.ஆர். வரவேண்டும் என்று மிக முக்கியமாகச் சொன்னேன். என் விருப்பப்படி அவர் வந்து அந்த விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஒரு நடிகைக்கு விழா என்றால் எல்லோரும் வருவார்கள். அது போலவே சிவகுமார், வைஜெயந்திமாலா, சத்யராஜ் என அனைவரும் வந்தார்கள். நாங்கள் கூப்பிட்டு வர முடியாதவர்கள் இருவர் தான். ஒருவர் நாகேஸ்வர ராவ், மற்றொருவர் மனோரமா.

ஒரு கலைஞருக்கு விழா என்றால், மற்ற கலைஞர்கள் வந்து இரண்டொரு வார்த்தைகள் பேசுவார்கள். காரணம், பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அக்காலத்தில் படப்பிடிப்பு இடைவேளையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசுவோம், சாப்பிடுவோம், ஒன்றாகப் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்போம். யாரும் அவர்கள் அறைக்குப் போகமாட்டோம். இன்று அப்படி இல்லை. கேரவன் வந்து விட்டது. தனிமை ஏற்பட்டு விட்டது. எப்படி ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்ள முடியும்? அந்த விழாவுக்கு வந்த நடிகை அஞ்சலிதேவி கூறிய விஷயங்களை நான் என்றும் மறக்க மாட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.