ரோஜா மலரே! - 57: மீனாகுமாரி காப்பாற்றிய ரகசியம் - குமாரி சச்சு
"வீரத் திருமகன்' பாடல் காட்சியைப் பார்க்க நடிகை மீனாகுமாரி வருகிறேன் என்று சொன்னது போலவே அடுத்த நாள் காலையில் எங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார்.


"வீரத் திருமகன்' பாடல் காட்சியைப் பார்க்க நடிகை மீனாகுமாரி வருகிறேன் என்று சொன்னது போலவே அடுத்த நாள் காலையில் எங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார்.
"படப்பிடிப்பை எப்படி நடத்துகிறார்கள்? நாங்கள் எப்படி நடிக்கிறோம்?' என்று பார்த்து விட்டு, என்னை அழைத்து மனம் நிறையப் பாராட்டினார்.
""தண்ணீருக்குள் நீ தைரியமாக தாமரைப்பூ நடுவில் நின்று நடனம் ஆடுவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நாங்களே இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கத் தயங்குவோம். அதுவும் இளம் கதாநாயகியாக இருந்து கொண்டு இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பது அபூர்வம். இந்தப் படம் கண்டிப்பாக உன்னைப் பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்கும்'' என்று என்னைப் பாராட்டியது மட்டும் அல்ல; "எப்படி இந்தத் தாமரைப்பூ மற்றும் இலைகள் சுற்றுகின்றன என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டார். இந்த காட்சியைப் பல்வேறு கோணங்களில் காண்பதற்காக நீர்நிலையைச் சுற்றிலும் நடந்தே சென்று பார்த்து ரசித்தார்.
அப்பொழுது அந்த செட்டையும், சுழலும் தாமரைப் பூவின் அழகையும், இலைகளின் மீது நிற்கும் நடன மாதர்களையும் பாராட்டினார்.
காட்சிகளை எப்படியெல்லாம் எடுக்கிறோம் என்று விலாவாரியாக இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரும், ஏவி.எம். குமரனும், ஏவி.எம்.சரவணனும் மீனாகுமாரிக்கு விளக்கினர்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகு, அந்தப் படப்பிடிப்பை நேரில் பார்த்ததும் மீனாகுமாரி "திரில்' ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
மீனாகுமாரியைப் பற்றி இங்கே ஒரு விஷயத்தை ரகசியமாக நான் கூறவேண்டும். இதைப் படித்ததும் மறந்து விடுங்கள். அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே இது தெரியும்.
அவர் நடிக்க வந்த பின்பு, நல்ல இயக்குநர்களும், சரியான படங்களும் அமையவே, எல்லா படங்களும் அவருக்கு சிறப்பான பெயரைப் பெற்றுத் தந்தன.
சிறந்த நடிகையான அவர் படிப்படியாக உயர்ந்து புகழின் உச்சிக்குச் சென்றார். அச்சமயத்தில்தான் அந்த விபத்து நடந்தது.
ஒருமுறை மீனாகுமாரி காரின் பின் பக்க இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டு இருந்தார். ஒரு வளைவில் திரும்புகையில் கார் ஏதோ ஒன்றில் மோதியது. பலத்த அடி இல்லை என்றாலும், இடது கையில் உள்ள சுண்டு விரலிலும், அதற்கடுத்த மோதிர விரலிலும் அவருக்கு அடி பட்டு விட்டது.
ரத்தம் சொட்டச் சொட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர் ரத்தப் போக்கை முதலில் நிறுத்தி விட்டு, அவசர அவசரமாக தையலும் போட்டிருக்கிறார்.
சில நாள்கள் கழித்துப் பார்த்தால் புண் ஆறி விட்டது. ஆனால் வேறு ஒரு பிரச்னை ஏற்பட்டு விட்டது. தையல் போட்டதால் இடது கை சுண்டு விரலும், மோதிர விரலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை போல் ஆகிவிட்டது.
"இதை எப்படி பிரிப்பது?' என்று பல மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். "அது பெரிய பிரச்னை இல்லை. இன்னொரு சிறிய ஆபரேஷன் செய்து அதை சரி செய்து விடலாம்...' என்று சொன்னார்களாம்.
திரும்பவும் அறுவை சிகிச்சை என்று சொன்னதும் மீனாகுமாரி வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதன் பின்னர் அவர் நடித்த படங்களை இன்றும் பார்த்தால் இடது கை விரல்கள் தெரியா வண்ணம்தான் அவர் நடித்திருப்பார்.
அதாவது இடது கை விரல்கள் தெரியாமல் அல்லது இடது கை
விரல்கள் மீது ஏதாவது துணியை சுற்றிக் கொண்டோ அல்லது இடது கை
விரல்கள் மேல் வலது கையை வைத்து மறைத்தபடிதான் படமெடுக்கச் செய்வார்களாம். இந்தச் சிறு விஷயத்தை எல்லோருக்கும் தெரியக்கூடாது என்று சாகும் வரை மறைத்து வைத்திருந்தார்.
அவர் அந்தக் காலத்தில் நடித்து வெளிவந்த ஒரு வெற்றி படம் "ஆஸாத்'. இது 1955-ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் பல படங்களைத் தயாரித்த பக்ஷிராஜா பிலிம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, ஹிந்தியில் எஸ்.எம்.எஸ்.நாயுடு என்ற பெயரில் தயாரித்து இயக்கிய படம். இதில் திலீப் குமார், மீனாகுமாரி, பிரான், ஓம் பிரகாஷ் ஆகியோர் நடித்தனர்.
சி.ராமச்சந்திரா இசை அமைத்தார். இது பெரிய வெற்றிப் படம்.
ஸ்ரீராமுலு நாயுடு தமிழில் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த "மலைக்கள்ளன்'”படத்தையும் ஹிந்தியில் அவரே தயாரித்து இயக்கினார். அதிலும் மீனாகுமாரி நடித்தார். ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பில் எப்பொழுதுமே நடிகர், நடிகைகளிடம் கூடுதலாக ஒரு சிலநாள்கள் கால்ஷீட் வாங்கி வைத்திருப்பார்கள். காரணம் என்னவென்றால், படப்பிடிப்பின்போது ஏதாவது சில காட்சிகளை எடுக்காமல் விடுபட்டுப் போய் இருந்தால், படப்பிடிப்பின் இறுதி நாள்களில் அவர்களை வைத்து விடுபட்ட காட்சிகளைத் திரும்பவும் எடுப்பதற்காகத்தான்.
அவ்வாறு எடுக்கும் காட்சிகளை அன்றே பிரிண்ட் போட்டு "ரஷ்' பார்த்து விடுவார்கள்.
அதேபோன்று "ஆஸாத்' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த நாள் "ரஷ்' போட்டு பார்த்தார்கள். இசையெல்லாம் இருக்காது; வெறும் காட்சிகள் மட்டுமே மௌனமாக ஓடிக்கொண்டிருக்கும்.
பொதுவாக இப்படி "ரஷ்' பார்க்கும்போது தயாரிப்பாளர், இயக்குநர் மட்டும்தான் பார்ப்பார்கள். அன்றைய தினம் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகையர் சூழ "ரஷ்' பார்த்தனர்.
முன்தினம் எடுக்கப்பட்ட காட்சிகள் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு கூக்குரல் ஒலித்தது. ""நாயுடு சார்... காட்சியை நிறுத்தச் சொல்லுங்கள், நிறுத்தச் சொல்லுங்கள்'' என்று.
யார் இப்படி கூப்பாடு போட்டது என்று பார்த்தால், கதாநாயகி மீனாகுமாரிதான். எல்லோருக்கும் ஒன்றுமே புரியவில்லை. "காட்சிகள் நன்றாகத்தானே நகர்ந்து கொண்டிருந்தன. பின் என்ன பிரச்னை?' எல்லோரும் மீனாகுமாரியை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்.
""நாயுடு சார், இந்தக் காட்சியை நீங்கள் படத்தில் சேர்க்கக் கூடாது. நான் இதே காட்சியை திரும்பவும் நடித்துக் கொடுக்கிறேன். தயவுசெய்து இந்தக் காட்சியை மட்டும் படத்தில் வைக்காதீர்கள். அது மட்டும் அல்ல; இந்தக் காட்சியை வெட்டி, நெகடிவ்வுடன் இணைத்து என்னிடம் கொடுத்து விடுங்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.
எல்லோரும் ஏன் மீனாகுமாரி இப்படி கேட்கிறார் என்று புரியாமல் பார்த்தார்கள்.
ஸ்ரீராமுலு நாயுடு ""அவருக்கு முதலில் ஒரு கோப்பை தேநீரோ அல்லது தண்ணீரோ கொடுங்கள்'' என்றார்.
பின்னர், ""இந்தக் காட்சியில் என்ன தவறு நடந்து இருக்கிறது?'' என்று மீனாகுமாரியிடம் கேட்டார். ""நீங்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை. நான்தான் தவறு செய்தேன். நான் மறைத்து இருக்க வேண்டும். நான்தான் மறந்து விட்டேன். அதனால் தயவு செய்து நீங்கள் இந்தக் காட்சியின் பிரிண்ட், நெகடிவ் எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்கள்'' என்று திரும்பவும் கூறினார்.
மற்றவர்கள் முன்னிலையிலும் காரணத்தைச் சொல்ல அவர் விரும்பவில்லை என்று நாயுடு புரிந்து கொண்டார்.
""சரி, தந்து விடுகிறேன்...'' என்று சொல்ல, எல்லோரும் எழுந்து விட்டார்கள். பின்னர், நாயுடு மீனா
குமாரியின் அறையில் சென்று கேட்க, உண்மை தெரிந்ததாம். அந்த உண்மை என்ன தெரியுமா?
மீனாகுமாரி இதுவரை இடது கை விரலை எந்தப் படத்திலும், எந்தக் காட்சியிலும் காண்பித்தது கிடையாதாம். தனக்கு இந்த மாதிரி ஒரு குறை இருக்கிறது என்று யாருக்கும், குறிப்பாக தனது ரசிகர்களுக்குத் தெரிய வேண்டாம் என்று அவர் நினைத்தாராம். அதனால் படப்பிடிப்பின் போது அழகாக இதை மறைத்து விடுவாராம்.
ஆனால் "ஆஸாத்' படப்பிடிப்பின் போது இதை மறந்து விட்டதால், அது படத்தில் தெரிந்து விட்டதாம். அதனால்தான் அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்தது.
உடனே நாயுடு ""இதுதானா விஷயம்?'' என்று தெரிந்து கொண்டு, ஒன்றும் பேசாமல் திரும்பவும் அதே காட்சியை எடுக்க ஏற்பாடு செய்தார். இதெல்லாம் நான் கேள்விப்பட்டதுதான் என்றாலும் உண்மை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்; மீனாகுமாரியை நேரில் சந்தித்த
போது அவரது இடது கை விரலை பார்த்து புரிந்து கொண்டேன்.
"வீரத் திருமகன்' படப்பிடிப்பைப் பார்க்க மீனாகுமாரி வந்து சென்ற பின்னர், தொடர்ந்து சில நாள்கள் எங்கள் படிப்பிடிப்பு நடந்து முடிந்தது.
ஏவி.மெய்யப்ப செட்டியாரும் அடுத்த நாள் நாங்கள் எடுத்த காட்சிகளை "ரஷ்' போட்டுப் பார்த்து விட்டு மிகவும் பாராட்டினார் என்று சொன்னார்கள்.
ஏவி.எம். நிறுவனத்தில் படப்
பிடிப்பு இருந்தால் அதற்கு ஏற்றவாறு என்னை அழைத்துப் போக வண்டி வரும். காரணம் நான் மாத சம்பளத்தில் ஏவி.எம். நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் நண்பகல் சுமார் 12 மணிக்கு நான் இருக்கும் அறைக்கு ஓர் உதவியாளர் வந்து ""உடனே படப்பிடிப்புத் தளத்துக்கு வாங்க...'' என்று அழைத்தார்.
நானும் என்னவோ ஏதோ என்று விரைந்து சென்றேன். சென்றவுடன் என்னை மேக்கப் போட்டுக்கொண்டு வரச் சொன்னார்கள். நானும் சரியென்று உடனே மேக்கப் போடத் தயாராக மேக்கப் அறைக்குச் சென்றேன். அங்கே...?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...