காவலர்களின் ஓய்வுக்காக ஒலிக்கும் பாடல்!
"சர்வதேச பெண்குழந்தைகள் தினம்', "காவலர் வீர வணக்க நாள்' போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காகத் தனிப்பாடல்கள் எழுதி, அவற்றைக் காணொலிகளாகப் படம் பிடித்து யுடியூபில் வெளியிட்டு வருகிறார் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை உதவிப் பேராசிரியராக இருக்கும் முனைவர் ராஜ்குமார்.
இவர் பாடல் எழுதி தயாரித்த "காக்கும் காவலன்' காணொலி குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அண்மையில் வெளியிட்டார். இந்தக் காணொலிக்கு காவலர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்குக் காரணம் "காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய ஓய்வு தேவை' என்பதை வலியுறுத்துவதுதான்!
இதுகுறித்து முனைவர் ராஜ்குமார் கூறியது:
""நாங்கள் சென்னையில் வசித்த பகுதியில் காவலர்கள் குடியிருப்பு இருந்தது. பண்டிகை நாள்களில் கூட அவர்களுக்கு வேலை இருக்கும். வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்விருக்காது. குடும்பத் தலைவர் இல்லாமல்தான் காவலர் குடும்பத்தினர் பெரும்பாலும் பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள். இதையெல்லாம் கடந்த 30 ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறேன். வெயில் மழை என்று பாராமல், இயற்கை உபாதைகளையும் அடக்கிக் கொண்டு மக்களுக்காக சேவை செய்கிறார்கள். காவலர் பணிக்கு ஓய்வு இல்லை. பேரிடர் காலங்களில் நீண்ட நாள்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம். இப்படி பல காரணங்களால் பல காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அது காவலர்களை திசை மாற்றுகிறது.
காவலர்களின் மகத்தான சேவையைப் பாராட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில்தான் அதற்கு நேரம் கிடைத்தது. "பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரவணக்க நாளை'யொட்டி உருவாக்கிய எனது "காக்கும் காவலன் "காணொலி குறுந்தகடு' சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்தக் காணொலியைப் பார்த்து "லைக்' செய்துள்ளார்கள். இதைப் பார்த்தபின் காவல்துறையில் "காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்' என்று சென்ற வாரம் முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முடிவை எடுக்க எனது பாடலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி!'' என்கிறார் முனைவர் ராஜ்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.