அக்கரைச் சீமையிலே..
ஜப்பான் நாட்டிற்குப் பெருமையூட்டி நிற்கும் மலை "பியூஜியாமா' ஜப்பானுக்குச் சொந்தமாக இந்த மலையை ஜப்பானியர்கள் "மரியாதைக்குரிய மலை' என்றே அழைக்கிறார்கள்.


ஜப்பான் நாட்டிற்குப் பெருமையூட்டி நிற்கும் மலை "பியூஜியாமா' ஜப்பானுக்குச் சொந்தமாக இந்த மலையை ஜப்பானியர்கள் "மரியாதைக்குரிய மலை' என்றே அழைக்கிறார்கள்.
பசிபிக் மகா சமுத்திரத்தின் மத்தியில் கொள்ளை அழகுடன் கம்பீரமாக நிற்கிறது பியூஜி மலை. அதைச் சுற்றிலும் நான்கு திசைக் காவலர்கள் போன்று நான்கு பெரிய தீவுகள் சூழ்ந்து நிற்கின்றன. அவற்றைச் சுற்றி சேவகர்கள், தாதிகள், போன்று ஆயிரக்கணக்கான சிறுசிறு தீவுகள் இருக்கின்றன. இவற்றின் இயற்கை அழகைக் காண கண்கள் ஆயிரம் வேண்டும்.
இந்த பியூஜி மலை போன்று அழகான மலை வேறு எங்கும் இல்லை என்று உலகமே ஒப்புக்கொண்டு விட்ட விஷயம். அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உயரமான மலையில் எப்போதும் எரிமலை பொங்கிக்கொண்டே இருக்கும். ஆனாலும் இம்மலை அவ்வளவு ரம்மியமானது, இதனைக்காணவே இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம்
தைக்கன் யோகுகாயமா என்கிற புகழ் பெற்ற ஜப்பானிய ஓவியர் இந்த பியூஜி மலையை தம் மனம் விரும்பிய படியெல்லாம் பல்வேறு தோற்றங்களிலும் பல்வேறு பருவ நிலைகளிலும் கண்ணைக் கவரும் வண்ணங்களில் அழியாத ஓவியங்களாக தீட்டி வைத்திருக்கிறார். இந்த ஓவியங்களை சுற்றுலாப் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.
அழகிய பியூஜி மலை ஜப்பானியர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து நிற்கிறது. ஜப்பானில் பியூஜியுடன் தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படாதவரே கிடையாது.
பிறக்கிற குழந்தைகளுக்குக்கூட அந்த மலையின் பெயர் இருக்கிறது. பியூஜி கடை, பியூஜி சோடா புட்டி, பியூஜி காபி, பியூஜி ஹோட்டல் என்று எங்கு பார்த்தாலும ஒரே பியூஜி மயம் தான்.
இந்த மலையைப் பார்க்கப் போகிற வழியில் மியானோஸிடா என்ற ஓர் ஊர் இருக்கிறது. அங்கே உள்ள பிரபலமான ஓட்டலின் பெயர் பியூஜியாமா. பியூஜிமலையின் பெயரைக் கொண்டு புகழ்பெற்று விளங்குகிறது. யாமாகுச்சி என்ற ஜப்பானியர் அந்த ஹோட்டலை ஏற்படுத்தினார். அதுவரை நினைவு கொள்ளாதவரே யாரும் இல்லையாம். ஏனென்றால் அந்த நாளில் அவர் முகத்தில் இருபுறமும் முழு நீளத்திற்கு நீண்ட கூர் மீசை வைத்திருந்தாராம். அதனால் பியூஜிமலையோடு அவரும் புகழ்பெற்ற ஒருவராகவே திகழ்ந்தார்.
பியூஜிமலை 12 ஆயிரத்து 500 அடி செங்குத்தாக வளர்ந்திருக்கிறது. ஆதிகாலத்தில் அது எரிமலையாக இருந்து பல ஆண்டு காலம் நெருப்பைக் கக்கிவிட்டு இப்போது ஓய்ந்திருக்கிறது. அப்போது அந்த மலையிலிருந்து வெளியான சாம்பல் இன்னும் கூட சரிவுகளில் படித்திருக்கின்றது.
ஜப்பானியர்கள் மரியாதைக்கான உபயோகிக்கும் வார்த்தை "ஸான்' என்பதாகும். இது நாம் உபயோகப்படுத்துகிற "ஸார்' என்று மரியாதையாக அழைக்கும் சொல் போன்றது. இதைப் பேரோடு சேர்த்து சொல்வார்கள். பியூஜியும் மிகமிக மரியாதைக்குரியது அல்லவா? அதையும் பியூஜிஸான் என்றே அழைக்கிறார்கள். இதைச் சரியாக மொழி பெயர்த்தால் பியூஜி அவர்கள் என்று பொருள்படும். இப்போது சொல்லுங்கள். பியூஜியாமா மலையை மரியைதைக்குரிய மலை என்று ஜப்பானியர்கள் அழைப்பது சரி தானே!
-டி.எம்.இரத்தினவேல்

உலகிலேயே பெரிய நதிகளில் ஒன்று அமேசான் . இது பல அதிசய உண்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
உலகில் கடலில் கலக்கப்படும் மொத்த நீரின் அளவில் அமேசான் நதியின் பங்கு 20 சதவீதம். 6,437 கி.மீ., நீளமுள்ள இந்த நதியில் பாயும் நீரின் அளவானது, உலகின் மற்ற 7 பெரிய நதிகளின் மொத்த நீரின் அளவை விட அதிகம். வட அமெரிக்காவில் பாயும் பிரம்மாண்டமான மிசிசிப்பியைப் போல பத்து மடங்கு பெரியது. தென்அமெரிக்க கண்டத்தின் 40 சதவீத நிலப்பரப்பு (70 லட்சம் சதுர கி.மீ.,) அமேசானின் வடிநிலமாக இருக்கிறது.
அமேசானுக்கு 1,100க்கும் மேற்பட்ட துணை நதிகள் உள்ளன. ரியோநெக்ரோ, கைனியா, மரோனா, ஜாபுரா, காகுடா, உகேயாலி, புருஸ், டாபஜோஸ், சிங்கு போன்றவை முக்கியமான துணை நதிகள். நீர் பாயும் கன அளவைப் பொருத்த வரை ரியோநெக்ரோ, அமேசானுக்கு அடுத்தபடியாக 2-ஆவது பெரிய நதியாக இருக்கிறது.
அமேசான் நதியை சுற்றி இருப்பதால் அமேசான் காடுகள் என பெயர் வந்தது. இதுவே உலகின் பெரிய மழைக்காடு. இதன் மொத்த பரப்பளவு 55 லட்சம் சதுர கி.மீ.
இதன் 60 சதவீத பகுதி பிரேசிலில் உள்ளது.பெரு 13 மற்றும் கொலம்பியா 10 சதவீதத்தை கொண்டுள்ளது. தவிர வெனிசுலா, பிரஞ்சு கயானா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய அளவில் உள்ளன.
உலகில் வாழும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த காடுகளில் உள்ளன. இதனால் உலகின் பெரிய ஆய்வு பிரதேசமாகவும் விளங்குகிறது.
பலவகையான மருத்துவ செடிகள், மூலிகைகளையும் கொண்டுள்ளது.
25 லட்சம் வகையான பூச்சியினங்கள், 10 ஆயிரம் தாவர வகைகள், 2 ஆயிரம் பறவைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது.
அமேசான் காடுகளிலும், நதியிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவேஉள்ளன.

ஆன்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு (அய்ற்ங்ப்ர்ல்ங் இஹய்ஹ்ர்ய்) )என அழைக்கப்படும் இது அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் இருக்கிறது.
இவற்றை நேரில் பார்த்தால் கண்களுக்குத் தெரிவது கற்பனையா இல்லை நிஜமா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அப்படி இயற்கையாகவே உருவான சில இடங்கள் உலகில் இருக்கின்றன. உலகில் அதிகம் படம் பிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது.
இங்கே எடுக்கப்படும் புகைப்படங்களைக் கணினிகளிலும், ஸ்மார்ட்போன்களிலும் வால்பேப்பர்களாக பார்க்க முடியும். நீரால் அரிக்கப்பட்டதால் இந்த அமைப்பு உருவாகியிருக்கிறது. குறுகிய பகுதிகளுக்குள்ளே மேலே இருந்து உள்ளே வரும் ஒளியால் பார்ப்பதற்கு அழகாக இது தோற்றமளிக்கிறது.
இந்த இடம் மணற்பாறை வகை பாறைகளால் உருவாகியிருக்கிறது. இங்கே இருக்கும் பாறைகளில் வரி வரியான வடிவங்களைப் பார்க்க முடியும். அமைதியான நிலப்பரப்பாகத் தோற்றமளிக்கும் இங்கே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
-விஷ்ணு

பேரீச்சம் பழம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை உண்ணக்கூடியது . எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்ட இந்தப் பேரீச்சம் பழத்தின் பூர்வீகம் ஈராக். எகிப்து, ஏமன், சவுதி அரேபியா, மொரோக்கோ, சூடான் என்று பல்வேறு மேலைநாடுகளில் இந்தப் பேரீச்சம் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகிலேயே அதிகளவில் பேரீச்சம் பழத்தை இறக்குமதி செய்யும் நாடு, இந்தியா.
அராபியப் பாலைவனத்தின் கற்பக விருட்சமாக மதிக்கப்படுவது பேரீச்சைமரம். "டேட்' எனப்படும் சுவைமிக்க பழத்தை தருகிறது இந்த ஈச்சமரம்.
பேரீச்சையின் வேர், பாலைவனத்தின் நிலத்தடியிலுள்ள நீர் வரை அவ்வளவு ஆழத்தில் போகும். இத்தகைய நிலத்தடி நீர் நிலைகள் தான் ஓயாஸிஸ் எனப்படும் பாலைவனச் சோலைகள். நன்றாக வளர்ந்த பேரீச்ச மரத்தின் உயரம் 20 மீட்டர்கள். நீண்ட அடி மரத்தின் உச்சியில் கொத்தாக இலைகள் இருக்கும். இலைகளுக்கு அடியில் கொத்துக் கொத்தாகப் பூக்கள் பூக்கும். இவை தான் பேரீச்சம் பழமாகும்.
பேரீச்சம் பழம் முதலில் சிவப்பாகவும் பிறகு கருஞ்சிவப்பாகவும் மாறும். தித்திப்பான சதைப் பற்றும் ஒரே ஒரு விதையும் கொண்டது பேரீச்சம் பழம். ஒரு பெரிய கிளையில் ஆயிரம் பேரீச்சம் பழங்களுக்கு மேல் இருக்கும். இது பாலைவன வாசிகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன் பழம் மற்றும் மரம் முழுவதுமே உபயோகமுடையது. கட்டடம் கட்ட இதன் மரம் பயன்படுகிறது. இலைகளைக் கூரை வேய, பாய் முடைய, கயிறு பின்ன பயன்படுகிறது. இதன் விதைகளை வறுத்த பானமாக பயன்படுத்தப்படுகிறது.
பேரீச்சம் பழங்களைக் கொதிவிட்டு வேகவைத்துச் செய்யும் பழக்கங்கள் எதுவும் நம் நாட்டில் இல்லை. மேலை நாடுகளில் அப்படிச் செய்யப்பட்டு பின்னர் நம்மால் இறக்குமதி செய்யப்படுகின்றன.
பேரீச்சம் பழங்களை அதிகம் இந்தியாவில் விளைவிக்க முடியாததற்குக் காரணம் நம் நாட்டில் நிலவும் பருவ நிலை மாற்றங்களே. இங்கு பேரீச்சம் காய்களை பக்குவப்படுத்தத் தேவையான வெப்பம் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் பேரீச்சம் பழங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
-மகாதேவன்

லண்டனில் இந்திய அலுவலக நூல் நிலையத்தில் 1840-இல் வீரமாமுனிவர் தம் கைப்பட எழுதிய தேம்பாவணி காவியத்தை அ.சிதம்பரநாதன் பார்த்தார். அதை 1858-இல் வால்டர் எலியட் என்பவர் இந்தியாவிலிருந்து வாங்கி அனுப்பினார் என்று அறிய முடிகிறது. அதில் காவிரிபூம்பட்டணத்து தம்புசாமி என்பவருடைய சொந்தக் கையெழுத்து காணப்படுகிறது.
1844-இல் இவ்வேடு தம்புசாமியால் வால்டர் எலியட்டுக்கு அளிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. இந்நூல் நிலையத்தில் 4 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் தென்னிந்திய மொழிகள் பற்றி உள்ளன.
அதில் 20 தமிழ்மொழி பற்றிய பிரதிகள் ஆகும்.
அங்குள்ள தமிழ்ப்புத்தக விவர அட்டவணையில் தேவநேயப்பாவாணரின் ஒப்பியல் மொழி நூல், பயண நூல்களின் தந்தை ஏ.கே.செட்டியாரின் "அமெரிக்கா', பாரதிதாசன் கவிதைகள், ஒளவை துரைசாமிப் பிள்ளையின் "சிலப்பதிகார ஆராய்ச்சி' அண்ணாமலைப்பல்கலைக்கழகம் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சைவ சித்தாந்த சமாஜம் ஆகியவற்றின் வெளியீடுகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. "தமிழர்கள் சரித்திரம்' என்னும் நூலும் இங்கு இடம் பெற்றுள்ளது.
(ந.வேலுசாமி எழுதிய "அ.சிதம்பரநாத செட்டியார்' நூலிலிருந்து)
-தங்கசங்கரபாண்டியன்

ஆங்கில எழுத்தாளர் மோர்கன் ராபர்ட்சன் எழுதிய நவீனம்: டைட்டானிக் கப்பல் விபத்து!
ஆடம்பரமான சொகுசு கப்பல் டைட்டானிக்கின் முதல் பயணம் அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்குகிறது. எந்த நிலையிலும் டைட்டானிக் கப்பல் மூழ்காது என்கிற பெருமிதம் கப்பலை வடிவமைத்தவர்களின் கனவு. ஆனால் கப்பல் பனிமலையில் மோதி விபத்துக்கு உள்ளாகி நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். நவீனத்தின் கரு இது.
15-4-1912-இல் இங்கிலாந்தின் சொகுசுக் கப்பல் 862 அடி நீள டைட்டானிக் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஆனால் நவீனத்தை எழுத்தாளர் மோர்கன் விபத்துக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளார்.
புதினத்தில் சொல்லப்பட்டது போலவே விபத்தும் நடந்தது. நிஜ கப்பலில் 2200 பேர் பயணம் மேற்கொண்டதில் 1500 பேர் பலியாயினர்.
எழுத்தாளரின் கற்பனை வியப்பூட்டுகிறது. 1985-இல் இரண்டாக உடைந்து 1300 அடி ஆழத்தில் கிடந்த டைட்டானிக்கை ஆளில்லாத நீர் மூழ்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
-முக்கிமலை நஞ்சன்

சீனாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சச பறவையின் புதைப்படிவம் ஒன்று கனான் என்ற பகுதியில் கிடைத்துள்ளது. படிமத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தப் பறவைக்கு "பெய்பிலாங்' என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பறவை மிகப்பெரிய பெரிய அளவில் கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சச பழங்கால முட்டைகளின் படிமங்கள் ஏராளமாக கிடைத்தன. அந்த முட்டைகள் இந்த பறவையினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...