உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி!
தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இது இயக்குநர் மாறனின் முறை.


தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இது இயக்குநர் மாறனின் முறை. புதுமுக இயக்குநரான அவர் இயக்கிய "பச்சை விளக்கு' கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறந்த சமூக கருத்துள்ள படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பூட்டானில் நடைபெற்ற பூர்க் சர்வதேச பட விழாவிலும், சிறந்த சமூக படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தவிர இத்தாலியில் நடைபெற்ற புளோரன்ஸ் பட விழா, நியூயார்க் பட விழா, அமெரிக்காவின் அப்ரோ டைட் பட விழா, லண்டனில் நடைபெற்ற புதுமுக இயக்குநர்களுக்கான பட விழா என 11 நாட்டு திரைப்பட விழாக்களில் பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது. கிடைத்த கொண்டாட்டமான வரவேற்பு மாறனை மேலும் மலர்த்தியிருக்கிறது.
""நிறைய திரைப்பட விழாக்களில்
இந்தப் படம் விருது வாங்கி வந்திருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சமூக கருத்து என நிறைய விருதுகள்.... கொல்கத்தா விழாவில் சிறந்தப் படத்துக்கான விருது வாங்கியிருப்பதில் கூடுதல் சந்தோஷம். இந்தப் படத்தை அடுத்து நம் தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்க இருக்கிறேன். போன முறை ரஜினியின் "தர்பார்' படத்தோடு வெளியிட்டதால், சரி வர எங்கும் போய் சேரவில்லை. இந்த முறை பெரிய திட்டமிடலோடு வருகிறேன். நம் படம் இந்த விருதுகளுக்கெல்லாம் சரியானதா என்பதை தமிழ் ரசிகர்களுக்கு முன் வைத்து பார்க்க போகிறேன்.'' நம்பிக்கை கரம் கொடுத்து பேசத் தொடங்குகிறார் மாறன். குறும்பட அனுபவங்களை கொண்டு வெள்ளித்திரைக்கு வரும் மற்றொரு நம்பிக்கை படைப்பாளி.
ஒவ்வொரு நிமிடமும் சாலை விபத்தை தடுப்பது எப்படி? என்ற சிந்தனையை மையப்படுத்தியே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார் மாறன். துபையில் உள்ள அமெரிக்கன் பல்கலையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்தவர், அது குறித்த விழிப்புணர்வாக இந்தப் படத்தை எடுத்து வந்துள்ளார்.
எந்தெந்த அம்சங்கள் எல்லைகள் கடந்தும் இந்த சினிமா எடுத்துசென்றது....
இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்களின் வாழ்க்கை என எல்லாமே இருக்கிறது. அனுமானங்களைத் தாண்டியது வாழ்க்கை. "உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி' என்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாமே பெரிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கும்போது, நாமே அதற்கு சாட்சியாக இருப்போம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படம்.
இண்டிபெண்டன்ட் சினிமா...?
நிறுவனங்கள் சாராத சுதந்திரமான சினிமா. சின்ன சின்ன முயற்சிகளில் இருந்து
ஒரு சினிமா எடுத்திருக்கிறோம். கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்மான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் நடனத்தில் மட்டும் இல்லை. இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்ல வருகிற சினிமா. தயாரிப்பாளருக்காகப் பாட்டு வைத்தேன். காமெடி வைத்தேன் என்று இல்லாமல் கதைக்கு நேர்மையாக என்ன வைக்கிறோம்... அதுதான் முக்கியம் என்று நினைத்து ஒரு படத்தை எடுத்தோம். அதுதான் "பச்சை விளக்கு'. படத்தைப் பார்த்தப் பிறகு நாம் பேச நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கு முன்னாடி இப்படி வந்திருக்கிறது. அப்படி வந்திருக்கிறதென சொல்ல கூச்சமாக இருக்கிறது. ஓர் எளிமையான சினிமா. இந்த மாதிரி இண்டிபெண்டன்ட் முயற்சியை உலகத்தில் எல்லோரும் செய்து பார்த்து விட்டார்கள்.
சமூக விழிப்புணர்வு என வரும் போது, வணிக சந்தையில் நிற்க முடியாத சூழல் இங்கே இப்போதும் உண்டு....
அதை உணர்ந்தே இருக்கிறேன். எல்லோரும் செய்கிற சினிமாவை என்னால் செய்ய முடியாது. இந்த சினிமாவுக்காக நிறைய பயணம் செய்திருக்கிறேன். நிறைய புள்ளி விவரங்கள் திரட்டி வந்திருக்கிறேன். எந்த இடத்திலும் கற்பனைகளுக்கு இடம் கிடையாது. எல்லாப் பக்கங்களிலும் நிதர்சனங்களே நிறைந்து கிடக்கின்றன. வணிகத்தைத் தாண்டிய சினிமா இது. ஆனாலும், எல்லோரும் பார்த்து பாடம் கற்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. 34 சதவீத விபத்துகள் டூ-வீலர் ஓட்டுநர்களால் நிகழ்ந்திருக்கிறது. கார், ஜீப், டாக்சி, டெம்போ போன்ற வாகன விபத்துக்கள் 28 சதவீதமும், லாரிகளால் 14 சதவீதம். பஸ்களால் 11 சதவீத விபத்துகளும் நடந்திருக்கின்றன. விபத்து நடப்பதற்கு வாகன ஓட்டிகளே முக்கிய காரணமாக (96 சதவீதம்) இருக்கிறார்கள். சிக்னலை மதிக்காமல் செல்வது, குறுக்கே சென்று தவறுதலாகச் சென்று விட்டு திரும்புவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது போன்றவை விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன. இப்படி பல புள்ளி விவரங்களை திரட்டி வந்தேன். அதை வணிகமாக மாற்ற வேண்டிய வேலை தமிழ் ரசிகர்களின் கைகளில்தான் உள்ளது.
வெளிநாடுகளைப் போல் இங்கே இன்னும் சாலை விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை என்ற குறை பெரிதாக இருக்கிறது... என்னதான் இதற்கு தீர்வு, உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்...
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால்தான் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும். பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலைப் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வைப் பாடமாகப் பயிற்றுவித்து வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிடலாம்.
காதலும் ஒரு பகுதியாக கதையில்....
காதலும் அதி முக்கியமாக இருக்கிறது. விதி மீறிய பயணமும், வரம்பு மீறிய காதலும் வாழ்க்கையில் வந்து சேராது என்பதுதான் கரு. எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. கடந்த 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 38,585. இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால் இறந்தவர்கள் 20,000. இதே வருடங்களில்தான் காதலுக்காக, காதலின் பெயரால் கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர். காதல் தற்கொலைகளில், மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9,405 தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளிவிபரம். இந்த ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிறமாநிலங்கள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம். காதலும்தான் அவசியம் என இந்த மானிடர்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை. அதை இந்தக் கதையில் கடந்து போகிற சிலருக்கான அனுபவங்களும், துயரங்களும்தான் கதை. இதை இரண்டையும் இணைத்து ஒரே புள்ளியில் கொண்டு வந்திருக்கிறேன்.
நானே முக்கிய இடத்தில் நடிக்கிறேன். ஏற்கெனவே இயக்கிய குறும்பட அனு
பவம் இதில் எனக்கு கைக் கொடுத்தது.
அம்மணி, சூறையாடல் படங்களில் நடித்த ஸ்ரீமகேஷ், தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி என எல்லோரும் பரிச்சயமானவர்கள் உலகத்தில் பிறந்தவர்க ள் யாராக இருந்தாலும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையை பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே கதை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...