காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கணினி வேலை வேண்டாம் - காய்கறி போதும்!

பட்டதாரி இளைஞர் ஒருவர் தனக்குக் கிடைத்த கணினி துறை வேலையைவிட்டுவிட்டு காய்கறி வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 12:30 am

ஜெ


பட்டதாரி இளைஞர் ஒருவர் தனக்குக் கிடைத்த கணினி துறை வேலையைவிட்டுவிட்டு காய்கறி வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கும் இளைஞர் மத்தியில் கரூரை சேர்ந்த மகேஷ்வரன்(22) சொந்த தொழிலினால் முன்னேற்ற பாதையில்
பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

கணினி துறையில் கிடைத்த வேலைக்கு செல்லாததன் காரணம் என்ன அவரிடம் கேட்ட போது சொன்னார்:

""நான் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். இறுதி ஆண்டில் கேம்பஸ் இண்டர்வியூ வைத்தார்கள். அதில் இன்போசிஸ் நிறுவனத்தில் 22 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. நான் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தேன். அப்போது அங்குச் சமையலுக்குத் தேவையான காய்கறி ஆர்டர் செய்து வாங்குவார்கள். ஏன் நாம் அந்தத் தொழிலை செய்யக்கூடாது என்ற எண்ணம் உண்டானது. மேலும் என்னுடைய அப்பா பல ஆண்டுகளாக கரூரில் காய்கறி மொத்த வியாபாரம் தான் செய்து வருகிறார்.

அப்பாவிடம் தொழில் தொடர்பான விஷயங்களைக் கேட்டுக் கொள்வோம் என முடிவு செய்து வேலைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டேன். 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இணையவழியில் காய்கறி விற்பனையை ஆரம்பித்தேன். கரூரில் இருவர் காய்கறி விற்பனை தொடர்பான ஆப் வைத்திருந்தார்கள். அவர்களிடம் யோசனை கேட்டேன். தாராளமாகச் செய்யலாம் என்று சொன்னார்கள். அதற்குள் கரோனா பொது முடக்கம் வந்துவிட்டது.

கரூர் நகராட்சியில் இருந்து ஆன்லைனில் யார் காய்கறி விற்பனை செய்கிறார்கள் என்று தேடலில் இறங்கிய போது என்னுடைய தொலைபேசி எண்ணை கண்டறிந்து பேசினார்கள். தொடர்ந்து 300 ரூபாய்க்கு 9 கிலோ காய்கறி விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இந்த காய்கறிகள் நான்கு நபர்கள் உள்ள குடும்பத்திற்கு ஒரு வாரம் போதுமானது. அதாவது பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைகிழங்கு, புடலங்காய், கருணைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, பச்சை மிளகாய், தேங்காய் என வழங்கினேன். அப்போது பெரிய வெங்காயம் மட்டும் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையாக நேரம். ஆனாலும் சேவை நோக்கில் இதனை மக்களுக்கு வழங்கினேன்.

கரூரில் சுற்றுவட்டாரத்தில் 15 கி.மீ வரை ஆர்டர்கள் பெற்று டெலிவரி ஆள்களை நியமித்து வழங்கியது மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்றது. இப்போது பொது முடக்கம் முடிந்து ஆறு மாதம் ஆகிறது. முன்பை விட இப்போது ஆன்லைன் மூலம் காய்கறி வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. வாரந்தோறும் முந்நூறு நபர்களின் என்னிடம் காய்கறி வாங்குகிறார்கள்.

மேலும் சூப்பர் மார்க்கெட், கேன்டீன், ஹாஸ்டலுக்கும் காய்கறி வழங்கி வருகிறேன். கணினி துறையில் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதை விட அதிகமாகவே சம்பாதிக்கிறேன். கணினி துறை வேலையைப் பொருத்தவரை காலை 9 மணிக்கு சென்றால் மாலை 5 மணிக்கு தான் விடுவார்கள். நினைத்த நேரத்தில் லீவு எடுக்க முடியாது. இப்போது அப்படியில்லை. எனக்கான நேரம். எனக்கான தொழில். எப்போது வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம். வருங்காலத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றைத் தொடங்க வேண்டும்.

மொத்த விலையில் காய்கறிகளை கரூர் மக்களுக்குக் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. படித்த இளைஞர்கள் யார் வேலை தருவார்கள் என்பதை யோசிக்காமல் சொந்தத் தொழிலை தொடங்கிக் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றியடைலாம்'' என்கிறார் மகேஷ்வரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.